குணமானவர்களின் விந்தணுவில் 9 மாதங்கள் ஒளிந்திருக்கும் இபோலா

பட மூலாதாரம்,
மேற்கு ஆபிரிக்காவில் இபோலா நோயினால் பாதிக்கபட்டு- பின்னர் குணமடைந்துள்ளவர்களில் பாலியல் உறவில் அதிக நாட்டமுள்ள ஆண்கள் பல மாதங்களுக்கு பாதுகாப்பான பாலுறவு நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான பாதுகாப்பான பாலுறவு வழிகள் மூலமே தொடர்ந்து நோய் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இபோலா நோய் குணமாகிய பின்னரும் குறைந்தது 9 மாதங்களுக்கு அந்த வைரஸ் ஆண்களின் உடலில் தங்கியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட, இது மிகவும் நீண்டகாலம் என்று கூறப்படுகின்றது.
சியேராலியோனில் இபோலா நோயிலிருந்து குணமடைந்து வந்துள்ள சுமார் 100 ஆண்களின் விந்தணு மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆய்வுசெய்துள்ளனர்.
அவர்களில் நான்கில் ஒருவரின் விந்துணுவில், அவர்கள் குணமடைந்து 7 முதல் 9 மாதங்களின் பின்னரும் இபோலா வைரஸ் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இபோலா நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஆண்கள் 3 மாதங்களுக்கே பாலுறவில் இருந்து தள்ளியிருக்க வேண்டும் அல்லது ஆணுறையை பயன்படுத்த வேண்டும் என்று முன்னர் அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








