மலேசியப் பிரதமர் மீதான ஊழல் குற்றச்சாட்டின் எதிரொலி: அரச நிறுவனத்தில் சோதனை
மலேசியப் பிரதமர் நஜீப் ரஜாக் மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளின் ஒரு பகுதியாக அரச முதலீட்டு நிறுவனமான ஒன்- எம்டிபியின் அலுவலகத்திலும் சோதனைகள் நடைபெற்றுள்ளன.

அந்த அரச நிறுவனத்திலிருந்து மலேசியப் பிரதமர் 700 மில்லியன் டாலர்களை தனது சொந்தக் கணக்குக்கு மாற்றினார் எனக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஒன்-எம்டிபி நிறுவனமும் பிரதமர் நஜீபும் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.
இந்நிலையில் தன் மீது அப்படியொரு குற்றச்சாட்டை முதலில் வெளியிட்ட வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக நஜீப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல பில்லியன் டாலர்கள் கடனில் அந்த அரச நிறுவனம் இருக்கும் வேளையில் இந்தக் குற்றச்சாட்டுகள் மலேசியப் பிரதமர் நஜீபின் நம்பகத்தன்மையை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.








