இந்தியாவை உலுக்கிய நொய்டா தொடர் கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியா?
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தலைநகர் டெல்லியின் அருகே உள்ள செல்வந்தர்கள் நிரம்பிய புறநகர் பகுதியான நொய்டாவில் குறைந்தது 19 குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் நடைபெற்ற தொடர் கொலைகள் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

பட மூலாதாரம், AFP
மொனீந்தர் சிங் பந்தேர் என்ற தொழில் அதிபரின் வீட்டில் நடந்த இந்தக் கொலைகள் தொடர்பாக மொனீந்தர் சிங்கும், அவரது வேலையாளான சுரீந்தர் கோலியும் கைது செய்யப்பட்டார்கள்.
சில வழக்குகளில் கோலிக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது, மொனீந்தர் சிங் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

பட மூலாதாரம், RAM DEVINENI
இந்நிலையில், பல டிஜிட்டல் தளங்களில் செவ்வாய்க்கிழமையன்று வெளியான ஒரு புதிய ஆவணப்படமான 'கர்மா கொலைகள்' என்ற ஆவணப்படம் பந்தேர் குற்றவாளியாக இருக்க முடியாது என்று வாதிடுகிறது.
கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தனது உறவினர்களை சந்திக்க இந்தியாவுக்கு அமெரிக்க வாழ் இந்தியரான ராம் தேவினேனீ வருகை புரிந்த போது, செய்தி தொலைக்காட்சிகளில் இக்கொலைகள் குறித்த விஷயம் பெரிதாக அலசப்பட்டது.
நிதாரி குற்றங்கள் குறித்து நீண்ட அலசல் மேற்கொண்ட தேவினேனீ
இதனை கவனித்த ராம் தேவினேனீ , நிதாரி குற்றங்கள் குறித்த பல அம்சங்களை மூன்று வருடத்துக்கு மேலாக விசாரித்து வந்தார்.
நியூ யார்க்கில் இருந்து பிபிசியிடம் தொலைபேசியில் உரையாடிய போது அவர் கூறியதாவது, ''இது குறித்த பல கதைகளை நான் தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகள் மற்றும் நாளிதழ்களில் பார்த்த போது, இது நம்ப முடியாததாக இருந்தது. ஓவ்வொரு நாளும் இது குறித்த புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. ஓவ்வொரு கண்டுபிடிப்பும் முந்தைய கண்டுபிடிப்பை விட மாறுபட்டதாக இருந்தது'' என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், NINAD AUNDHKAR
சம்பவம் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து அருகாமையில் உள்ள நிதாரி சேரிப்பகுதியில் பல குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக தாங்கள் அளித்த பல புகார்களை போலீசார் புறக்கணித்து விட்டதாக இக்குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில், கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட பிறகு, பல சேரிவாழ் குழந்தைகளை இனிப்பு மற்றும் மிட்டாய் தருவதாக ஆசை காட்டி வீட்டுக்கு கோலி வரவழைத்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் கோபமடைந்த மக்கள் கும்பல் போலீசாரை தாக்கி குற்றம் நடந்த இடத்தை கைப்பற்றியது.
கோலி நரமாமிசம் உண்டாரா?
தான் கைது செய்யப்பட்ட ஆரம்ப நாட்களில், விசாரணை அதிகாரிகளிடம் தான் மூன்று வயதே ஆன குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகவும், சடலங்களுடன் உடலுறவு கொண்டதாகவும், நரமாமிசம் உண்பது ஆண்மைக்குறைவை குணப்படுத்தும் என்பதை நம்பி ஒரு முறை இறந்த உடலை சமைத்து உண்ண முயற்சித்ததாகவும் ஒப்புக் கொண்டார். பின்னர் நடந்த விசாரணையில், தன்னை சித்திரவதை செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக தனது முந்தைய வாக்குமூலத்திலிருந்து கோலி தடம் மாறினார்.

பட மூலாதாரம், NINAD AUNDHKAR
குற்றம் சாட்டப்பட்ட முதல் நாளில் இருந்து, தொழில் அதிபர் பந்தேர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுத்து வந்தாலும், அவரை ஒரு அரக்கனைப் போல ஊடகங்கள் தூற்றவும், சித்தரிக்கவும் செய்தன.
சினிமா வில்லன் போல சித்தரிக்கப்பட்ட பந்தேர்
இது குறித்து கருத்து தெரிவித்த தேவினேனீ, ''தாடி, மீசையுடன் தோன்றும் பந்தேர் ஒரு பாலிவுட் திரைப்பட வில்லன் நடிகர் போல காட்சியளிக்கிறார். மேலும், அவர் மதுவருந்துவது, விலை மாதர்களை வீட்டுக்கு வரவழைப்பது மற்றும் அவரது மன அழுத்தம் போன்றவை குறித்து வெளியான செய்திகள், அவர் மீது ஒரு தலைகீழ் இன வெறியை தூண்டியுள்ளது. அதாவது, பணக்காரரான பந்தேர் மீது பொறாமை கொண்ட பலர் அவரை வீழ்த்த வேண்டும் என்றும் விரும்பினர்'' என்று தேவினேனீ தெரிவித்தார்.
இறந்த குழந்தைகளின் உடல் பாகங்களும், துணிமணிகளும் அவரது வீட்டுக்கு அருகேயுள்ள ஒரு சாக்கடையில் வீசப்பட்டன. அந்த இடம் இந்தியாவின் 'பயங்கரங்கள் நிரம்பிய வீடு' என அழைக்கப்பட்டது என்று தேவினேனீ மேலும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP
சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய தேவினேனீ
இது குறித்து முழுவதையும் அறிய வேண்டும் என்று ஆர்வம் கொண்ட தேவினேனீ நிதாரியில் பல மாதங்கள் செலவழித்தார். குற்றம் நடந்த இடத்துக்கு சென்று போலீசார், வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்த அவர் , அனைவரின் கூற்றுகளையும் கேட்டறிந்தார்.
தனது சந்திப்புகள் குறித்து தேவினேனீ விவரிக்கையில், ''கடந்த 2012 அக்டோபரில் காஸியாபாத் நீதிமன்றத்தில் கோலி மற்றும் பந்தேரை நான் முதல் முறையாக சந்தித்தேன். இவர்களை அணுகுவது எளிதாக இருப்பதை எண்ணி நான் வியந்தேன்'' என்று கூறினார்.

