தாலிபன் கைக்கு வந்தபின் ஆப்கன் பொருளாதாரம் என்ன ஆகும்?

ஆப்கன் தலைநகர் காபூலில் தாலிபன் போராளிகள்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கான வெளிநாட்டு நிதியுதவியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
    • எழுதியவர், ஆண்ட்ரூ வாக்கர்
    • பதவி, பிபிசி உலக சேவை பொருளாதார செய்தியாளர்

ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் எளிதில் நொறுங்கி விடக்கூடியதாகவும், உதவிகளை நம்பி இயங்குவதாகவும் உள்ளது என பல மாதங்களுக்கு முன்பு உலக வங்கி கணித்திருந்தது.

நாட்டை தாலிபன்கள் கைப்பற்றியுள்ள நிலையில், வெளிநாட்டு நிதியுதவிகள் கிடைப்பது இனி நிச்சயமில்லை என்பதால் ஆப்கானிஸ்தானின் பொருளாதார வாய்ப்புகள் இப்போது இன்னும் மோசமான நிலையை எட்டியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் ஏராளமான தாது வளங்கள் உள்ளன. ஆனால், அவற்றை எடுப்பதற்கு அரசியல் சூழ்நிலை தடையாக உள்ளது.

ஆப்கானிஸ்தானின் மொத்த தேசிய வருமானத்தில் (மொத்த தேசிய உற்பத்தி எனப்படும் ஜிடிபி அல்ல. கிட்டத்தட்ட ஜி.டி.பி. போன்றது இந்த குறியீடு) 22 சதவீதம் நிதியுதவி மூலம் வருவது என்கிறது உலக வங்கியின் 2019 ஆண்டு தரவு.

ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இது 49 சதவீதமாக இருந்தது என்கிறது உலக வங்கியின் புள்ளிவிவரம். .

இப்போது இந்த நிதியுதவிகள் வருவது நிச்சயமில்லை. ZDF என்ற ஊடகத்திடம் கடந்தவாரம் பேசிய ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கே மாஸ் "தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி, ஷரியா சட்டத்தையும் அறிமுகம் செய்வார்கள் என்றால் நாங்கள் மேற்கொண்டு ஒரு சென்ட் கூட தரமாட்டோம்," என்று கூறியிருந்தார்.

நிதியுதவி செய்கிற மற்றவர்களும் நிகழ்வுகளை கவனமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஊழல் பிரச்சனை

ஆப்கன் பொருளாதாரத்தின் நொறுங்கும் தன்மை தொடர்பாக உலக வங்கி குறிப்பிடுவது அதன் பாதுகாப்புத் துறை செலவினம் குறித்துதான். தாலிபன் நாட்டைக் கைப்பற்றுவதற்கு முன்பு ஆப்கானிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29 சதவீதம் பாதுகாப்புத் துறைக்கு செலவிடப்பட்டது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் சராசரியாக 3 சதவீதம்தான் செலவிடுகின்றன.

இன்னொரு முக்கியப் பிரச்னை ஊழல்.

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு மூலதனம் குறைவாக இருப்பதற்கு பாதுகாப்புப் பிரச்சனையும் ஊழலும் இரு முக்கியக் காரணங்கள்.

கடந்த இரண்டாண்டுகளில் ஆப்கானிஸ்தானில் புதிய தொழில் திட்டங்கள் எதிலும் அன்னிய மூலதனம் வருவதாக அறிவிப்பு இல்லை என்கிறது ஐ.நா. 2014 முதல் இத்தகைய 4 புதிய தொழில் திட்டங்களுக்கான மூலதனம் மட்டுமே அறிவிக்கப்பட்டது.

இதே குறிப்பிட்ட காலகட்டத்தில் குறைவான மக்கள் தொகை கொண்ட இரண்டு தெற்காசிய நாடுகளை ஒப்பிடுவதென்றால், நேபாளம் 10 மடங்கும் இலங்கை 50 மடங்கும் இத்தகைய மூலதனத்தை ஈர்த்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் தனியார் துறை மிகச் சிறியது என்கிறது உலகவங்கி. உற்பத்தித் திறன் குறைவாக உள்ள விவசாயத்தில்தான் வேலைவாய்ப்பு குவிந்திருக்கிறது. 60 சதவீத குடும்பங்கள் விவசாயத்தில் இருந்துதான் ஏதோ கொஞ்சம் வருமானம் பெறுகின்றன.

அதே நேரம் நாட்டில் மிகப்பெரிய சட்டவிரோதப் பொருளாதாரம் இயங்குகிறது. சட்டவிரோத சுரங்கத் தொழிலும், அபின் உற்பத்தி, கடத்தலும் நடக்கிறது. போதைப் பொருள் வணிகம்தான் தாலிபன்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரம்.

தாது வளம்

2001 அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு ஆப்கன் பொருளாதாரம் வளர்ந்தது என்று சொல்லப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் தொடர்பான புள்ளிவிவரங்கள் நம்பகமானவை அல்ல. ஆனால், அந்தப் புள்ளிவிவரங்கள் சொல்கிறபடி பார்த்தால், 2003 முதல் 10 ஆண்டு காலம் அந்நாட்டுப் பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சி கண்டது என்கிறது உலக வங்கி.

