திருமணத்துக்கு வெளியில் பாலுறவு; இருவருக்கும் தலா 100 கசையடிகள்

திருமணத்துக்கு வெளியில் பாலுறவில் ஈடுபட்டால் 6 மாத சிறைத் தண்டனை என்றே ஆப்கானிய சட்டம் கூறுகின்றது
படக்குறிப்பு, திருமணத்துக்கு வெளியில் பாலுறவில் ஈடுபட்டால் 6 மாத சிறைத் தண்டனை என்றே ஆப்கானிய சட்டம் கூறுகின்றது

ஆப்கானிஸ்தானில் நீதிமன்றம் ஒன்று ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் தலா நூறு கசையடிகள் வீதம் தண்டனை அளித்துள்ளது.

20-24 வயதுகளுக்கு உட்பட்ட இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள இந்த கசையடி தண்டனை ஆப்கானிய சட்டங்களுக்கு முரணானது.

திருமணத்துக்கு வெளியில் பாலுறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டிருந்த இருவருக்கும் கசையடி வழங்கி தண்டனை நிறைவேற்றியதாக மத்திய மாகாணமான கோர்-இல் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருவரும் திருமணம் புரியாதவர்கள்.

ஏதாவது ஒரு குற்றத்துக்கு ஆப்கானின் சட்ட நடைமுறையில் தண்டனைகள் எதுவும் இல்லாத போது மட்டுமே, கசையடி போன்ற கடுமையான ஷரியா-வகை தண்டனைகளை வழங்கமுடியும்.

ஆனால், திருமணத்துக்கு வெளியிலான பாலியல் உறவுக்கு 6-மாத சிறைத் தண்டனை வழங்க நாட்டின் சட்டத்தில் இடமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.