கோடநாடு கொலை வழக்கில் தேடப்பட்டவர் விபத்தில் மரணம்

கோடநாடு கொலைவழக்கில் தேடப்பட்டவர் விபத்தில் மரணம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் பிரதானமாக தேடப்பட்ட நபர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட், நீலகிரி மலையில் அமைந்திருக்கிறது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் பரந்துகிடக்கும் இந்த தோட்டத்தில், ஜெயலலிதா பல மாதங்கள் வந்து ஓய்வெடுப்பது வழக்கம்..

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதியன்று, அந்த எஸ்டேட்டின் வாயிற்காவலர்களில் ஒருவரான நேபாளத்தைச் சேர்ந்த ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார். எஸ்டேட்டிற்குள் கொள்ளையர்கள் புக முயற்சித்தபோது இந்த கொலை நடந்ததாக கருதப்பட்டது.

கோடநாடு கொலைவழக்கில் தேடப்பட்டவர் விபத்தில் மரணம்

பட மூலாதாரம், Getty Images

குற்றவாளிகளைக் கைதுசெய்ய சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கில் எடப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுனரான கனகராஜ் என்பவரைக் காவல்துறை தேடிவந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று இரவு சேலம் - உளுந்தூர்ப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கனகராஜ் மீது பெங்களூரிலிருந்து ஆத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று மோதியது.

ஆத்தூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட கனகராஜ், வழியிலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுனர் தற்போது விசாரிக்கப்பட்டுவருகிறார்.

கோடநாடு கொலைவழக்கில் ஏற்கனவே பலரை பிடித்துவந்து காவல்துறை விசாரணை நடத்திவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கனகராஜ் தேடப்பட்டுவந்தார். இவர் ஏற்கனவே போயஸ் தோட்டத்தில் பணியாற்றி, பிறகு பணிநீக்கம் செய்யப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலை ஒன்றரை மணியளவில் நடந்த கொள்ளை முயற்சியில் ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டதோடு, அவரது உறவினரான கிருஷ்ண பகதூர் என்பவரும் காயமடைந்தார்.

இந்தக் கொள்ளை முயற்சியில் என்ன திருடப்பட்டது என்ற தகவல்கள் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

பிற செய்திகள்

இதுவும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்