கழிப்பறை கட்டித்தராத கணவருடன் வாழ மறுத்த பெண்ணுக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்

வீட்டில் கழிப்பறை கட்டித்தராத கணவரை விவாகரத்து செய்ய ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

இப்பெண்ணிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தனது இயற்கை உபாதைகளுக்குத் திறந்தவெளி பகுதிகளை பயன்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

குடும்ப வன்முறை உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமே இந்திய சட்டம் விவாகரத்திற்கு அனுமதியளிக்கிறது.

``இயற்கை உபாதைகளுக்குத் திறந்தவெளியை பயன்படுத்தக் கட்டாயப்படுத்துவது, ஒரு விதமான சித்திரவதையே`` என அப்பெண்ணின் வழக்கறிஞர் ஏஃஎப்பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

இப்பெண் கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

``புகையிலைக்கும், மதுவுக்கும் செல்போன்களுக்கும் அதிகளவு பணத்தை செலவழிக்கும் நாம், குடும்ப மரியாதையைக் காப்பாற்ற கழிப்பறை கட்ட விரும்புவதில்லை`` என தனது தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் கூறியுள்ளது.

கழிவறை இல்லாததால் இயற்கை உபாதைகளுக்குத் திறந்தவெளி பகுதியினை பயன்படுத்தும் கிராமப்புற பெண்கள், சூரியன் மறைந்து இருள் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் எனவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இயற்கை உபாதைகளுக்குத் திறந்த வெளிப்பகுதிகளை பயன்படுத்துவது கிராமப்புற பகுதிகளில் வழக்கமான ஒன்றாக உள்ளது. 2019-க்குள் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்ட வேண்டும் என அரசு இலக்கு வைத்துள்ளது.

இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் கழிப்பறைகள் பயன்படுத்துவதில்லை என கடந்த ஆண்டு யூனிசெஃப் தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :