ஏர் இந்தியா: உடல் 'குண்டானவர்கள்' பணிப்பெண் வேலையை இழக்கிறார்கள்

பட மூலாதாரம், AP
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானசேவை நிறுவனம், அதன் 125 விமானப் பணிப்பெண்களையும் விமானத்தில் பணியாற்றும் ஏனையவர்களையும், அதிக உடல்பருமன் காரணமாக அந்தப் பணிகளிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த, விமானத்தில் பயணிக்கும் பணியாளர்களின் உடல்-எடை அளவுகோள் ((body mass index) விதிமுறைகளுக்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
உடல் எடையை குறைத்துக்கொள்ளுமாறு 600 பணியாளர்கள் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர்களில் 125 பேர் கேட்கப்பட்ட அளவுக்கு எடையை குறைக்கவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளாத விமானப் பணியாளர்களால் அவசர நிலைமைகளின்போது வேகமாக இயங்கமுடியாமல் போகலாம் என்ற கவலைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








