குல்புஷன் ஜாதவ் வழக்கு: ஐசிஜே தீர்ப்பை புறக்கணித்த/ஏற்றுக் கொண்ட சில முன்னுதாரணங்கள்
தனது நாட்டு குடிமகனான குல்புஷன் ஜாதவை, மற்றொரு நாடு (பாகிஸ்தான்) தூக்கிலிடுவதற்கு எதிராக ICJ எனப்படும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டு அது தொடர்பாக தற்போது தீர்ப்பு வந்துள்ள நிலையில், இது போன்ற மூன்று அரிதான வழக்குகள் சர்வதேச நீதிமன்றதுக்கு வந்ததையும், இவ்வழக்குகளில் வெளிவந்த தீர்ப்புகள் கடைபிடிக்கப்பட்டனவா என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கவுக்கு எதிராக பராகுவே
தன் நாட்டு குடிமகனான ஏஞ்சல் பிரான்ஸிஸ்கோ பிரெர்டுவை தூக்கிலிட அமெரிக்க உத்தரவிட்டதற்கு எதிராக, கடந்த 1988-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சர்வதேச நீதிமன்றத்தை பராகுவே அணுகியது.
இந்த வழக்கின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், மேற்கூறிய நபர் தூக்கிலிடப்பட திட்டமிடப்பட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் வரை, பிரெர்டு தூக்கிலிடுவதை அமெரிக்கா தாமதிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால், தான் திட்டமிட்டப்படி ஏப்ரல் 14-ஆம் தேதியன்று தூக்கு தண்டனையை அமெரிக்கா நிறைவேற்றியது. பின்னர், இந்த வழக்கை பராகுவே திரும்பப் பெற்றது.

பட மூலாதாரம், INTERNATIONAL COURT OF JUSTICE
லாகிராண்ட் வழக்கு ( அமெரிக்காவுக்கு எதிராக ஜெர்மனி)
அமெரிக்க அதிகாரிகளிடம் தன் நாட்டை சேர்ந்த வால்டர் பெர்ன்ஹார்ட் லாகிராண்ட்டுக்கு கருணை வழங்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, சர்வதேச நீதிமன்றத்தை ஜெர்மனி அணுகியது.
கடந்த 1982-ஆம் ஆண்டு, ஒரு வங்கியை கொள்ளையடிக்க முயற்சி செய்த போது, ஒரு நபரை கொன்றும் மற்றொரு பெண்ணை காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லாகிராண்ட் மற்றும் அவரது சகோதரருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், லாகிராண்டுக்கு அவரது நாட்டு தூதரக சேவைகளை அணுகும் உரிமை இருப்பது கூட அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.
இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை லாகிராண்ட் தூக்கிலிடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், திட்டமிட்டபடி அமெரிக்கா தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது.
அவேனா வழக்கு ( அமெரிக்காவுக்கு எதிராக மெக்சிகோ)
வியன்னா ஒப்பந்தத்தை மீறி, 54 மெக்சிகோ நாட்டவரை கைது செய்து அவர்களுக்கு மெக்சிகோ தூதரகத்தை அணுகும் உரிமை குறித்து கூட தெரிவிக்காமல் மரண தண்டனை வழங்கப்பட்டதாக அமெரிக்கா மீது குற்றம்சாட்டி சர்வதேச நீதிமன்றத்தை மெக்சிகோ அணுகியது.
இந்த வழக்கில் தூதரக சேவையை பெறுவது முக்கியமான அம்சமாக இருந்தது.
இறுதியாக, இந்த வழக்கில் தொடர்புடைய 51 பேர் தொடர்பாக வியன்னா மாநாட்டு ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்த சர்வதேச நீதிமன்றம், எஞ்சியுள்ள 3 பேர் விஷயத்தில் தனது முடிவை அமெரிக்கா மறுஆய்வு செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டது.
மெக்சிகோ நாட்டவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவர்கள் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் மறுஆய்வு செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
இது குறித்த பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












