கொரோனா வைரஸ்: மாசுபாட்டையும், குப்பைகளையும் குறைத்த நோய்த்தொற்று

பட மூலாதாரம், Ravi
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கொரோனா காரணமாக பொது மக்களின் நடமாட்டம் மற்றும் பயணம் குறைந்துள்ளதால், தமிழகத்தின் நகரப்பகுதிகளில் காற்று மாசுபாடு குறைந்துள்ளதோடு, சுற்றுலா தளங்களில் குப்பைகள் சேருவதும் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் மார்ச்23ம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ சேவை மற்றும் அரசு அலுவலர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டதால், பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
கல்விக்கூடங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தளங்கள்,கோயில்கள் என பொது மக்கள் நடமாடும் இடங்கள் மூடப்பட்டுள்ளதால், நகரப்பகுதிகளில் காற்று மாசுபாடு மிகவும் குறைந்துள்ளது.
அதேபோல திடக்கழிவு சேர்வதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் புள்ளி விவரங்களின்படி, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து சென்னையில் தினமும் சுமார் 5,000 டன் உருவாகும் குப்பை, 3,800ஆக குறைந்துள்ளது.
காற்று மாசுபாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வசிப்பிடத்தில் காற்றின் தரக்குறியீடு 50க்குள் பதிவானால், அங்கு காற்று நல்ல தரத்தில் உள்ளதாகவும், 50 முதல் 100 அளவு என்பது நடுத்தரமானது என்றும் 100ல் இருந்து 150க்குள் அல்லது அதற்கு மேல் இருந்தால் ஆரோக்கியமற்றது என்று அளவிடப்படுகிறது.

பட மூலாதாரம், RAVI
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, சென்னை நகரத்தில் ஆலைகள் நிறைந்த மணலி பகுதியில், காற்று தர குறியீடு மார்ச் மாதம்7ம் தேதி 96ஆக இருந்தது.
ஏப்ரல் 7ம் தேதி அந்த தர குறியீடு 48ஆக குறைந்துவிட்டது.
''ஒவ்வோர் ஆண்டும் ஊரடங்கு தேவை''
போக்குவரத்து பெரும்பாலாக குறைந்துவிட்டதால், காற்று மாசுபாடு குறைந்துள்ளது என கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அருள்செல்வம், சுற்றுலாத் தளங்கள் மற்றும் நகரங்களில், ஒவ்வொரு ஆண்டும் சீரான முறையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால், சுற்றுச்சூழலை மேம்படுத்த முடியும் என்கிறார்.
''மீன்பிடி தடை காலம் அமல்படுத்தபடுவதால், மீனவர்கள் எப்படி பயன்பெறுகிறார்கள்? வங்கிகளுக்கு விடுமுறை அளிப்பதால் வங்கி ஊழியர்கள் எப்படி தங்களது வேலைகளை சீர்படுத்திகொள்கிறார்கள்? சாதாரணமாக நாம் ஒவ்வொருவரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது வாரத்தில் ஒரு நாள் எப்படி ஓய்வு எடுத்துக்கொள்கிறோம்? இதுபோலதான் சுற்றுசூழலிலும் நாம் ஏற்படுத்தியுள்ள மாசுகளை களைய படிப்படியாக ஆண்டு முழுவதும் ஒரு சில தினங்களாவது ஊரடங்கு சீரான முறையில் அமல்படுத்தவேண்டும்,'' என்கிறார் அருள்செல்வம்.

