இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டில் மோசூல் நகரின் இன்றைய நிலை என்ன?

இராக்கின் வடபகுதி நகரான மோசூலை மீட்க இராக் அரசபடைகள் முயன்றால் அதை எதிர்கொண்டு தம்மிடமே தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் மோசூல் முழுக்க கண்ணிவெடிகள், சுரங்கங்கள் மற்றும் தடுப்புகள் அடங்கிய விரிவான கட்டமைப்பை இஸ்லாமிய அரசு குழுவினர் உருவாக்கியிருக்கிறார்கள்.
மோசூல் நகரை இஸ்லாமிய அரசு அமைப்பு கைப்பற்றி ஓராண்டு நிறைவடையும் நிலையில் அந்நகரவாசிகளின் அன்றாட வாழ்வு குறித்து பிபிசி செய்த புலனாய்வின்போது இந்த விவரங்கள் தெரியவந்திருக்கின்றன.
மோசூல் நகரமக்களின் அன்றாட வாழ்வின் பெரும்பாலான அம்சங்களை இஸ்லாமிய அரசு கட்டுப்படுத்துவதாகவும் பிபிசியின் புலனாய்வில் தெரியவந்திருக்கிறது.
பள்ளிக்குழந்தைகளின் சீருடைகளைக்கூட அவர்கள் நிர்ணயிப்பதாகவும், இப்படியான கட்டுப்பாடுகள் குழந்தைகளை மூளைச்சலவை செய்ய பயன்படுத்தப்படுவதாகவும் நகரவாசிகள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், AP
செல்லிடதொலைபேசித்தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. செய்திகள் அனைத்தும் இஸ்லாமியக்குழு அமைப்பால் கடுமையாக தணிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
ஷியா முஸ்லீம்கள், மற்ற மத சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துவகையான சிறுபான்மையினரும் ஒடுக்குமுறையை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் மோசூல் நகரத்தில் முன்பு வாழ்ந்த பகுதிகள் பெரும்பாலும் வெறிசோடிக் கிடக்கின்றன.
மோசூல் நகரின் ஒட்டுமொத்த கட்டிடங்களின் தோற்றங்கள் கூட மாற்றியமைக்கப்படுகின்றன.
நகரின் புகழ்பெற்ற மசூதி இடிக்கப்பட்டுவிட்டது.












