போதைப் பொருள் பயன்பாடு : பிரபல நடிகர் ஜாக்கிச் சான் மகன் கைது

மகனுடன் ஜாக்கிச் சான்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, மகனுடன் ஜாக்கிச் சான்

போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஜாக்கிச் சானின் மகனை, சீனக் காவல்துறையினர், பீஜிங்கில் கைது செய்துள்ளனர்.

ஜாக்கிச் சானின் மகனுடன் தாய்வான் நடிகர் கை கோவும் சீனக் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில், போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், பல பிரபலங்கள் போதை மருந்துகள் பயன்பாடு தொடர்பில் பிடிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.

ஜெ சீ சானின் வீட்டிலிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறையினர் கூறுகிறார்கள்.

முழுக்கையுடன், தலையை மூடும் வகையிலான, குளிர்காலத்தில் அணியும் சட்டையுடன், ஜெ சீ சான் அழைத்துச் செல்லப்படுவதை சீனத் தொலைக்காட்சி காட்டியது.

அதில், அவர் கறுப்புநிற பேஸ்பால் தொப்பி அணிந்து காணப்படுகிறார். மேலும், கடந்த பல ஆண்டுகளாக, மூட்டை மூட்டையாக, தான் கஞ்சா வைத்திருந்ததை ஒரு அதிகாரியிடம் அவர் கூறுவதும் காண்பிக்கப்படுகிறது.

போதைப் பொருள் பயன்பாடு தொடர்பில், மிகவும் பிரபலமானவர்கள் கைது செய்யப்படுவது, அதன் பயன்பாடு சகித்துக் கொள்ளப்படாது எனும் செய்தியை வெளிக்காட்டுகிறது என பீஜிங்கிலிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.