இரண்டாம் நாள் தேடுதலிலும் மலேசிய விமானத்தின் பாகங்கள் கிடைக்கவில்லை

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தெற்கு இந்திய பெருங்கடலில் சர்வதேச நாடுகள் தேடி வருகின்றன. ஐந்து இராணுவ மற்றும் போக்குவரத்து விமானங்கள் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இரண்டாம் நாள் முடிவிலும் எந்த விமானப் பொருளும் கிடைக்கவில்லை. மீண்டும் சனிக்கிழமையன்று தேடுதல் தொடர்ந்து இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையன்று இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கை மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டது.
உலகத்திலேயே அவ்வளவு எளிதில் எட்டமுடியாத இருக்கும் அப்பகுதியில் விமானத்தை தேடி வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார்.
கடலில் மிதந்ததாக கூறப்படும் பொருட்களை ஆஸ்திரேலிய செய்மதிகள் கண்டுபிடித்தன. அப்பொருட்களை ஆராய்வதற்காக ராயல் ஆஸ்திரேலியன் விமானப் படையை சேர்ந்த மூன்று ஒரையான் விமானங்கள் உட்பட நான்கு விமானங்கள் அங்கு சென்றுள்ளன என ஆஸ்திரேலிய கடல்போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தேடுதல் நடவடிக்கையில் பம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் என்ற போக்குவரத்து விமானமும் ஈடுபட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்துக்கு தென் மேற்காக உள்ள 23,000 சதுர கிலோமீட்டர் பகுதியை இந்த விமானங்கள் தேடி வருகின்றன.
நிலப்பரப்பில் இருந்து மிகவும் தொலைவில் இருப்பதால், ஒவ்வொரு விமானமும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தேடுதலில் ஈடுபட முடியவில்லை.
அந்த பகுதியில் இருக்கும் நார்வே நாட்டுப் போக்குவரத்துக் கப்பல் ஒன்று வியாழக்கிழமை முதல் தேடுதலில் ஈடுபட்டு வருகிறது. இப்போது மற்றுமொரு போக்குவரத்து கப்பலும் அங்கு சென்று கொண்டிருக்கிறது. அதே போன்று மீட்புப் பணியில் ஈடுபடக்கூடிய ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ஒன்றும் அங்கு சென்று கொண்டிருக்கிறது.
முதன் முதலாக அங்கு சென்று தேடுதலில் ஈடுபட்டு திரும்பிய ஆஸ்திரேலிய விமானப் படையின் ஒரையான் விமானத்தின் கேப்டன், அப்பகுதியில் மிக மிக மோசமான கால நிலை நிலவுவதாகவும், பெரும் காற்றும், ஆக்ரோஷமான கடல் அலைகளும் அங்கு காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மலேசிய அதிகாரிகளை தாங்கள் நம்பப் போவதில்லை என்றும், ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து பொய்யான தகவலை தருவதாகவும் பயணித்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.












