மலேசியாவில் 45 பேருக்கு வைரஸை பரப்பிய சிவகங்கை நபருக்கு சிறை தண்டனை

மலேசியாவில் 45 பேருக்கு வைரஸை பரப்பிய சிவகங்கை நபருக்கு சிறை தண்டனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புக்காக

தமிழகத்தின் சிவகங்கை பகுதியில் இருந்து கடந்த மாதம் வந்தடைந்த ஆடவர் மூலம் மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து அவருக்கு மலேசிய நீதிமன்றம் ஐந்து மாத சிறை தண்டனையும் 12 ஆயிரம் மலேசிய ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளது.

மலேசியா திரும்பிய பின்னர் 14 நாட்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அவர் அந்த உத்தரவை மீறியுள்ளார். இதன் காரணமாக அவரிடம் இருந்து பலருக்கும் வைரஸ் தொற்று பரவியது உறுதியாகியுள்ளது.

இந்திய பிரஜையான நேசர் முகமட் சாபுர் பாட்சா (Nezar Mohamed Sabur Batcha) என்ற அந்த 57 வயது நபர், மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தில் சொந்தமாக உணவகம் நடத்தி வருகிறார்.

இவரது செயல்பாடு காரணமாக மலேசியாவின் 3 மாநிலங்களுக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது. நான்கு பகுதிகளில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கை நபர், கொரோனா வைரஸின் திரிபு எனக்கருதப்படும் அதிக வீரியமுள்ள, வேகமாகப் பரவும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மலேசிய சுகாதார அமைச்சு கருதுகிறது.

மலேசியாவில் 45 பேருக்கு வைரஸை பரப்பிய சிவகங்கை நபருக்கு சிறைத்தண்டனை

பட மூலாதாரம், MOHD RASFAN / Getty

படக்குறிப்பு, சித்தரிப்புக்காக

இது கவலையை ஏற்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார், மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் நூர் ஹிஷாம்.

"நாட்டில் கண்டறியப்பட்ட இதர கொரோனா தொற்றுக் குழுக்களை விட 'சிவகங்கா' தொற்றுக்குழு மூலம்தான் குறுகிய காலத்தில் அதிகமானோருக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. இது மலேசியாவில் இதுவரை காணப்படாத வேகம். எனவே, இது 'சூப்பர் ஸ்ப்ரெட்டர்' வகை பாதிப்பாக இருக்கக்கூடும்.

"இந்த வகைத் தொற்று மிக வேகமாகப் பரவக்கூடிய தன்மையைக் கொண்டது. எகிப்திலும் பாகிஸ்தானிலும் இந்த வகைத் தொற்றுப் பரவல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்தப்படும்," என்று நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேசர் முகமட் சாபுர் பாட்சா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அதன் மீதான விசாரணையின் முடிவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2.15 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

ரஷ்ய தடுப்பூசியை மலேசியா உடனடியாக வாங்காது

கோவிட்-19க்கான ரஷ்யாவின் தடுப்பூசியை மலேசியா உடனடியாக வாங்காது என்றும் அதைப் பயன்படுத்துவது தொடர்பாக மலேசிய சுகாதார அமைச்சு தீவிர பரிசோதனை மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, உலகின் எந்த நாடு தடுப்பூசியைக் கண்டுபிடித்தாலும் அது குறித்து சுகாதார அமைச்சு ஆய்வு செய்யும் என்றார்.

இதற்கிடையே, மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,129 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 125 பேர் உயிரிழந்துள்ளனர். 8,821 பேர் குணமடைந்துள்ள நிலையில் 183 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: