You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மோதியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இந்திய பிரதமர் நரேந்திர மோதியை இன்று (திங்கள்கிழமை) தான் சந்தித்த போது நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை சமர்பித்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரதமர் மோடியை இன்று மாலையில் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், " ஜல்லிக்கட்டு சிறப்பான முறையில் நடைபெற உதவி புரிந்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன். வர்தா புயல் நிவாரண தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டுள்ளேன்'' என்று தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.மீனவர்களின் சிறப்பு திட்டத்திற்காக 1650 கோடி நிதி ஒதுக்க வேண்டும் மற்றும் வறட்சி நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் தான் வலியுறுத்தியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளரிகளிடம் தெரிவித்தார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற நிதி ஓதுக்க வேண்டும், தேனியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் வைத்துள்ளேன்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். அதே போல், கச்சத்தீவு மீன்பிடி உரிமையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து டெல்லி சென்றார். தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு தற்போது தான் முதல்முறையாக டெல்லி சென்று பிரதமரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்