லிபியாவில் கூலிப் படையினரைப் பயன்படுத்தும் ரஷ்யா - பிபிசி புலனாய்வில் அம்பலம்

AFP

பட மூலாதாரம், Reuters

சுமார் 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வரும் ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ரஷ்யா தனது கூலிப் படையினரை எந்த அளவுக்குப் பயன்படுத்தி வருகிறது என்பது பிபிசியின் புலனாய்வில் அம்பலமாகியிருக்கிறது. அவர்களுக்கு ரஷ்ய ராணுவத்துடன் தொடர்பு இருப்பதையும், அவர்களது செயல்பாடுகள் போர்க் குற்றங்களுக்கு நிகராக இருப்பதும் பிபிசியின் புலனாய்வில் தெரியவந்திருக்கிறது.

வாக்னர் கூலிப்படையில் சேர்ந்து சண்டையிடும் ஒருவர் விட்டுச்சென்ற சாம்சங் டேப்லெட் மூலம் உள்நாட்டுப் போரில் அந்தக் குழுவின் முக்கியமான செயல்பாடுகளும் குழுவுக்காகச் சண்டையிடுவோரின் குறியீடுகளும் கிடைத்திருக்கின்றன.

செயல்திறன் மிக்க ராணுவ உபகரணங்களுக்கான "ஷாப்பிங் பட்டியல்" பிபிசிக்கு கிடைத்திருக்கிறது. இதை ஆய்வு செய்திருக்கும் நிபுணர்கள் இது ரஷ்ய ராணுவத்திடம் இருந்து மட்டுமே வந்திருக்க முடியும் என்று கூறுகின்றனர்.

ஆனால் வாக்னர் குழுவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று ரஷ்யா மறுத்திருக்கிறது.

2014 இல் கிழக்கு உக்ரைனில் நடந்த சண்டையின்போது ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தபோது வாக்னர் குழு அடையாளம் காணப்பட்டது. அதன் பிறகு சிரியா, மொசாம்பிக், சூடான் மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த சண்டைகளில் இந்தக் குழு ஈடுபட்டிருக்கிறது.

லிபியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் கலிஃபா ஹப்தாரின் படையில் கடந்த 2019-ஆம் ஆண்டு வாக்னர் கூலிப்படையினர் சேர்ந்தனர். அப்போதுதான் லிபியாவில் வாக்னர் குழுவினர் இருப்பது முதல்முறையாகத் தெரியவந்தது. அந்தக் காலகட்டத்தில் திரிபோலியில் உள்ள ஐ.நா. ஆதரவு பெற்ற அரசுக்கு எதிராகத் தாக்குதலை ஹப்தார் நடத்தியிருந்தார். கடந்த ஆண்டில் போர்நிறுத்தத்தை அறிவித்தார்.

ஹப்தார்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ஜெனரல் கலீபா ஹஃப்தார், திரிபோலியில் உள்ள அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினார்

வாக்னர் கூலிப்படை மிகவும் ரகசியமானது. அந்தக் குழுவுக்காகச் சண்டையிட்ட இருவரை பிபிசியால் அணுக முடிந்தது. எப்படிப்பட்டவர்கள் வாக்னர் கூலிப்படையில் சேருகிறார்கள் என்பதை அவர்கள் விவரித்தனர். அந்தக் குழுவில் நடத்தை விதிமுறைகள் ஏதுமில்லை என்பதும் தெரியவந்தது.

பிடிபட்டவர்களை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பிபிசியிடம் பேசியவர்களில் ஒருவர் இதை தயக்கமே இல்லாமல் ஒப்புக் கொண்டார். "இருக்கும் உணவைச் சாப்பிடுவதற்கு கூடுதலாக ஒரு வாயை யாரும் விரும்புவதில்லை" என்று அவர் கூறினார்.

பிபிசி அரபி மற்றும் பிபிசி ரஷ்யன் ஆகியவை தயாரித்த "கூலிப்படையினர்: வாக்னர் குழுவின் உள்ளே" என்ற தொலைக்காட்சி ஆவணப்படத்தில் கூறப்பட்டவற்றுக்கு இந்தக் கருத்துகள் உறுதி செய்கின்றன. பொதுமக்களை வேண்டுமென்றே கொல்வது, போர்க்குற்றங்கள் ஆகியவற்றையும் இது அம்பலப்படுத்தியது.

தமது உறவினர்கள் கொல்லப்பட்டபோது, இறந்தவர் போல நடித்து தாம் பிழைத்தது பற்றி லிபிய கிராமத்துக்காரர் ஒருவர் கூறினார். அவரது வாக்குமூலம் கொன்றவர் யார் என்பதை அடையாளம் காண பிபிசிக்கு உதவியது.

