ராணியின் பாரம்பரியம் குறித்து ஆப்ரிக்காவில் இருக்கும் வேறுபட்ட பார்வை

A newspaper vendor seen reading a local daily reporting on the death of Queen Elizabeth II in the city of Nairobi. Queen Elizabeth II

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நோம்சா மாசேகோ
    • பதவி, பிபிசி நியூஸ், ஜோஹனன்ஸ்பர்க்

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து உலக நாடுகளின் தலைவர்களும் சாதாரண மக்களும் தங்கள் வருத்தத்தையும் உளமார்ந்த அஞ்சலிகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளைச் சேர்ந்த பலரும் ராணியின் நினைவைப் போற்றி வருகின்றனர். சிலர் தங்கள் நாடுகளுக்கு மாட்சிமை பொருந்திய மகாராணி வந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

ஆனால் அனைவருமே இத்தகு மரியாதைக்குரிய வியப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்று கூற முடியாது.

பூர்வகுடிகளுக்கு எதிரான அடக்குமுறைகள், மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து சிலைகள் மற்றும் கலைப் பொருட்கள் திருடப்பட்டது, தென்னாப்ரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து தங்கம் மற்றும் வைரம் திருடப்பட்டது, அடிமைத்தனம், ஒடுக்குமுறை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய காலனி ஆதிக்க கால ஆட்சியின் ரத்தம் தோய்ந்த வரலாற்றையும் சிலருக்கு மீண்டும் ராணியின் மரணம் நினைவூட்டியுள்ளது.

தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ராணி ஒரு மிகச்சிறந்த பொது மனிதர் என்றும் உலகில் உள்ள பலராலும் மிகவும் அன்புடன் நினைவுகூரப்படுவார் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சியான பொருளாதார சுதந்திரப் போராளிகள் கட்சி இந்த துக்கத்தில் தாங்கள் பங்கெடுக்க போவதில்லை என்று கூறியுள்ளது.

70 ஆண்டு காலம் அவர் ராணியாக இருந்த பொழுது பிரிட்டன் மற்றும் அவரது குடும்பத்தினரால் உலகெங்கிலும் நிகழ்த்தப்பட்ட குற்றங்களை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், சொல்லப் போனால் அவர் அந்த அத்துமீறல்கள் குறித்து பெருமைப்படுபவராக இருந்தார் என்றும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்சி தென்னாப்ரிக்காவில் மூன்றாவது மிகப்பெரிய அரசியல் கட்சியாகும்.

இந்த நாட்டிலும் ஆப்ரிக்க வரலாற்றிலும் இருந்த ஒரு மிகவும் துன்பத்துக்குரிய காலகட்டத்தை நினைவூட்டுவதாகவே அவரது மரணம் அமைந்துள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சமூக ஊடகங்களில் விமர்சகர்கள் இதைவிட அதிகமாக விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.

நைஜீரியாவில் பிறந்த அமெரிக்க பேராசிரியர் உஜு அன்யா, ராணி இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இட்ட ட்விட்டர் பதிவுகள் கூர்மையான விவாதத்தை தூண்டின. அதில் ஒரு பதிவு தங்கள் விதிமுறைகளை மீறியதாக அந்நிறுவனத்தால் நீக்கப்பட்டு விட்டது.

''இனப்படுகொலையை முன் நின்று நடத்தி, என் குடும்பத்தினரில் பாதிப்பேர் இடம்பெயர்ந்து, அதன் பின்விளைவுகளில் இருந்து தற்போது உயிருடன் இருப்பவர்கள் இன்னும் மீண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கக் காரணமான ஓர் அரசைக் கண்காணித்தவருக்கு நான் ஏளனத்தைத் தவிர வேறு ஏதாவது ஒன்றை வெளிப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் தொடர்ந்து அவ்வாறே வேண்டிக் கொண்டிருக்கலாம்,'' என்று அவர் பதிவிட்டு இருந்தார்.

