முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு 'காவல்துறை தடை'

நினைவேந்தல் நிகழ்வுகளை முள்ளிவாய்க்காலில் நடத்தக்கூடாது என்று காவல்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளது
படக்குறிப்பு, நினைவேந்தல் நிகழ்வுகளை முள்ளிவாய்க்காலில் நடத்தக்கூடாது என்று காவல்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளது

இலங்கையின் யுத்தம் முடிவுக்கு வந்த முள்ளிவாய்க்கால் யுத்த மோதல்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு திங்கட்கிழமை மே-18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் எதனையும் நடத்தக் கூடாது என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான முன் அனுமதியை கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் விண்ணப்பித்திருந்தனர்.

இதனையடுத்து, அதற்கான தடையுத்தரவை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திடம் பெற்றுள்ள காவல்துறையினர் அது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அறிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடமும் இந்தத் தடையுத்தவு குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தினால் அது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகக் கருதி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் பேரணி நடத்தப்படுவதன் மூலம் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்ற காரணத்தினால் இந்தத் தடை விதிக்கப்படுவதாக நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆயினும் பேரணி மட்டுமல்ல, எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வையும் நடத்தக்கூடாது என்றே நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருப்பதாக காவல்துறையினர் தங்களுக்குத் தெரிவித்திருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கூறியிருக்கின்றனர்.

நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி கோரி காவல்துறையினரிடம் விண்ணப்பித்திருந்த முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அமைப்பினரும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தங்களின் நிகழ்வை இரத்து செய்துள்ளனர்.

இதற்கிடையில், திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான சர்வமதப் பிரார்த்தனை நிகழ்வு நடத்தப்படும் என்று வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குப் பொறுப்பான மூத்த காவல்துறை அதிகாரிக்கு அறிவித்து அவரிடம் அதற்கான அனுமதி பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களுக்கான பிரார்த்தனை நிகழ்வு வவுனியாவில் நடத்தப்படும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் அறிவித்திருக்கின்றார்.