பட மூலாதாரம், RAVI
ஊரடங்கு கொண்டு வந்துள்ளதால், தினக்கூலி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, ''தினசரி சம்பளத்தில் இருப்பவர்களுக்கு இது போல 21 நாட்கள் ஊரடங்கு என்பது பிரச்சனைதான். அதனால்தான் சுற்றுசூழலை சீர்படுத்த, ஒரு ஆண்டில் ஒரு சில தினங்களை ஊரடங்கு நாளாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
"எல்லா பொது இடங்களையும் தூய்மை செய்ய வேண்டும், கோயில்கள், சுற்றுலாத் தளங்களில் மக்களின் நடமாட்டத்தை குறைக்க வேண்டும். இதன் மூலம் குப்பைகள் சேர்வதை குறைக்கவேண்டும். ஒரேமூச்சில் பல நாட்கள் கொண்டு வருவதைவிட, ஒரு ஆண்டில், மூன்று மாதத்திற்கு ஒருமுறை,ஊரடங்கு அமல்படுத்தினால், நீர் ஆதாரங்கள், காற்று, ஒலி மாசு கட்டாயம் குறையும்."
அரசாங்கமும் ஊரடங்கை அமல்படுத்தும் போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் எப்படி செயல்படுத்தலாம் என திட்டம் வகுத்து செயல்படவேண்டும் என்கிறார் அவர்.
சுற்றுலா தளங்களில் கட்டுப்பாடு வேண்டுமா?
சுற்றுலா தளங்களின் தாங்குதிறனை கருத்தில் கொண்டு, சுற்றுலாவுக்கு அவ்வப்போது தடை விதித்தால்தான், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற அபாயங்களை தடுக்கமுடியும் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெயச்சந்திரன்.

பட மூலாதாரம், Ravi
''வனப்பகுதிகள் மற்றும் பிற சுற்றுலா இடங்களுக்கு தாங்குதிறன் கணக்கிடப்பட்டு, மக்களின் நடமாட்டத்தை குறைக்கவேண்டும். ஊட்டி மலையின் தாங்குதிறன் எவ்வளவு, எத்தனை வண்டிகளை மலை மேல் அனுமதிக்கலாம், எத்தனை கட்டடங்களை அனுமதிக்கலாம் என கட்டுப்பாடுகள் கொண்டுவரவேண்டும். பல காலங்களாக ஊட்டி அவலாஞ்சி பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்ததால், அங்கு வனவிலங்கு நடமாட்டம் முற்றிலும் குறைந்துவிட்டது.
தற்போது ஊரடங்கின்போது, அங்கு காட்டெருமைகளின் நடமாட்டத்தை பார்க்க முடிகிறது. தண்ணீர், நிலப்பயன்பாடு போன்றவற்றை கருத்தில்கொண்டு ஒரு சில தினங்களையாவது ஊரடங்கு தினங்களாக கொண்டுவந்தால்,மாசுபாடு குறையும்,''என்கிறார் ஜெயச்சந்திரன்.
''சிறுமாற்றங்களை நீங்களும் ஏற்படுத்தலாம்''
அரசாங்கத்தின் ஊரடங்கிற்காக காத்திருக்காமல், தனிநபர்களின் முடிவுகளும் சுற்றுசூழலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு பதில் தருகிறார் சுற்றுச்சூழல் வழக்கறிஞர் சந்தனாராமன்.'

'ஒவ்வொருவரும் அவர்கள் பயணிக்கும்போது, என்ன காரணத்திற்காக பயணிக்கிறோம் என்பதை யோசித்தாலே மாசுபாட்டை குறைக்க முதல்படியை எட்டமுடியும்,''என்கிறார் அவர்.
''பலரும் இந்த ஊரடங்கு காலத்தில் அலுவல் சந்திப்புகளை இணையத்தில் மேற்கொள்ள முடிகிறது, வீடியோ கான்பிரன்சிங் வசதியை பயன்படுத்த முடிகிறது என்பதை பல நிறுவனங்கள் உணர்ந்துவிட்டன. கட்டாயம் சுற்றுலா போக வேண்டும் என்பதை விடுத்து, உண்மையில் அந்த பயணம் தேவையா என யோசிக்கவேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை நாம் தீர்மானிக்க முடியும். சுற்றுலா தளங்களில் சுற்றுலாவாசிகள் வீசிச்செல்லும் பிளாஸ்டிக் குப்பைகளை கையாளுவது மிகவும் சிரமம்.
எடுத்துக்காட்டாக, ஊட்டி மலையில் பெட் பாட்டில்களை பயன்படுத்த தடை உள்ளது. அதற்கு பதிலாக தண்ணீர் ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு வழக்கை தொடுத்து, இந்த மாற்றத்தை ஏற்படுத்தினோம். சிறுமாற்றங்களை ஒவ்வொருவரும் கொண்டுவரவேண்டும். அதற்கான முடிவுகளை எடுக்கவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது,''என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












