ஜெயலலிதா மரணம்: நீதி விசாரணை கோரி ஓ.பி.எஸ். அணி உண்ணாவிரதம்
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரி, தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.கவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தார்.
ஆனால், அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்றும், இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டுமென்றும் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.கவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ராஜரத்தினம் மைதானம் அருகில் ஓ. பன்னீர்செல்வம் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்திருக்கிறார். அவருடன் அவைத் தலைவர் மதுசூதனன், பி.எச். பாண்டியன் ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்துள்ளனர்.
இவர்களுடன் பெரும் எண்ணிக்கையிலான ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு அணியினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்துள்ளனர். இங்கு வரும் அ.தி.மு.க. தொண்டர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களையும் ஓ.பி.எஸ் அணியினர் பதிவுசெய்து வருகின்றனர்.

சென்னையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக, எழும்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை, தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டது. அவர் செப்டம்பர் 22-ஆம் தேதி மயங்கிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், டிசம்பர் 4-ஆம் தேதியன்று ஏற்பட்ட இதயத் துடிப்பு முடக்கத்தால் மரணமடைந்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












