தமிழக முதல்வரிடம் பேசியது என்ன? பாஜக மாநில தலைவர் எல். முருகன் பேட்டி
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!!
தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்

பட மூலாதாரம், @CMOTamilNadu
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அக்டோபர் 9ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் சந்தித்துப்பேசினார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து பிறகு செய்தியாளர்களிடம் முருகன் பேசினார்.
அப்போது அவர், இந்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சீர்திருத்த சட்டத்தை ஆதரித்து தமிழக முதல்வர் விளக்கி வரும் நடவடிக்கைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன் என்று கூறினார்.
விவசாய சன்மான நிதி முறைகேடுகள் தொடர்பாகவும் அவை குறித்தும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
"கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் வெளிவந்த சர்ச்சைக்குரிய தகவல்களை பதிவிட்டவர்கள் மீது மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது. அது தொடர்பாக ஒரு சிலர் கைது செய்யப்பட்டாலும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்" என்று முருகன் கூறினார்.
அதிமுக முதல்வர் வேட்பாளராக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை அவரது கட்சி தேர்வு செய்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன் என்றும் முருகன் தெரிவித்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளராகத்தானே அறிவிக்கப்பட்டிருக்கிறார், உங்களுடைய கூட்டணி சார்பில் அவர் வேட்பாளரா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதை முருகன் தவிர்த்தார்.

ஐ.நாவின் உலக உணவு திட்டத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு

பட மூலாதாரம், Reuters
பசியை போக்க பல முயற்சிகளை முன்னெடுத்த ஐ.நாவின் உலக உணவுத் திட்டம் அமைப்புக்கு 2020ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
"போர் மற்றும் சண்டைகளுக்கு பசி என்ற விஷயம் காரணமாகாமல் இருக்க இந்த அமைப்பு எடுத்த முயற்சிகள் உந்துதலாக இருந்ததாக" நார்வே நாட்டின் நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.
இதற்கான பரிசுத்தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
ஓஸ்லோவில் உள்ள நார்வேஜியன் நோபல் இன்ஸ்டிட்யூட்டில்தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர் அக்டோபர் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இது மிகவும் "பெருமைமிக்க தருணம்" என்று ஐ.நாவின் உலக உணவு திட்டத்துக்கான செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
88 நாடுகளில் ஆண்டுக்கு 97 மில்லியன் மக்களுக்கு உலக உணவுத்திட்ட அலுவலகம் உதவி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
"இந்த பரிசு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, பசியால் உலகில் எவ்வளவு பேர் தவிக்கிறார்கள் என்பதை பலரும் உணர வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று நார்வேஜியன் நோபல் கமிட்டியின் தலைவர் பெரிட் ரெஸ்- ஆண்டர்சன் கூறினார்.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக சுமார் 107 அமைப்புகளும், 211 தனி நபர்களும் பரிந்துரைக்கப்பட்டனர்.
அதில், உலக சுகாதார அமைப்பு மற்றும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரெட்டா டூன்பெர்க் பெயர்கள் இடம்பிடித்திருந்தன.
கடந்த 5ஆம் தேதி மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, 6ஆம் தேதி இயற்பியலுக்கான நோபல் பரிசு, 7ஆம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசு, 8ஆம் தேதி இலக்கியத்துக்கான நோபல் பரிசு, 9ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
விருதுக்கு அறிவிக்கப்பட்டவர்களுக்கும் அமைப்புகளுக்கும் வழக்கமான நடைமுறைப்படி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுடன் அவரது மனைவி செல்ல நீதிமன்றம் அனுமதி

பட மூலாதாரம், ADMK PRABHU
கள்ளக்குறிச்சி தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பிரபுவை மணந்த சௌந்தர்யா அவரது கணவருடன் செல்லலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பிரபு தியாகதுருகத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகள் சௌந்தர்யாவைத் திருமணம் செய்து கொண்டார். இதற்கு சௌந்தர்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து, சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை செப்டம்பர் 9ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் - கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு, "பிரபு உங்களை வலியுறுத்தி திருமணம் செய்துகொண்டிருக்கிறாரா, உங்கள் தந்தை கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்பன உள்ளிட்ட கேள்விகளை கேட்டனர்.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், சௌந்தர்யா 18 வயது நிரம்பியவர் என்பதாலும் தன்னை யாரும் கட்டாயமாக, வலியுறுத்தி திருமணம் செய்யவில்லை என்று கூறுவதாலும் பிரபுவுடன் செல்ல அனுமதி அளித்து, வழக்கை முடித்துவைத்தனர்.


பட மூலாதாரம், Facebook
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்
கொரோனா தொற்றுக்குப் பிந்தைய சோதனைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை மேம்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு செப்டம்பர் 28ஆம் தேதியன்று அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அக்டோபர் ஆறாம் தேதியன்று விஜயகாந்த் மீண்டும் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே சேர்க்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.
தற்போது அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலமும் அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" என்று கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
- இந்தியா-சீனா எல்லை சர்ச்சை: பிரதமர் நரேந்திர மோதி சீனாவின் பெயரை தவிர்ப்பது ஏன்?
- நடிகர் சூரி புகார்: விஷ்ணு விஷால் தந்தை மீது நில மோசடி வழக்கு பதிவு - என்ன நடந்தது?
- 'இரண்டாம் குத்து' பட சர்ச்சை: இயக்குநர் சந்தோஷ் - பாரதிராஜா மோதல்
- நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு - இந்தியா எப்படி சமாளிக்கும்?
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்
- எம்.எல்.ஏவை மணந்த சௌந்தர்யா கணவருடன் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
- ’இட்லியை தவறாக பேசுவதா?’ - ட்விட்டரில் கொதித்தெழுந்த இட்லி பிரியர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












