கொரோனா வைரஸ் வெப்பநிலை அதிகமானால் அழிந்துவிடுமா?

Coronavirus: Will summer make a difference?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரேச்சல் ஷ்ரேயர்
    • பதவி, பிபிசி செய்தியாளர் (சுகாதார பிரிவு)

வெப்பம் அதிகமாக இருக்கும் நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாது என கூறப்பட்டதை தற்போது நம்புவதற்கில்லை. ஏனென்றால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் பரவிவிட்டது. ஆனால் இதுகுறித்த புதிய ஆய்வுகள் ஏதேனும் நமக்கு நம்பிக்கை தருவதாக உள்ளதா?

கொரோனா வைரஸ் தொற்று பரவல் பருவ நிலையை பொறுத்தது என்பதை சொல்வதற்கு இன்னும் சற்று காலம் தேவை. கொரோனா தொற்று, பருவநிலையை பொறுத்ததா என்பதை தெரிந்து கொள்ள ஒரு வருடம் முழுக்க ஓர் இடத்தில் எவ்வாறு அந்த தொற்று பரவல் மாறுபடுகிறது என்பதை ஆராய வேண்டும்.

இருப்பினும் இது வெவ்வேறு பருவநிலை கொண்ட நாடுகளில் எவ்வாறு பரவுகிறது என்பதை வைத்து நாம் சிறிது புரிந்து கொள்ளலாம்.

என்ன ஆதாரம்?

கொரோனா வைரஸ் தொற்று குறிப்பாக குளிர்ந்த பகுதிகளில் பரவியதற்கான சில ஆதாரங்களும் உள்ளன.

ஆஸ்திரேலிய கடற்கரை

பட மூலாதாரம், Getty Images

மார்ச் 10ஆம் தேதி வரை பார்த்தால், கொரோனா தொற்று பரவிய நாடுகளில் சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் குறைவான வெப்பம் இருந்ததாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மற்றொரு ஆய்வு 40க்கும் அதிகமான கொரோனா தொற்று நபர்களை கொண்ட சீன நகரங்களை ஆய்வு செய்தது. அதில் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அங்கு கொரோனா தொற்று குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

மற்றொரு உறுதிப்படுத்தப்படாத ஆய்வில், கொரோனா தொற்று உலகமுழுவதும் பரவி இருந்தாலும், குறிப்பாக குளுமையான நாடுகளிலேயே அதிகம் பரவி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அண்ட் ட்ராப்பிக்கல் மெடிசனை சேர்ந்த ஆய்வாளர்கள், உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் அனைத்திலும் இது பரவிவிட்டது, அது குளிர் பிரதேசமாக இருந்தாலும் சரி வெப்பநிலை அதிகமாக இருக்கும் நாடுகளாக இருந்தாலும் சரி என்கின்றனர்.

துருவங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறதா?

காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் உட்பட பிற வைரஸ்கள் பூமியின் தெற்கு மற்றும் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள நாடுகளில், குறிப்பிட்ட சில காலங்களில் மட்டும் பரவும் தன்மையைக் கொண்டதாக உள்ளது. ஆனால் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள வெப்பமண்டல பகுதிகளில் இந்தத் தன்மை இருப்பதில்லை.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

மலேசியா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு போன்ற வெப்பநிலை அதிகம் கொண்ட நாடுகள், பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் பிற நாடுகளில் என்ன நடைபெறும் என்பதற்கு இந்த நாடுகளை எடுத்துக்காட்டாக கூற முடியாது.

இதே பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை எடுத்துக் கொண்டால், அதன் கோடைக்காலம் முடியும் தருவாயில் கொரோனா தொற்று பரவல் முதன்முதலாக தெரிந்தது; அந்த நாடுகளில் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள நாடுகளைக் காட்டிலும் கொரோனா தொற்று குறைவாகவே உள்ளது.

கொரோனா தொற்று பரவல் பிற காரணங்களை கொண்டு அமைகிறது. அது மக்கள் தொகை மற்றும் சர்வதேச பயணங்கள் பொருத்தும் அமைகிறது.

சர்வதேச பயணங்களால் இந்த கொரோனா தொற்று பரவ தொடங்கியதாலும், அந்தந்த நாடுகளில் அவ்வப்போது பருவநிலைகள் மாறுவதாலும், கொரோனா தொற்று பரவலுக்கும் பருவநிலைக்கும் என்ன தொடர்பு என்பதை அறிவதில் சிரமம் உள்ளது.

பிற கொரோனா வைரஸ்களின் தன்மை என்ன?

இந்த கோவிட்-19 தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கோவ்-2 தவிர பிற கொரோனா வைரஸுகள் குளிர்காலங்களில்தான் பரவத் தொடங்கியது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என யூனிவர்சிட்டில் காலேஜ் லண்டன் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அண்ட் ட்ராபிக்கல் மெடிசனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ்

அவர்கள் 2000 நபர்களிடம் அவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் உள்ளதா என்று கேட்டறிந்தனர். மேலும் அறிகுறிகள் தென்படுவது போல் இருந்தால் 'ஸ்வாப் டெஸ்ட்' எடுத்து அனுப்பும்படி கோரினர்.

இதன்மூலம் குளிர்காலங்களில்தான் அதிக கொரோனா தொற்று பரவல் இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர். மேலும் கோடை காலத்தில் குறைந்த அளவிலான நபர்களுக்கு தொற்று இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

இந்த ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர்களில் ஒருவரான எலன் ஃபிராகஸி, கோடைக்காலத்தில் இந்த தொற்று பரவல் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். ஆனால் இந்த புதிய சார்ஸ்-கோவ்-2 (Sars-Cov-2) வைரஸுக்கு இதே தன்மை இருக்கிறதா என்பதை உறுதியாக சொல்லமுடியாது.

மேலும் உலகம் முழுவதும் அது பரவியுள்ள வேகத்தை கண்டு நாம் கோடைக்காலத்தை எல்லாம் கருத்தில் கொண்டு ஆறுதல் படுவதற்கில்லை.

இந்த புதிய வைரஸ் பிற கொரோனா வைரஸ்களை போன்றுதான் பரவுகிறது.

ஆனால் இந்த புதிய வைரஸ் ஒருவரின் உடல்நலத்தை எந்த அளவுக்கு பாதிக்கிறது மற்றும் எத்தனை உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது என்பதில்தான் வித்தியாசம் உள்ளது.

ஏற்கனவே உள்ள கொரோனா வைரஸ்களுக்கும் தற்போதுள்ள கொரோனா வைரஸிற்கும் நிச்சயம் வித்தியாசம் உள்ளது என்கிறார் சௌதாம்ப்டன் பல்கலைக்கழக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் மைக்கேல் ஹெட்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: