பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை தக்க வைத்தார் - நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

பட மூலாதாரம், Reuters
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். அவருடைய தலைமைத்துவத்திற்கு எதிராக சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தபோதும் அவர் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் அவரின் அதிகாரம் வலுவிழந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 59 சதவீத வாக்குகளை பெற்று போரிஸ் ஜான்சன் தன் பதவியை தக்க வைத்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சனின் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த மொத்தம் உள்ள 359 எம்.பிக்களில், 211 எம்.பி.க்கள் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் 148 எம்.பிக்கள் அவருக்கு எதிராகவும் வாக்களித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன், அதனை "தீர்க்கமான முடிவு" என தெரிவித்துள்ளார்.
மேலும், "மிகச் சிறந்த திருப்திகரமான முடிவு" என தெரிவித்துள்ள அவர், "ஊடகங்களில் வெளிவரும் அனைத்தையும் கடந்து செல்வதற்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளது" என தெரிவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் போரிஸ் ஜான்சனின் பதவி தக்க வைக்கப்பட்டாலும், அவருடைய தலைமைக்கு எதிராக கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பு, அவருடைய அதிகாரத்தை வலுவிழக்கச் செய்வதாக அமைந்துள்ளது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுள் சிலர் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரீசா மே 2018ஆம் ஆண்டில் இதேபோன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார். அப்போது 63 சதவீத வாக்குகளை பெற்று அதில் வெற்றி பெற்றார். எனினும், ஆறு மாதங்கள் கழித்து பிரெக்ஸிட் விவகாரம் காரணமாக அவர் பதவி விலகினார். தற்போது போரிஸ் ஜான்சன், முன்னாள் பிரதமரை விட நம்பிக்கை வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு ஏன்?
2019ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றார் போரிஸ் ஜான்சன்.
போரிஸ் ஜான்சன் கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கை மீறி விருந்து நடத்தியது தொடர்பாக, வெளியான அறிக்கையையடுத்து, அவருடைய தலைமைக்கு எதிராக சொந்த கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், ஊரடங்கை மீறி பிறந்த நாள் விருந்தில் கலந்துகொண்டதாக, ஜூன் 2020இல் அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
இதன்மூலம், பிரிட்டனின் பிரதமராக ஆட்சியில் உள்ள ஒருவர் மீது சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்படும் முதல் பிரதமராக அவர் ஆனார்.
மேலும், வரி உயர்வு, வாழ்க்கைச் செலவுகள் உயர்வு மற்றும் அரசு கொள்கைகள் மீதும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அவருடைய பதவி நிலைக்குமா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக எழுந்த நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத் முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகளான நிறைவு விழா கொண்டாட்டத்தின்போது ஞாயிற்றுக்கிழமை அன்று போரிஸ் ஜான்சன் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது குறித்து தெரிவிக்கப்பட்டது.
வெற்றி குறித்து சொந்த கட்சியினர் கூறுவது என்ன?
இந்த முடிவு போரிஸ் ஜான்சன் பிரதமராக தொடர்வதற்கான தகுதியை சமரசம் செய்துகொண்டிருப்பதாக, கன்சர்வேட்டிவ் கட்சியில் அவருக்கு எதிரான எம்.பிக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
அவர்களுள் ஒருவரான ஜூலியன் ஸ்டர்டி கூறுகையில், "இந்த முடிவு போரிஸ் ஜான்சன் முழு மனதுடன் கட்சியின் நம்பிக்கையை பெறவில்லை என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். அவர் தன் நிலையை பரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.
மற்றொருவரான சர் ரோகர் கேல் இந்த முடிவு மிக மோசமானது என தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இதனிடையே, போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் உள்ளோர் பலரும் அவருக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தனர்.
சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவித் தன் ட்விட்டர் பக்கத்தில், "இனி நாம் அனைவரும் இணைந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களில் கவனம் செலுத்த வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என முன்பே தெரிவித்திருந்த கல்வித்துறை செயலாளர் நாதிம் ஸஹாவி, "பிரதமர் கணிசமான வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். இந்த பிரச்னைக்கு இனி முடிவு கிடைக்கும் என நான் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி கூறுவது என்ன?
எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கேயெர் ஸ்டார்மெர் கூறுகையில், "பிரதமர் மிகப்பெரிய வாக்குறுதிகளை கூறுகிறார், ஆனால் அவற்றை எப்போதும் செயல்படுத்தியதில்லை. இதனால் பிரதமர் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்" என தெரிவித்தார்.
மேலும், "அவர் வகிக்கும் பதவிக்கு முற்றிலும் தகுதியற்ற நபர்" என தெரிவித்துள்ள அவர், "பிரிட்டன் மக்களை கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பிக்கள் புறக்கணித்துள்ளனர்" என தெரிவித்தார்.
போரிஸ் ஜான்சனின் இந்த வெற்றி குறித்து பதிவு செய்துள்ள பிபிசியின் அரசியல் பிரிவு ஆசிரியர் கிரிஸ் மேசன், இந்த முடிவை போரிஸ் ஜான்சனுக்கு எதிரானவர்கள் எதிர்பார்க்கவில்லை எனவும், அவர் வெற்றி பெறுவார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். போரில் அவர்கள் தோல்வியடைந்ததாக இதனை கருதலாம், ஆனால், போரிஸ் ஜான்சனின் இடத்தில் வேறொருவரை அமர்த்துவதற்கான போர் தொடரும் என தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