1960களில் நடந்த பயாஃப்ரா யுத்தத்தையே அவர் இவ்வாறு குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Queen Elizabeth dancing with Ghanaian president Kwame Nkrumah in 1961, four years after the country gained independence

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1961இல் சுதந்திர கானாவின் அதிபர் க்வாமே நுக்ருமாவுடன் நடனமாடும் ராணி எலிசபெத். இது நிறவெறிக் கொள்கையை பின்பற்றிய தென்னாப்ரிக்காவில் பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

இந்தப் போரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நைஜீரிய அரசுக்கு ஆதரவளித்து ஆயுத உதவியும் செய்தது.

தன்னைத் தானே குடியரசு என்று அறிவித்துக் கொண்ட பயாஃப்ராவின் பிரிவினைவாதிகளை ஒடுக்க நைஜீரிய அரசு அவர்களுக்கு உணவு பொருட்கள் செல்வதைத் தடுத்து, அவர்களை பட்டினியால் இறக்க வைத்து நசுக்கியது.

@ParrenEssential என்னும் ட்விட்டர் பதிவர் இதற்கு நமது நாட்டையும் கலாசாரத்தையும் நீங்கள் தவறாக பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்; இவ்வாறு நைஜீரியர்கள் நடந்து கொள்வதில்லை என்று பதில் அளித்துள்ளார்.

ஒரு நபரை அவரது மரணத்தின் போது இவ்வாறு விமர்சிப்பது ஆப்ரிக்கத் தன்மைக்கு எதிரானது என்று சிலர் கூறியுள்ளனர்.

1905ல் தென்னாப்ரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்பட்ட 'ஸ்டார் ஆஃப் ஆப்ரிக்கா' வைரத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்ற பதிவுகளும் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டன.

இந்த வைரத்தின் துண்டுகள் தற்பொழுது பிரிட்டனின் அரச ஆபரணங்களில் பதிக்கப்பட்டுள்ளன.

இந்த வைரம் திருடப்பட்டதாக பலர் குறிப்பிட்டுள்ளனர் ஆனால் ட்ரான்ஸ்வால் அரசாங்கத்தால் இந்த வைரம் வாங்கப்பட்டு பிரிட்டன் அரசு குடும்பத்தினருக்கு விசுவாசத்தின் அடையாளமாக வழங்கப்பட்டது.

ஆனால் தென்னாப்பிரிக்க மக்களே இந்த வைரத்துக்கு உண்மையான அதிபதிகள் என சமூக ஊடகத்தில் பலரும் கருதுகின்றனர்.

Queen Elizabeth at her coronation, carrying the sceptre topped with the Star of Africa in her right hand

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'ஸ்டார் ஆஃப் ஆப்ரிக்கா' வைரம் பதிக்கப்பட்ட செங்கோலுடன் தமது முடி சூட்டல் விழாவில் ராணி எலிசபெத்.

முடி சூட்டுதலின்போது அரசர் கையில் வைத்திருக்கும் செங்கோலில் இருக்கும் மிகப்பெரிய வைரத்தை உள்ளடக்கிய இந்த 400 மில்லியன் டாலர் மதிப்பிலான வைரம் 75 ஆயிரம் தென்னாப்ரிக்க மாணவர்களின் உயர்கல்விச் செலவுக்கு பயன்படும் என்று @Qban_Linx என்ற ட்விட்டர் பயனர் கூறியுள்ளார்.

ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்திற்கு பிறகு கோஹினூர் என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் சமூக ஊடகங்களில் பரவலானது. கோஹினூர் என்பது ஒரு மிகப்பெரிய வைரம். இது அரச துணைவியால் அணியப்படும் என்று கூறப்படுகிறது.

