'எவரெஸ்ட் சிகரத்தை எட்டி 60 ஆண்டுகள்'

எவரெஸ்ட் சிகரத்தை முதல் முறையாக மனிதன் எட்டிய 60வது ஆண்டு நிறைவையொட்டிய கொண்டாட்டங்கள் நேபாளத்தில் நடந்துள்ளன.
நியூசிலாந்தைச் சேர்ந்த மலையேறியான சர். எட்மண்ட் ஹிலாரி அவர்களும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகிய இருவரும் இந்த உலகின் மிகவும் உயரமான மலைச் சிகரத்தை 1953ஆம் ஆண்டும் மே மாதம் 29ஆம் தேதி அடைந்தார்கள்.
நியுசிலாந்தில் தேனி வளர்க்கும் தொழிலைச் செய்து வந்த சர் எட்மண்ட் ஹிலாரியும், அவரின் நேபாள ஷெர்பா டென்சிங் நோர்கேயும் அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 8848 மீட்டர் அதாவது 29 ஆயிரம் அடி இருக்கும் இச்சிகரத்தின் மீது ஏறியது மிகப் பெறும் சாதனையாக பார்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசியாக இரண்டாம் எலிசபத் முடிசூட்டப்பட்ட நாளில் இவர்கள் உலகின் உச்சத்தை அடைந்த செய்தி லண்டனை எட்டியது.
அன்று முதல் இன்று வரை எவரெஸ்ட் சிகரத்தில் 5000இற்கும் அதிகமானோர் ஏறியிருக்கிறார்கள். மனித முயற்சிக்கு இயற்கை அளிக்கும் இந்த உயரமான சவாலை எதிர் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதன் பிறகு கணிசமாக அதிகரித்தது. மலையேறுபவர்களுக்கு உதவும் கருவிகள் அறிவியல் முன்னேற்றத்தால் துல்லியமானவையாகவும் – எடை குறைந்தவையாகவும் தற்போது உள்ளன. பருவநிலையையும், மலை மீதுள்ள ஐஸ் நகருவது குறித்தும் தற்போது உறுதியான தகவல்களை உடனுக்குடன் பெறும் வசதி உள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் ஏற வேண்டும் என்று கிளம்பியவர்களில் 18 சதவீதம்பேர்தான் உச்சியை அடைந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 56 சதமாக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஒரே நாளில் 234 பேர் எவரெஸ்ட் சிகரத்தின் மீது கால் பதித்தினர். 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1983 இல் ஒரே நாளில் அதிக பட்சமாக வெறும் 8 பேரால்தான் எவரெஸ்ட்டை அடையமுடிந்தது.
ஆரம்ப காலத்தில் சாதனை மனப்பாங்கு கொண்ட – அபாயமான சூழ் நிலைகளை எதிர்கொள்ளும் மனோதிடம் கொண்டவர்களே எவரெஸ்ட்டுக்கு செல்ல முடியும் என்று இருந்தது. ஆனால் தற்போது எவரெஸ்ட் மலையேற்றம் என்பது நேபாளத்தில் நான்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாக இருக்கிறது. 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டாலர்கள் வரை கொடுத்து அதற்கேற்ற வசதிகளைப் பெற்றுக் கொண்டு ஒருவர் மேலே ஏறமுடியும். எவரெஸ்ட்டுக்கான வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் – அங்காங்கே உணவு மற்றும் மருத்துவ வசதிகளும் – பணத்துக்கு சுமைகளை சுமந்து வர ஷெர்பாக்களும் இப்போது அதிகரித்துவிட்டனர்
தற்போது மலையேறுதல் என்பது ஒரு வணிக நடவடிக்கையாக மாறிவிட்டதாகக் கூறும் விமர்சகர்கள், அங்கு அளவுக்கு அதிகமான சனக்கூட்டத்தை குறைப்பதற்காக ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், அதனை பல மலையேறிகள் மறுக்கிறார்கள்.








