யுக்ரேன் Vs ரஷ்யா: மேரியோபோலில் தொடரும் தாக்குதல்கள் - கீயவ் சுற்றிவளைப்பு

யுக்ரேன் ரஷ்யா நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேனின் மேரியோபோலில் இருந்து வெளியேறும் மக்களை ரஷ்ய படையினர் தடுத்து வருவதால் அங்கு நிலைமை மோசமாகியுள்ளதாக யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு இன்று பதினேழாவது நாளை எட்டியுள்ளது. யுக்ரேனின் மோதல் மண்டலங்களில் சிக்கியிருந்த பொதுமக்களின் வெளியேற்றத்துக்காக தலைநகர் கீயவ், கார்ஹிவ், மேரியோபோல் போன்ற நகரங்களில் சில மணி நேரத்துக்கு சண்டை நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா தற்போது அந்த நகரங்களில் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது.

தலைநகர் கீயவுக்குள் ரஷ்ய படையினர் நுழைந்தபோதிலும், அங்கு அவர்கள் ஆரம்ப நாட்களில் நடத்தியது போன்ற தாக்குதலை மேற்கொள்ளவில்லை.

சமீபத்திய நடவடிக்கையாக ரஷ்ய படையினர் மேரியோபோலில் உள்ள வணிக வளாகம் மற்றும் கப்பேறு மருத்துவமனையை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேரியோபோலில் 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் மீதமுள்ளவர்கள் உறைய வைக்கும் பனியில் வாடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரத்தில் தற்போது மின்சாரம் இல்லை. சிறிதளவு மட்டுமே உணவு மற்றும் தண்ணீர் இருக்கின்றது.

தனது சமீபத்திய காணொளி உரையில், யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, மக்களின் வெளியேற்றத்தை தடுக்கும் வகையில் நகரிலேயே அவர்களை சிக்க வைத்ததற்காகவும் அவசரமாக தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை படையினர் அனுமதிக்க மறுத்ததற்காகவும் குற்றம்சாட்டினார்.

ரஷ்ய பீரங்கிகளின் தொடர்ச்சியான தாக்குதலால் சமீபத்திய நாட்களில், நான்கு முக்கிய நகரங்களில் இருந்து குறைந்தளவிலேயே மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஸெலென்ஸ்கி கூறினார்.

line

உங்களது கதையை சொல்ல விரும்புகிறோம்: நீங்களோ அல்லது நண்பரோ, உறவினரோ யுக்ரேனில் இருக்கிறீர்களா?

தற்போது யுக்ரேனில் இருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அங்கு நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? அல்லது யுக்ரேனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் இருக்கிறீர்களா? உங்களது அனுபவங்களை கீழே உள்ள படிவத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிபிசி தமிழில் இருந்து விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்கள் அனுபவங்களை பிபிசி தமிழ் இணையதளத்தில் பிரசுரிக்கலாம்.

உங்கள் கேள்விகளுக்கு பதில்: யுக்ரேன் மோதலில் இந்தியாவின் மீதான தாக்கம்

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்த மோதலின் தாக்கம் உலக அளவிலோ அல்லது உங்களது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். அதன் அடிப்படையில் அடுத்துவரும் செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

"போருக்கு பிள்ளைகளை அனுப்பாதீர்கள்" - ஸெலன்ஸ்கி

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட காணொளியில், ரஷ்ய தாய்மார்களுக்கு அவர்களுடைய பிள்ளைகளை போருக்கு அனுப்ப வேண்டாம் என்றும் இருக்கும் இடத்தில் விழிப்புடன் செயல்படுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

Instagram பதிவை கடந்து செல்ல
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

Instagram பதிவின் முடிவு

யுக்ரேனில் தனது படைகளில் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் இருப்பதை ரஷ்யா முதன்முறையாக புதன்கிழமை ஒப்புக்கொண்டது. அவர்களில் பலர் போருக்குப் பயிற்சி பெறாதவர்கள். மேலும், பலர் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டதாக ரஷ்யா கூறியிருந்தது.