பட மூலாதாரம், NINAD AUNDHKAR
ஓவ்வொரு நாளும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். ஒரு நாள் பந்தேரின் வழக்கறிஞரை அணுகிய தேவினேனீ , தான் பந்தேரை சந்தித்து பேச முடியுமா என்று வினவியுள்ளார்.
''நான் பந்தேரை சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது, கோலியும் எங்களது உரையாடலில் கலந்து கொண்டார். நாங்கள் அந்த இடத்தில் நின்ற படி நடந்த கொலைகள் குறித்து உரையாடினோம். இது ஒரு கனவு போல தோன்றியது'' என்று தெரிவித்த தேவினேனீ, கோலியுடனான சந்திப்பு வியப்பு மற்றும் கலக்கத்தை தருவதாக இருந்ததாக குறிப்பிட்டார்.
படிக்காவிட்டாலும், கோலி புத்திசாலியாக திகழ்ந்தார்
''குற்றம் செய்தது குறித்து கோலி எப்போதும் மறுக்கவில்லை. அவர் எப்போதும் யார் மீதோ பழி சுமத்தி கொண்டிருந்தார். அருகாமை பகுதியில் இருந்த ஒரு மருத்துவர் உடல் உறுப்புகள் மோசடி தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவர் இதனை செய்திருக்கலாம் என்று கோலி பழி சுமத்தினார் '' என்று கூறிய தேவினேனீ, தான் பார்த்ததிலேயே ஒரு தந்திரம் மிக்க மற்றும் புத்திசாலியான நபர் கோலி என்று குறிப்பிட்டார்.
பெரிதும் கல்வியறிவு இல்லாத, ஆங்கிலம் அறியாத கோலி, இந்தியாவின் சிக்கலான சட்ட அமைப்பு குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளார். அதன் மூலம் தான் எவ்வாறு தப்பிக்கலாம் என்றும் கணக்கிட்டுள்ளார் என்று தேவினேனீ தெரிவித்தார்.
அதே வேளையில், பந்தேர் குறித்து கருத்து தெரிவித்த தேவினேனீ , அவர் ஒரு சராசரியான அமைதியான , இனிமையும், பண்பும் கொண்ட தாத்தாவை போல இருந்தார் என்று கூறினார்.

பட மூலாதாரம், NINAD AUNDHKAR
'குற்றம் சாட்டப்பட்ட பந்தேர் அப்பாவியாக இருக்கக்கூடும்'
''நடந்த குற்றங்களில் தனது பங்கு இருந்ததாக கூறப்படுவதை பந்தேர் மறுத்தார். ஆதாரங்களை ஆராயும்படி அவர் என்னிடம் கூறினார்'' பந்தேர் குறித்து தேவினேனீ மேலும் கூறுகையில், ''அவர் கோலியை முழுமையாக நம்பினார். தனக்கும், சில விலை மாதர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து தனது மனைவியிடம் தெரியாதபடி கோலி பார்த்துக் கொண்டதால், கோலி மீது அதிகப்படியான அன்பை பந்தேர் கொண்டிருந்தார்'' என்று பந்தேர் மற்றும் கோலி இடையேயான புரிதல் குறித்து தேவினேனீ எடுத்துரைத்தார்.

பட மூலாதாரம், Image copyrightNINAD AUNDHKAR
''நடந்த கொலைகளில் கோலியின் பங்கு மட்டுமே உள்ளது. அவர் தான் கொலைகளை தனியாகச் செய்தார். இதில் பந்தேரின் பங்கு எதுவுமில்லை'' என்று தேவினேனீ நம்பிக்கை தெரிவித்தார்.

பட மூலாதாரம், RAM DEVINENI
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கருத்து
ஆனால், இந்த வாதத்தை பெரும்பாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நம்பவில்லை. குற்றம் நடந்த இத்தனை ஆண்டுகளாக, பந்தேரை தூக்கிலிட்டால் தான் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், RAM DEVINENI
''அவர்கள் யாருக்கும் கோலி குறித்து எந்த கவலையுமில்லை'' என்று தெரிவித்த தேவினேனீ, ''அவர்களின் முழுக் கவனமும் பந்தேர் மீது தான் உள்ளது. அவர்களை போலவே கோலியும் ஒரு ஏழை. கோலி அவர்களில் ஒருவர். ஆனால், பந்தேர் ஒரு பணக்காரர், கொலை பழியிலிருந்து அவர் தப்பி விடுவார் என்று கருதுகின்றனர்'' என தேவினேனீ மேலும் விவரித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க: பிபிசி தமிழ் பேஸ்புக்
ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யூ ட்யூபில் காண ; பிபிசி தமிழ் யு டியூப்












