ஆப்கானிஸ்தான் நகரங்களை நோக்கி முன்னேறும் தாலிபன்கள்: ஊரடங்கு போட்ட அரசாங்கம்

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களை நோக்கி தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறி வருவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது அரசாங்கம்.
இதன்படி, தலைநகர் காபூல் உட்பட மூன்று மாகாணங்களைத் தவிர, வேறு எங்கும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை எவ்வித நடமாட்டத்துக்கும் அனுமதி கிடையாது.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த சர்வதேச படைகள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கிய பிறகு, ஆளும் அரசுப் படையினருக்கும் தாலிபன்களுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களாக மோதல் வலுத்து வருகிறது. தாலிபன் போராளிகள் குழு அந்த நாட்டின் பிராந்தியங்களில் பாதி அளவை கைப்பற்றி விட்டதாக கருதப்படுகிறது.
ஆப்கனில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்ட உடனேயே துரிதமாக செயல்பட்டு, எல்லை கடவுப்பாதைகள் மற்றும் எல்லை கிராமப்புற பகுதிகளில் உள்ள நிலப்பகுதியை தாலிபன்கள் மீண்டும் தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளனர்.
பிபிசி ஆப்கானிஸ்தான் செய்தியாளர் செகந்தர் கெர்மானி இது பற்றி கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுப்பில் மெத்தனம் காட்டப்பட்டால், அதிக மக்கள் வாழும் நகர்ப்புறங்களை நோக்கி தாக்குதல்கள் அதிகமாகும் என்ற கவலைகள் உள்ளன," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலம் வெளியேற்றப்பட்ட அடிப்படை இஸ்லாமியவாத போராளிகள் குழுவான தாலிபன், தற்போது அந்த நாட்டுக்கு வெளியில் இருந்து பொருட்கள் வரும் பாதைகளை துண்டிக்கும் வகையில், முக்கிய சாலைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
அந்த இயக்கத்தின் ஆயுத போராளிகள் முக்கிய நகரங்களை நெருங்கி வந்தாலும், இதுவரை ஒன்றை கூட அவர்களால் கைப்பற்ற இயலவில்லை.
இந்த நிலையில் ஆப்கன் உள்துறை அமைச்சகம், தாலிபன்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், வன்முறையை தடுக்கவும் ஊரடங்கு பிற்பபிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. காபூல், பஞ்ச்ஷிர், நங்கர்ஹர் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாலிபன்கள் முன்னேறி வரும் வேளையில், கந்தஹார் நகரின் வெளிப்பகுதியில் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல்கள் நடந்து வருகின்றன.
அந்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை போராளிகள் குழுக்களுக்கு எதிரான வான் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியது. ஆனால், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள்ளாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் அலுவல்பூர்வமாக வெளியேற வேண்டும். அதற்குப் பிந்தைய மாதங்களில் நடக்கப்போகும் நிகழ்வுகள் பற்றிய கவலைகள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன.
2001ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபன்களை தாக்குதல் நடவடிக்கை மூலம் அமெரிக்கா தலைமையிலான படையினர் ஆட்சிக்கட்டிலில் இருந்து வெளியேறச் செய்தனர். அமெரிக்கா மீது செப்டம்பர் 11இல் நடந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட பிற தீவிரவாதிகளுக்கு தாலிபன் அடைக்கலம் கொடுத்து வந்தது.
படை விலக்கலை நியாயப்படும் அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.
மேற்கு நாடுகளுக்கு எதிரான சதியில் வெளிநாட்டு ஜிஹாதிகள் ஈடுபடுவதற்கான களமாக ஆப்கானிஸ்தான் இல்லாமல் இருப்பதை அமெரிக்க படையினர் உறுதிப்படுத்தி விட்டதால் அவர்களை பின்வாங்கிக் கொள்வது சரியே என்பது அதிபர் பைடனின் நிலைப்பாடு.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அமெரிக்க படையினர் வெளியேறினார்கள். ஒருகாலத்தில் இந்த இடம்தான் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க படையினரின் படைத்தளமாக விளங்கி வந்தது. ஆப்கானிஸ்தானில் விரிவான அமெரிக்க நடவடிக்கைகளின் மைய முகாமாகவும் இந்த படைத்தளம் இருந்தது.
இதற்கிடையே, ஆறு மாதங்களுக்கு உள்ளாக ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் தாலிபன்கள் கொண்டு வரலாம் என்று சில அமெரிக்க ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஆனால், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், "ஆப்கனில் ஆளும் அரசுப் படையினராலும் முன்னேற முடியும். தாலிபன்களிடம் இருந்து பிராந்தியத்தை மீண்டும் தன்வசமாக்கிக் கொள்ளும் முன்பாக அவர்கள் முன்னேறி வருவதை தடுக்கவே படையினர் முன்னுரிமை தர வேண்டும்," என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- இலங்கை ஊடக ஜாம்பவான், ஆர்.ராஜமகேந்திரன் காலமானார்
- நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் படுகாயம்: தோழி பலி
- உத்தரபிரதேசத்தில் ஜீன்ஸ் அணிந்ததற்காக 17 வயது சிறுமி கொலையா? சம்பவத்தின் பின்னணி என்ன?
- வெறுங்கால்களில் ஓடி இந்தியாவுக்கு அபார வெற்றி தேடி தந்த தயான் சந்த்
- 30 ஆண்டு கால தாராளமய பொருளாதாரம்: நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் செய்த மாயாஜாலம்
- தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியினர் தாக்கப்படுவது ஏன்? நிறப்பாகுபாடு காட்டுகிறார்களா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