குண்டுவெடிப்புகளுடன் தொடங்கிய நாள்

நிகோலேவ், டினீப்ரோ ஆகிய நகரங்களில் சனிக்கிழமை அதிகாலை குண்டுவெடிப்புகள் கேட்டதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசி யுக்ரேனிய மொழி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளால் நடத்தப்படும் டெலிகிராம் சமூக ஊடக சேனலில் பகிரப்படும் தகவலின்படி, டினிப்ரோவின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. அங்கு எத்தனை குண்டுவெடிப்புகள் நடந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேரியோபோலில் தொடர் தாக்குதல்கள்

யுக்ரேன் ரஷ்யா நெருக்கடி

மேரியோபோல் நகரில் சமீபத்திய தாக்குதல்களால் உயிரிழந்தவர்கள் கொத்துக் கொத்தாக புதைக்கப்பட்டுள்ளனர். நகரில் ஏற்பட்ட தாக்குதல் சேதத்தின் அளவு செயற்கைக்கோள் பட உதவி மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நகரில் சிக்கிய மக்கள் குடிநீருக்கு கூட அவதிப்படும் நிலை உள்ளது. அவர்கள் பனியை உருக்கி நீரைப் பருகும் காட்சிகளும், மைனஸ் டிகிரிக்கும் குறைவான உறை பனி சூழலில் மரத்தை வெட்டி நெருப்பு மூட்டி சமைக்கும் காட்சிகளும் வெளிவந்துள்ளன.

யுக்ரேன் ரஷ்யா நெருக்கடி

இந்த நகரம் ரஷ்யாவுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதை கைப்பற்றுவதன் மூலம், கிழக்கு யுக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்குழுவினர் கிரைமியாவில் உள்ள ரஷ்ய துருப்புகளுடன் கைகோர்க்க வாய்ப்புகள் எளிதாகும்.

இருளில் மூழ்கிய செர்னிஹிவ்

தீ மற்றும் பொருட்கள் இல்லாமல், முற்றுகையிடப்பட்ட வடக்கு செர்ன்ஹிவ் நகரில் நிலைமை ஒவ்வோர் நாளும் மோசமாகி வருகிறது,

ஷெல் மற்றும் வான் குண்டுவீச்சுகளின் தொடர்ச்சியான தாக்குதலை அந்த நகரம் எதிர்கொள்வதால் அதனுடன் இணைக்கப்பட்ட எரிவாயு, வெப்பம் மற்றும் குடிநீர் விநியோக சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மக்கள் பதுங்குமிடங்களில் தேக்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் தீர்ந்து வருகின்றன. மின்சாரம் அரிதாகவே சில இடங்களில் இயங்கி வருகிறது. நகரின் பெரும்பாலான இடங்கள் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவையின்றி முடக்கப்பட்டுள்ளது.

இந்த நகரில் போருக்கு முன்பு சுமார் 3 லட்சம் பேர் வாழ்ந்தனர்.

கீயவ் நகரில் தீக்கிரையான கிடங்கு

மேரியோபோல்

பட மூலாதாரம், SES

யுக்ரேனிய அவசரகால சேவை தகவலின்படி ஷெல் தாக்குதலின் விளைவாக, கீயவ் பகுதியில் உள்ள உணவு பதப்படுத்தும் சேமிப்புக் கிடங்கு சனிக்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது.

அங்குள்ள கள படங்களை அவசரகால சேவை வெளியிடப்பட்டுள்ளது.

தீப்பிழம்புகளில் இருந்து கிளம்பும் புகை மூட்டம் பல அடிக்கு மேலெழும்பி காணப்படுகிறது.

அங்கு இதுவரை உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை.

சுமிக்கு மனிதாபிமான பாதை

இதற்கிடையே, வடகிழக்கு நகரமான சுமிக்கு சனிக்கிழமை காலை மேலும் மனிதாபிமான பாதைகளை திறக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, யுக்ரேனில் ஆக்கிரமிப்பு படையெடுப்பை நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக தலையிடாது என்று அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

கடைசியாக வந்த தகவலின்படி ரஷ்யப் படைகளின் பெரும்பகுதி இப்போது கீயவ் நகரில் இருந்து 25 கி.மீ தூரத்தில் இருப்பதாக பிரிட்டன் பாதுகாப்புப் படையின் உளவுப்பிரிவு கூறியுள்ளது.

தலைநகருக்கு வடக்கே இருந்த ரஷ்ய படையினர் பல குழுக்களாக பிரிந்து சென்றுள்ளதாக பிரிட்டன் உளவுப்பிரிவு கூறுகிறது - இதன் மூலம் "கீயவ் நகரை சுற்றி வளைக்க ரஷ்யா முயலலாம் என கருதப்படுகிறது.

கீயவை போலவே செர்னிஹிவ், கார்ஹிவ், மேரியோபோல், சுமி ஆகிய நகரங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. அங்கு கடுமையான ஷெல் தாக்குதல்களை ரஷ்ய படையினர் நடத்தி வருகின்றனர்.

காணொளிக் குறிப்பு, யுக்ரேனில் இருந்து தப்பி போலாந்து நாட்டை அடைந்த இந்தியர்களின் நிலை என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: