அரிசி உணவு உண்பவரா நீங்கள்? பருவநிலை மாற்றத்துக்கு நீங்களும் காரணமாக இருக்கலாம்

பட மூலாதாரம், Getty Images
பெரும்பாலும் புவி வெப்பமயமாதலுக்கான பரவலான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் நாம் கேட்டிருப்போம். விமானப் பயணத்தை குறைக்க வேண்டும், இ-கார்களை பயன்படுத்த தொடங்க வேண்டும் போன்ற கருத்துகளை நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இதுவரை பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடைய அதேசமயம் பெரிதும் கேள்விப்படாத ஐந்து விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். அதில் சில உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கலாம்.
அரிசி

பட மூலாதாரம், Getty Images
ஐநாவின் தகவல்படி உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அரிசியை தங்கள் பிரதான உணவாக கருதுகிறார்கள்.
ஆனால் அரிசி என்பது சுற்றுச்சூழலுக்கு பிரச்னையான ஒரு பயிர் என்பதை உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
அரிசியை விளைவிக்க நமக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. அதிகப்படியான நீர் வயலில் தேங்குவது மண்ணில் இருக்கும் மிகச்சிறிய உயிரினங்கள் மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்ய காரணமாகிறது. இந்த மீத்தேன் பசுமைக்குடில் வாயுக்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களின் செயலால் உண்டாகும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் நெல் பயிரிடுவது 1-2 சதவிதம் வரை காரணமாகிறது. அதேபோன்று பயிர் அறுவடைக்கு பின்பு காய்ந்த பயிரை எரிப்பதால் வளிமண்டலத்தில் கரியமில வாயு சேர்கிறது.
நெற்பயிர் புவி வெப்பமயமாதலில் ஆற்றும் பங்கை கருத்தில் கொண்டு அதிகம் நீரை உறிஞ்சாத பல நெல் வகைகளை உருவாக்க உலகம் முழுவதும் உள்ள பல விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைய தேடல்கள்

பட மூலாதாரம், Getty Images
நீங்கள் இணையத்தில் ஏதேனும் தேடுவது எப்படி புவி வெப்பமயமாதலுக்கு வழிவகுக்கும் என யோசிக்கலாம்.
நீங்கள் இணையத்தில் ஏதேனும் தேடும்போது அதனால், சில கிராம் கரியமில வாயு வெளியேறுகிறது. ஆம் உங்கள் கணினியை இயக்குவதற்கான ஆற்றலால் வாயு வெளியேறுகிறது.
ஒவ்வொரு நாளும் உலகின் சுமார் ஒரு பில்லியன் மணி கணக்கில் வீடியோக்கள் ப்ளே செய்யப்படுகின்றன. இதனை ஓரளவு ஈடுகட்ட யூட்யூபை நிர்வகிக்கும் கூகுள் தனது சர்வர்களை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயக்கி வருகிறது. அதேபோன்று வீடியோக்களை பார்ப்பதனால் பயனர்கள் தரப்பிலிருந்து கார்பன் வெளியேற்றம் நிகழலாம்.
பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் 2016ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில் யூட்யூப் தளத்தால் 11.13 மில்லியன் டன்கள் கரியமில வாயு வெளியேற்றம் நிகழ்கிறது என்பது கண்டறியப்பட்டது.
நீர்த்தேக்கங்கள்

பட மூலாதாரம், Getty Images
நிலத்தில் நீரை தேக்கி வைக்கும்போது நீருக்கு அடியில் உள்ள தாவரங்கள் அல்லது பிற பொருட்கள் அழுகி மீத்தேனை உருவாக்கும். இதேதான் நெல் விவசாயத்திலும் ஏற்படுகிறது.
கனடாவின் வான்கோவார் நகரில் உள்ள வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், உலக அளவில் ஓர் ஆண்டில் வெளியேற்றப்படும் பசுமைக்குடில் வாயுவில் 1.3% நீர்த்தேக்கங்களால் ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றனர். இது கனடா நாட்டின் மொத்த வெளியேற்றத்தின் அளவு.
இருப்பினும் பல அணைகளில் இருந்து நாம் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்கிறோம் என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
சீஸ்

பட மூலாதாரம், Getty Images
மாட்டிறைச்சி மற்றும் இளம் ஆட்டின் இறைச்சிக்கு பிறகு இறைச்சி மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி துறையில் சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டி கார்பன் உமிழ்வில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒரு கிலோ பாலாடைக் கட்டிக்கு 13.5 கிலோ கிராம் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது. எனவே கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, வான் கோழி இறைச்சியை காட்டிலும் பாலாடைக் கட்டி பருவநிலை மாற்ற காரணிகளின் பட்டியலில் முந்தி செல்கிறது.
ஒரு கிலோ பாலாடைக் கட்டியை உருவாக்க 10 லிட்டர் பால் தேவைப்படுகிறது. சர்வதேச அளவில் பால் பொருட்கள் உற்பத்தி துறை 4% பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்துக்கான காரணமாக உள்ளது. பசு போன்ற விலங்குகள் வளிமண்டலத்திற்கு கரியமில வாயுவை காட்டிலும் அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய மீத்தேன் வாயு வெளியேற காரணமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் கல்வி

பட மூலாதாரம், Getty Images
இது ஒரு நேர்மறையான காரணம். உலகளவில் பெண்கள் பள்ளிக்கு சென்று சம வாய்ப்புகளை பெறுவதால் பருவலை நிலை மாற்றத்தை குறைக்க முடியும்.
அதிகம் படித்த பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதில்லை. அதாவது ஆரம்பக் கல்வி வரை படித்த பெண்களை காட்டிலும் பட்டப்படிப்பு படித்த பெண்கள் குறைவான எண்ணிக்கையிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள விரும்புகிறார்கள். எனவே மக்கள் தொகை எண்ணிக்கை குறைகிறது. இது பூமியின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மக்கள் தொகை எண்ணிக்கை குறைவது என்பது கார்பனை வெளியேற்றும் மக்களின் எண்ணிக்கை குறைகிறது என்று பொருள் தரும்.
அதேபோன்று கல்வி கற்பதால் பெண்கள் பருவநிலை மாற்றம் குறித்து செயல்படும் தலைவர்களாகும் வாய்ப்புகள் உருவாகிறது. நாடாளுமன்றத்தில் அதிக பெண் உறுப்பினர்களை கொண்ட நாடுகள் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்துகின்றன என்றும், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான கடினமான கொள்கைகளை கொண்டுள்ளன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று இந்த நாடுகள் பல சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களையும் அங்கீகரிக்கின்றன.
பிற செய்திகள்:
- ஜெய் பீம் திரைப்படத்துக்குப் பின்னால் நடந்த உண்மைக் கதை என்ன? நிஜ நாயகர்கள் யார்?
- குடிசையிலிருந்து ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளைஞர்
- தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரிப்பு
- ஐந்து மாநிலங்களின் தேர்தல் காரணமாகதான் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டதா?
- “அரிசிக்கு தட்டுப்பாடு; மரவள்ளி கிழங்கை உண்ணுங்கள்” – இலங்கை அமைச்சரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