வாக்னர்
படக்குறிப்பு, இறந்தது போல நடித்து தப்பியதாக லிபிய கிராமத்துக்காரர் ஒருவர் தெரிவித்தார்

வாக்னர் கூலிப்படையின் போர்க்குற்றத்துக்கு இன்னொரு ஆதாரமும் இருக்கிறது. லிபிய அரசின் ராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் வாக்னர் கூலிப்படையிடம் சரணடைந்தபோது அவர் இருமுறை வயிற்றில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது நண்பர் பிபிசியிடம் விவரித்தார்.

மக்கள் வாழும் பகுதிகளில் கண்ணிவெடிகளையும், சிக்க வைக்கும் பொறிகளையும் வைத்த சம்பவங்கள் பிபிசிக்கு கிடைத்த சாம்சங் டேப்லெட் மூலம் தெரியவந்திருக்கிறது.

குறியிட்டு எச்சரிக்கை செய்யாமல் மக்கள் வாழும் பகுதிகளில் கண்ணிவெடிகளை வைப்பது போர்க்குற்றமாகும்.

லிபியாவில் வாக்னர் குழுவின் செயல்பாடுகள் குறித்த பிபிசியின் செய்தி அறிக்கை வெளியான சிலமணி நேரங்களில் மறைந்த லிபிய அதிபர் மம்மர் கடாஃபியின் மகனுக்கு பிடியாணை ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டிருப்பதாக லிபிய ராணுவ வழக்கறிஞர் அலுவலகத்தின் துணை வழக்கறிஞர் முகமது கரோடா அறிவித்தார்.

கடாபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாமுக்கு ரஷ்யாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது

கடந்த வாரம் வெளியிடப்பட்ட அந்த உத்தரவில், திரிபோலி அரசுக்கு எதிராக ஹப்தாரின் படை தாக்குதல் நடத்திய போது, அவர்களுக்கு ஆதவாக இயங்கிய வாக்னர் கூலிப்படையினர் இழைத்த குற்றங்களுக்காக கடாஃபியின் மகனான சைஃப் அல்-இஸ்லாம் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

லிபியாவில் 2011-ஆம் ஆண்டு நடந்த அரபு எழுச்சியின்போது அவர் கைது செய்யப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பபட்டது. பின்னர் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.

ரஷ்யாவுடனும் வாக்னர் கூலிப்படையுடனும் சைஃப் அல்-இஸ்லாமுக்கு தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இவரே லிபியாவை ஆள வேண்டும் என்று ரஷ்யா விரும்புவதாகவும் நம்பப்படுகிறது.

அம்பலப்படுத்தும் சாம்சங் டேப்லெட்

கடந்த ஆண்டு திரிபோலிக்குத் தெற்குப் பகுதியில் இருந்து வாக்னர் கூலிப்படையினரை அரசுப் படைகள் விரட்டியடித்தபோது அந்தக் குழுவில் இருந்த ஒருவர் இந்த டேப்லெட்டை விட்டுச் சென்றிருக்கிறார்.

யுத்த முன்களத்தை ரஷ்ய மொழியில் குறிக்கும் வரைபடங்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றிருப்பது லிபியாவில் வாக்னர் கூலிப்படையினரின் பரவலை உறுதி செய்வதுடன் அவர்களது நடவடிக்கைகளின் வீச்சையும் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெளிப்படுத்துகிறது.

டேப்லெட்
படக்குறிப்பு, பிபிசிக்கு கிடைத்த டேப்லெட்டில் ரஷ்ய மொழி வரைபடங்கள் இருக்கின்றன

ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட ஒரு காட்சியும், அடையாளம் காணப்பட்டுவிட்டதாக பிபிசி நம்பும் வாக்னர் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவரது ரகசியக் குறியீட்டுப் பெயர்களும் இந்த டேப்லெட்டில் இருக்கின்றன. தற்போது பாதுகாப்பான ஓர் இடத்தில் டேப்லெட் வைக்கப்பட்டிருக்கிறது.

கூலிப்படையின் "ஷாப்பிங் லிஸ்ட்"

வாக்னர் கூலிப்படையினர் இயங்கும் இடத்தில் கைப்பற்றப்பட்டதாகக் கருதப்படும் ராணுவ உபகரணங்களின் விரிவான பட்டியலைக் கொண்ட 10 பக்க ஆவணம் ஒன்று லிபிய உளவுத்துறை வட்டாரங்கள் மூலம் பிபிசிக்கு கிடைத்திருக்கிறது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி 19 எனத் தேதியிடப்பட்ட இந்த ஆவணம், வாக்னர் கூலிப்படைக்கு யார் நிதியுதவியும் ஆதரவும் அளிக்கிறார்கள் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. நான்கு டாங்குகள், நூற்றுக்கணக்கான காலாஷ்நிகோவ் துப்பாக்கிகள், துல்லியமான ரேடார் அமைப்பு என பெரிய ராணுவ நடவடிக்கையை முடிப்பதற்குத் தேவையானவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

இத்தகைய ஆயுதத் தொழில்நுட்பங்களில் சில ரஷ்ய ராணுவத்திடம் மட்டுமே இருக்கக்கூடியவை என்று இந்தப் பட்டியலை ஆய்வு செய்த ஒரு ராணுவ நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

திமித்ரி உட்கினுக்கு தொடர்பு இருக்கிறது என்பதைக் காட்டுவதாக வாக்னர் கூலிப்படை குறித்து ஆய்வு செய்யும் மற்றொரு நிபுணர் தெரிவித்தார்.