அதன் பிறகு வளர்ச்சி வேகம் குறைந்து, 2015 - 20 காலகட்டத்தில் சராசரியாக 2.5 சதவீத வளர்ச்சி இருந்தது. உதவிகள் குறைந்ததால் இது நடந்திருக்கலாம்.

ஓபியம் பாப்பி செடி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, அபின் உற்பத்திக்கு மூலப் பொருளை வழங்கும் ஓபியம் பாப்பி செடி, ஆப்கன் தோட்டமொன்றில் விளையும் காட்சி.

இந்த நாட்டில் குறிப்பிடத்தகுந்த இயற்கை வளங்கள் உள்ளன. சிறந்த பாதுகாப்பும், குறைவான ஊழலும் இருந்திருந்தால், சர்வதேச முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியிருப்பார்கள்.

செம்பு, கோபால்ட், நிலக்கரி, இரும்புத் தாது போன்ற பல தாதுப் பொருள்கள் இந்நாட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. எண்ணெய், எரிவாயு, ரத்தினக் கற்களும் கிடைக்கின்றன.

மொபைல் போன்களிலும், மின்சார கார்களிலும் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுக்குத் தேவையான லித்தியம் இந்நாட்டில் ஏராளமாக கிடைக்கிறது. மோட்டார் தொழில்துறை 'ஜீரோ கார்பன் உமிழ்வு' என்ற இலக்கை நோக்கி நகரும் நிலையில், கார் பேட்டரிகளும் அவற்றுக்குத் தேவையான லித்தியமும் முக்கியத்துவம் பெறுகின்றன.

பெட்ரோலியத்துக்கு சௌதி அரேபியா போல லித்தியத்துக்கு ஆப்கானிஸ்தான் ஆகலாம் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை குறிப்பு ஒன்று கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட இந்த வாய்ப்பு பயன்படுத்தப்படவே இல்லை. ஆப்கானிஸ்தான் மக்களும் இதில் இருந்து பயன்பெறவில்லை.

வெளிநாட்டு சக்திகள்

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஈடுபட சீனா மிகுந்த ஆர்வமாக இருப்பதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய சக்திகளைவிட சீனாவுக்கு தாலிபன்களுடன் நல்ல உறவு இருக்கிறது. எனவே, புதிய ஆட்சி தாக்குப் பிடித்து நிற்குமானால், சீனாவுக்கு சாதகமான நிலைமை இருக்கும்.

எண்ணெய், செம்பு துறைகளில் சீன நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் பெற்றுள்ளன. ஆனால், பெரிதாக எதுவும் நடக்கவில்லை.

தற்போது சீனா ஆர்வம் காட்டும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. இரண்டு நாடுகளுக்கும் இடையில் குறுகிய எல்லைப் பகுதி ஒன்றும் உள்ளது. எனவே, சீனாவுக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.

ஆனால் சீன அரசு நிறுவனமோ, வணிக நிறுவனமோ வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் ஈடுபாடு காட்டும். பாதுகாப்புப் பிரச்சனையும், ஊழல் பிரச்சனையும் போதிய அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதாகவும், இதனால் குறிப்பிடத்தக்க உற்பத்தியை எடுக்க முடியும் என்றும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே ஈடுபாடு காட்டுவார்கள்.

தற்போது பொறுப்பேற்கவுள்ள தாலிபன் ஆட்சியாளர்கள் முன்பு இருந்த தாலிபன் ஆட்சியாளர்களைவிட திறமையானவர்களா? விரும்பத்தக்க சூழ்நிலையை அவர்களால் ஏற்படுத்த முடியுமா? என்று பார்த்தபிறகே சீனாவாக இருந்தாலும், வேறு எங்கிருந்து வந்தாலும் முதலீட்டாளர்கள் முடிவெடுப்பார்கள்.

உடனடி எதிர்காலத்தில் நிதி சார்ந்த நிச்சயமற்ற சூழ்நிலையும், ஸ்திரமற்ற நிலையும் ஏற்படும். ஏனென்றால், ஏராளமான மக்கள் தங்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முயற்சி செய்துவருகிறார்கள்.

வங்கி உரிமையாளர்கள், பணம் மாற்றுகிறவர்கள், வணிகர்கள், கடைக்காரர்கள் ஆகியோரின் உயிரும் உடமைகளும் பாதுகாக்கப்படும் என்று ஒரு தாலிபன் செய்தித் தொடர்பாளர் கூறியதாக பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஆப்கன் இஸ்லாமிக் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிதிசார்ந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உயிருக்கு பாதுகாப்பு உள்ளதா என்பதுகூட விவாதத்துக்கு உள்ளாயிருப்பது அதிர்ச்சியளிப்பது. ஆப்கானிஸ்தான் நிதி அமைப்பு செயல்படவேண்டும் என்றால் அவர்கள் நம்பிக்கையோடு இருப்பது அவசியம். அதைப் போல வாடிக்கையாளர்களும் தங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதாக உணரவேண்டும். அது உடனடியாக நடக்காது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :