இரண்டு மார்பகங்களையும் அகற்றிக்கொண்டார் ஏஞ்சலினா ஜோலி

ஏஞ்சலினா ஜோலி
படக்குறிப்பு, ஏஞ்சலினா ஜோலி

பிரபல ஹாலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டுள்ளார்.

தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்ப்பதற்காகவே மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை முறைமூலம் மார்பகங்களை அகற்றிக்கொண்டுள்ளதாக ஏஞ்சலினா ஜோலி நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.

6 பிள்ளைகளின் தாயான ஏஞ்சலினா ஜோலிக்கு 37 வயதாகிறது.

அவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 87 வீதமும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 வீதமும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

'முடிந்தவரை புற்றுநோய் அபாயத்தை குறைத்துக்கொள்வதற்காகவே' தான் சத்திரசிகிச்சை செய்துகொண்டுள்ளதாக ஏஞ்சலினா கூறுகிறார்.

கடந்த பெப்ரவரியில் தொடங்கிய சத்திரசிகிச்சை பணிகள் ஏப்ரல் கடைசிப் பகுதியில் முடிந்ததாக ஏஞ்சலினா ஜோலி கூறினார்.

ஏஞ்சலினா ஜோலியின் தாயாரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயுடன் போராடி 56 வயதில் உயிரிழந்தார்.

தன்னில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய மரபணுக்கள் இருப்பது தெரியவந்த பின்னர், 9 வாரகால சத்திர சிகிச்சை நடைமுறைக்கு சம்மதித்ததாகவும் புற்றுநோய் அபாயம் 87 வீதத்திலிருந்து 5 வீதமாகக் குறைந்துவி்ட்டதாகவும் ஹாலிவூட் நட்சத்திரம் ஏஞ்சலினா ஜோலி கூறியுள்ளார்.

ஏஞ்சலீனா ஜோலி, தனக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் நோக்கில் தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியிருப்பதை ஒட்டி, மார்பக புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் சென்னையிலுள்ள புற்றுநோய் மருத்துவ நிபுணர் பாஸ்கர ராவ்.