You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக சட்டப் பேரவையில் ஜெயலலிதா படத்தை திறக்க எதிர்ப்பு
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோதி திறந்துவைக்க தமிழக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தனது டெல்லி பயணத்தின் போது ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்து வைக்க வருமாறு பிரதமருக்கு, முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் ஜெயலலிதாவின் படம் திறந்துவைக்கப்பட்டால், அது இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை அளிப்பதாகும் என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''ஜெயலலிதாவின் படம் சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டால், ஆட்டோ சங்கர் மற்றும் வீரப்பனின் படங்களையும் திறக்கவேண்டிய நிலை வந்துவிடும். நீதிமன்றத்தால் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர் படத்தை சட்டமன்றத்தில் திறப்பது மோசமான உதாரணம்,'' என்றார்.
இதே விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்திய பா.ம.க தலைவர் ராமதாஸ், '' தமிழக சட்டப்பேரவைக் கூடத்தில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், காமராஜர், இராஜாஜி, அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இணையாக ஜெயலலிதாவின் படத்தை திறப்பது அந்த தலைவர்களுக்கு செய்யப்படும் அவமரியாதை ஆகும். இந்த முயற்சிக்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோதி துணைப்போகக்கூடாது'' என்றார்.
அவர் மேலும் அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் படத்தை திறக்க தடை கோரி பா.ம.க வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னதாவே, அரசு சட்டமன்றத்தில் படத்தை திறக்க வேண்டும் என்று எண்ணுவது சட்டவிரோதம் என்று கூறியுள்ளார்.
திமுகவின் செயல்தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு வரும்படி பிரதமரை அழைத்து இருப்பதாக தெரிவித்தார். ''இருவரும் மாறி மாறி தெரிவித்து இருக்கிறார்களே தவிர, பிரதமர் மோடி அவர்கள் இதற்காக நேரம் ஒதுக்கினால் மட்டுமே இவையெல்லாம் உண்மையா, பொய்யா என்பது தெரிய வரும். அவர் இங்கு வந்து புகைப்படத்தை திறந்து வைப்பதாக தெரிவித்த பிறகே அதுபற்றி கருத்து சொல்ல முடியும்,'' என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்