கொரோனா வைரஸ்: இந்தியாவில் அண்மைய தகவல்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 412ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 547 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மொத்தம் 206 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதால் இந்தியாவில் அந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவக் கூடும் என்ற கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால், உள்நாட்டு தேவையான ஒரு கோடி மாத்திரைகளை விட 1.30 கோடி மாத்திரைகள் அதிகமாக கைவசம் உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
“இந்தியாவில் முழுவதும் நேற்று 16,002 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 0.2 சதவீதத்தினருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இந்தியாவில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. எனவே மக்கள் அச்சம் அடைய வேண்டிய அவசியமில்லை. ஆனால் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
- வைரஸுக்கு ஏற்ற சூழ்நிலையும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் வழிகளும்
- கோடைக் காலம் வந்தால் கொரோனா வைரஸ் சாகுமா?
“இந்த மாதம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் திருவிழாக்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனவே கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகளின் நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மற்றொரு இணை செயலாளரான புன்யா சலிலா செய்தியாளரிடம் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில் வரும் மே 1ஆம் தேதி வரை முடக்க நிலை/ ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் 14ஆம் தேதி வரை முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை நீட்டித்துள்ள இரண்டாவது மாநிலமாக பஞ்சாப் உருவெடுத்துள்ளது.
இதற்கு முன்பாக நேற்று (வியாழக்கிழமை) தங்களது மாநிலத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை மாநிலம் முழுவதும் முடக்க நிலையை நீட்டிப்பதாக இந்தியாவில் முதல் மாநிலமாக ஒடிசா அறிவித்திருந்தது.
தமிழகத்தில் நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சருடன் மருத்துவ ஆலோசனைக் குழுவினர் நடத்திய கூட்டத்திற்குப் பிறகு, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐசிஎம்ஆரைச் சேர்ந்த மருத்துவர் பிரதீப் கௌர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"தமிழ்நாட்டில் கொரோனாவை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. பொது சுகாதார நிலையும் நன்றாக உள்ளது. அதைப் பற்றி விவாதித்தோம். தமிழகத்தில் இவ்வளவு முயற்சிகள் நடந்தபோது தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகவே, மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென பரிந்துரைத்திருக்கிறோம்." என்று அவர் கூறினார்.
மேலும், கூடுதலாகக் கிடைக்கும் இந்த 14 நாட்களிலும் நிறைய பேரை கொரோனா சோதனைக்கு உள்ளாக்க வேண்டும். நோயாளிகளின் உறவினர்கள், சுற்றி இருப்பவர்களைச் சோதிக்க வேண்டும். அப்படி நிறையப் பேரைச் சோதித்தால், நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும் என்றார் பிரதீப் கௌர்.