ராணி இரண்டாம் எலிசபெத் தனது அதிகாரம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி பிரிட்டிஷ் காலனி ஆதிக்க ஆட்சிக்கு எதிராக போராடி உயிரிழந்தவர்களின் உடல் எச்சங்கள் அவர்கள் குடும்பத்தினருக்கு திரும்ப கிடைத்திருக்க வழிவகை செய்திருக்க வேண்டும் என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

கென்யா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தற்கால கென்யாவில் நடந்த நண்டி கிளர்ச்சியின் தலைவரான கோய்தாலே சமூவோய், 1835இல் கொல்லப்பட்ட தென்னாப்ரிக்காவின் சோசா ராஜியத்தின் அரசர் ஹின்ஸ்டா ககாவுலா தலைகள் திரும்பக் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள் அவர்கள். உடல்கள் சிதைக்கப்பட்ட பின்னர் வெற்றி சின்னங்களாக அவர்களது தலைகள் பிரிட்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மாவ் மாவ் கிளர்ச்சியின் போது கென்ய நாட்டினர் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டதும் தற்பொழுது நினைவு கூரப்படுகிறது.

81 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயதாக இருந்த தாம் இந்த கிளர்ச்சி போராட்டத்தில் பங்கேற்ற போது பிரிட்டிஷ் படையினரால் தாக்கப்பட்டது மற்றும் உணவு மறுக்கப்பட்டது ஆகியவற்றை கித்து வா ககங்கேரி நினைவுகூர்கிறார்.

''அவர்கள் என் நிலத்தையும் பிறப்புரிமையையும் ஆக்கிரமித்தனர்; ஆனாலும் ராணி ஒரு மனிதர் என்பதால் நாம் அவருக்காக இரங்குகிறோம். மக்கள் இறக்கும்பொழுது வருத்தப்படுகிறோம்'' என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் அவர் தெரிவித்தார்.

''தன்னலமற்ற சேவையின் மாபெரும் சின்னம்'' என்று ராணியை குறிப்பிட்டு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அறிவித்ததற்காக கென்ய அதிபர் உப்ரு கென்யட்டா கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

போட்ஸ்வானா அதிபர் அயான் காமா ராணியின் பாரம்பரியத்தை ஆதரித்து பேசியதுடன் அவரின் இடத்துக்கு வேறொருவர் வர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

''காலனி ஆதிக்கம் என்பது நாம் நினைத்து பார்க்க விரும்பாத ஒன்று. அது ஓர் இருண்ட காலம். ராணி அந்த பாரம்பரியத்தில் இருந்து வந்தார். ஆனால் அவர் அதை உருவாக்கியவர் அல்ல. காலனி ஆதிக்கம் உண்டாக்கிய சேதங்களை சரிப்படுத்த விரும்புபவராக வெளிவந்தார். உங்களை மீறி நாங்கள் இல்லை; நாங்கள் உங்கள் வளர்ச்சியிலும் பங்கெடுக்க விரும்புகிறோம்; நாடுகளாக நீங்கள் வளர விரும்புகிறோம்' என்பதை அவர் காட்டினார்'', என காமா கூறியுள்ளார்.

இருள் நிறைந்த கடந்த காலத்தில் இருந்து புதிய சகாப்தத்தை கொண்டு வந்தவராகவே ராணியை பார்க்க வேண்டும் அவர் கூறியுள்ளார்.

பிரிட்டன் பேரரசின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு ராணி ஒருபொழுதும் மன்னிப்பு கூறவில்லை என்று பெரும்பாலானோர் கூறுகிறார்கள்.

ஆனால் 1919இல் வட இந்தியாவில் நடந்த அமிர்தசரசு படுகொலை உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொண்ட அவர் அவை கடுமையான நிகழ்வுகள் மற்றும் வருத்தம் தரக்கூடியவை என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் ஜெனரல் டயர் அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்ற இடத்திற்கு 1997ஆம் ஆண்டு செல்லும் முன்பு அவர் ஆற்றிய உரையில் அது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார்.

''வரலாற்றை மாற்றி எழுத முடியாது, ஆனால் அது வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என நாம் விரும்பலாம்; வரலாற்றில் இனிய தருணங்களும் சோகமான தருணங்களும் உள்ளன; அந்த சோகமான தருணங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு இனிய தருணங்களை உருவாக்க வேண்டும்,'' என அப்பொழுது பேசியிருந்தார்.