திமித்ரி உட்கின் என்பவர் ரஷ்யாவின் முன்னாள் ராணுவ உளவாளி. அவர்தான் வாக்னர் கூலிப்படையை நிறுவியதாகவும் தனது முன்னாள் ரகசியப் பெயரான வாக்னர் என்ற பெயரை அதற்குச் சூட்டியதாகவும் நம்பப்படுகிறது. அவரைத் தொடர்பு கொள்ள பிபிசி முயன்றது. ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

இந்த ஆயுதப் பட்டியல் மற்றும் மற்றொரு ஆவணத்தில் எவ்ரோ போலிஸ் மற்றும் ஜெனரல் டைரக்டர் என்ற சொற்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடனுக்கு நெருக்கமான பெரும் பணக்காரரான யெவ்ஜெனி பிரிகோஷின் என்பவருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதைக் காட்டுவதாக மற்றொரு நிபுணர் தெரிவித்தார்.

பிரிகோஷின் கட்டுப்பாட்டில் உள்ள சிரிய எண்ணெய்க் களங்களில் முதலீடு செய்ததற்காக எவ்ரோ போலிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2018-ஆம் ஆண்டில் அமெரிக்க நிதித்துறை தடை விதித்தது.

மேற்கத்திய ஊடகவியலாளர்களின் புலன்விசாரணைகளில் வாக்னர் கூலிப்படைக்கும் பிரிகோஷினுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால் அவர் எவ்ரோ பொலிஸ் அல்லது வாக்னர் குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார்.

கோப்பு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கோப்பு

லிபியாவில் சண்டையை நிறுத்துவதற்கும், அமைதியை நிலைநாட்டி அரசியல் தீர்வு காண்பதற்கும் தன்னால் ஆனதை ரஷ்யா செய்து வருவதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறது.

லிபியாவில் வாக்னர் கூலிப்படை பற்றிய விவரங்கள் அனைத்தும் திரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் ரஷ்யாவை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

வாக்னர் என்றால் என்ன?

அலுவல்பூர்வமாகச் சொன்னால் அப்படி ஒன்றே கிடையாது. ஆனால் 2014 ஆம் ஆண்டில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகள் சண்டையிட்ட காலத்தில் இருந்து இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் வாக்னர் குழுவில் ஒப்பந்த அடிப்படையில் இணைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

லிபியாவில் 2019 முதல் 2020 வரை ஜெனரல் கலீஃபா ஹப்தாருடன் சேர்ந்து சுமார் 1000 வாக்னர் கூலிப்படையினர் சண்டையிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் முன்னர் இடம்பெற்றிருந்த ஒருவரிடம் வாக்னர் கூலிப்படை குறித்து விவரிக்குமாறு பிபிசி ரஷ்யா கேட்டது. "நாட்டுக்கு வெளியே நாட்டின் நலனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு" என்று அவர் பதில் அளித்தார்.

"போர் நிபுணர்கள்", வேலை தேடுவோர், நாட்டுக்காகச் சேவை செய்ய நினைப்போர் ஆகியோர் இந்தக் குழுவில் சேருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் குழுவில் தெளிவான நடத்தை விதிமுறைகள் ஏதும் கிடையாது என்று பிபிசியிடம் பேசிய இவரைப் போன்ற மற்றொருவர் தெரிவித்தார். பிடிபட்ட ஒரு கைதிக்கு தப்பிச் செல்லும் அறிவு இல்லாவிட்டாலோ, அடிமை போல வேலை செய்ய முடியாவிட்டாலோ, "முடிவு வெளிப்படையானது" என்று கூறினார்.

"அவர்கள் செயல்படட்டும், இதன் விளைவு என்ன என்பதைக் கவனிப்போம். அது நன்றாக வேலை செய்தால், நமது நலனுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கேடாக மாறினால் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறிவிடலாம்" இதுதான் வாக்னர் கூலிப்படை விவகாரத்தில் ரஷ்ய அரசின் நிலைப்பாடு என்கிறார் ரஷ்ய சர்வதேசக் கவுன்சிலில் பணியாற்றி வரும் நிபுணரான ஆன்ட்ரே சுப்ரிஜின்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :