You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காதல்... திருமணம்... கசப்பு... திருப்பம்...
"பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, அங்கு செல்வது எளிது, திரும்புவது கடினம். இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய பெண்கள் பாகிஸ்தான் சிறப்பான நாடு என்று நினைக்கிறார்கள், ஆனால் "பட்டு உணர்ந்த" நான் சொல்கிறேன், அங்கு ஆண்களுக்கே பாதுகாப்பில்லை, பெண்களின் நிலை மிகவும் மோசம்" என்று சொல்கிறார் உஜ்மா.
இந்தியரான உஜ்மா, பாகிஸ்தான் சென்றிருந்தபோது, அங்கு பாகிஸ்தான் குடிமகனான தாஹிர் அலியுடன் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு திருமணம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். அங்கு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறும் உஜ்மா, இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.
தூதரகத்தில் அடைக்கலம் புகுந்த உஜ்மாவுக்கு உதவியாக சட்டரீதியான போராட்டம் நடத்தி அவரை தாயகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர் இந்திய தூதரக அதிகாரிகள்.
இந்தியா வந்தடைந்த உஜ்மா, முதலில் கண்ணீர் மல்க இந்திய மண்ணில் தொட்டுக் கும்பிட்டார். இந்த மாதத் துவக்கத்தில் சுற்றுலாவுக்காக பாகிஸ்தான் சென்றதாக உஜ்மா கூறுகிறார்.
உஜ்மா, தாஹிர் அலியை மலேஷியாவில் முதலில் சந்தித்த்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில், பாகிஸ்தான் வந்த உஜ்மாவை இந்த மாதம் மூன்றாம் தேதியன்று தாஹிர் அலி, வலுக்கட்டாயமாக திருமணம் செய்திருக்கிறார்.
இந்திய தூதரகத்தின் உதவியோடு, பாகிஸ்தான் நீதிமன்றத்தில் மே 12ஆம் தேதியன்று ஆஜரான உஜ்மா, தாஹிர் அலி துப்பாக்கி முனையில் வலுக்கட்டாயமாக திருமணம் செய்ததாகவும், தனது விசா உட்பட அனைத்து பயண ஆவணங்களையும் தாஹிரின் குடும்பத்தினர் பறிமுதல் செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
தன்னை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்குமாறு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த உஜ்மா, தான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்யப்படுவதாகவும், திருமண ஒப்பந்தத்தில் வலுக்கட்டாயமாக கையொப்பம் பெறப்பட்டதாகவும் முறையிட்டார்.
ஆனால் உஜ்மாவின் குற்றச்சாட்டுகளை மறுத்த தாஹிர் அலி, தலாக் ஆகாததால், உஜ்மா தனது மனைவிதான் என்று வலியுறுத்தினார். முதல் கணவர் மூலம் தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாக கூறும் உஜ்மா, இந்தியாவில் தனது குழந்தை தனியாக கஷ்டப்படுவதாகவும் கூறினார்.
வழக்கை விசாரித்து, உஜ்மாவுக்கு சாதகமாக புதன்கிழமையன்று தீர்ப்பளித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், இந்தியா செல்வதற்கான அனுமதியும் வழங்கியது.
வியாழக்கிழமையன்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த உஜ்மா, தனக்கு நிகழ்ந்த பிரச்சனைகளை அவரிடம் எடுத்துரைத்தார்.
"நீ இந்தியாவின் மகள், உன்னை பிரச்சனையில் விட்டுவிடமாட்டோம், என்று பாகிஸ்தானில் இருந்தபோது தினமும் சுஷ்மா ஸ்வராஜ் தனக்கு ஆறுதல் கூறுவார் என்று கூறும் உஜ்மா, பாகிஸ்தானில் பல பெண்கள் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள், நான் பாகிஸ்தானை சுற்றிப் பார்க்கச் சென்றேன், துப்பாக்கி முனையில் திருமணம் செய்துவிட்டார்கள்" என்று சொல்கிறார்.
"இந்திய தூதரகத்தில் எனது பிரச்சனையை சொன்னதும், அவர்கள் எனக்கு அடைக்கலம் கொடுத்தார்கள், ஜே.பி.சிங் சார் எனக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார், சுஷ்மா மேடமும் என்னை சொந்த மகளைப் போல நினைத்து ஆறுதல் சொன்னார். நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூட சுஷ்மா மேடம் எனக்கு போன் மூலம் ஆறுதலும், நம்பிக்கையும் அளித்தார். இவர்கள் அனைவருக்கும், இந்திய அரசுக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்" என்று உஜ்மா நன்றி தெரிவித்துள்ளார்.
"இந்தியப் பெண் என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன், மலேஷியாவில் இருந்திருக்கிறேன், பாகிஸ்தானை பார்த்துவிட்டேன், இந்தியாவில் வாழ்ந்திருக்கிறேன், இந்தியாவிற்கு நிகராக வேறு எந்த நாடும் இல்லை" என்று கூறும் உஜ்மா, பிரதமர் நரேந்திர மோதிக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்