"மார்பகங்கள் வெடிகுண்டுகள் அல்ல" - கனடாவில் மேலாடை இல்லாமல் ஒரு ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம், AP
கனடாவில் மார்பகங்களை மூடாமல் சைக்கிளில் சென்ற சகோதரிகள் மூன்று பேரை அதிகாரிகள் விசாரித்ததை அடுத்து, மேலாடை போடாமல் வெளியே போகும் உரிமை பெண்களுக்கு இருக்க வேண்டும் என வலியுறுத்தி அந்நாட்டின் வாட்டர்லூ நகரத்தில் நூற்றுக்கணக்கானோர் மேலாடை இல்லாமல் ஊர்வலம் சென்றுள்ளனர்.
ஒண்டாரியோ மாகாணத்தில் பெண்கள் கட்டாயம் மேலாடை போட வேண்டும் என்று சட்டம் வலியுறுத்தவில்லை என்றபோதும் சென்ற மாதம் மேலாடை இல்லாமல் சென்ற சகோதரிகள் அலீஷா, தமீரா, நாதியா முகமது ஆகிய மூவரையும் பொலிசார் நிறுத்தியிருந்தனர்.
மேலுடலை மூடிக்கொள்ளுங்கள் என்று பொலிசார் முதலில் சொன்னதாகவும், ஆனால் அவர்களுடைய சைக்கிளில் ஒழுங்கான விளக்கும் மணியும் இருந்ததா என்று பரிசோதிக்கத்தான் நிறுத்தியதாக பின்னர் அவர்களிடம் பொலிசார் கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
"அவை மார்பகங்கள்தான்; வெடிகுண்டுகள் அல்ல" என்றும், "நிர்வாணம் ஆபாசம் ஆகாது" என்றும் எழுதப்பட்ட அட்டைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலாடை இல்லாமல் ஊர்வலம் சென்றனர்.
சுதந்திரமும் சம உரிமையும் இருபாலாருக்கும் வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.








