கொரோனா வைரஸ்: ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் - மீண்டு வருகிறதா மலேசியா?

மீண்டு வருகிறதா மலேசியா?

பட மூலாதாரம், Getty Images

மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மொகிதீன் யாசின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று தொலைக்காட்சி வழி நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை விரைவாக விலக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் அவ்வாறு முடிவெடுத்த நாடுகளில் கோவிட் 19 நோய் துரித கதியில் பரவியதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

தற்போது பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருப்பதால் மலேசியாவில் நோய்தொற்றுப் பரவல் கட்டுக்குள் உள்ளது. புதிய தொற்றுக்கள் பதிவாகும் விகிதம் 7 விழுக்காடாக உள்ளது. ஆனால் 10 விழுக்காடாக இருப்பதே கட்டுக்குள் இருப்பதாக அர்த்தம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

"உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்போர் விகிதாச்சாரம் 5.8 விழுக்காடாக இருக்கும் நிலையில் மலேசியாவில் அது 1.6 விழுக்காடாக மட்டுமே உள்ளது," என்று பிரதமர் மொகிதீன் யாசின் சுட்டிக் காட்டினார்.

மீண்டு வருகிறதா மலேசியா?

பட மூலாதாரம், Getty Images

ஏப்ரல் 28ஆம் தேதி வரை மலேசியாவில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என்றும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் அளவிற்கு பாதுகாப்பான நிலை திரும்பிய பிறகே பள்ளிகளைத் திறப்பது குறித்து அடுத்த அறிவிப்பு வெளியாகும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கிருமித் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக ரமலான் மாதத்தையொட்டிய பிரார்த்தனைகள் மற்றும் சந்தைகள் நடைபெறாது என்றும் பிரதமர் மொகிதீன் யாசின் தமது உரையில் குறிப்பிட்டார்.

Banner image reading 'more about coronavirus'

மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடந்த மார்ச் 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 31 வரை அந்த ஆணை அமலில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1 முதல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக ஏப்ரல் 15 முதல் 28ஆம் தேதி வரை அந்த ஆணையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார் பிரதமர் மொகிதீன் யாசின்.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விஞ்சியது குணமடைந்தோர் எண்ணிக்கை

மலேசியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கையை அத்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை முந்தியுள்ளது. சனிக்கிழமையன்று புதிதாக 118 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 222 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதையடுத்து மலேசியாவில் இதுவரை 1,830 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இது பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையான 4,346ல் 42.11 விழுக்காடு ஆகும். சனிக்கிழமை மதியம் வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்ததையடுத்து இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

"அண்மைய சில தினங்களாக அன்றாடம் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை முந்தியுள்ளது. அடுத்த இரு வாரங்களுக்கு இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை நம்மால் கட்டுப்படுத்த முடியும். சுமார் ஒரு மாத காலமாக நீடித்துவரும் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக நோய்த்தொற்றுப் பரவலை சுகாதாரப் பணியாளர்கள் வெகுவாகக் கட்டுப்படுத்தி உள்ளனர்.

"தற்போது நிலைமை ஓரளவு சீராக உள்ளது. நோய் தொற்றியோர் எண்ணிக்கை 7 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் குறைவானது. எனினும் நாம் நிலைமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நாம் பாதி தூரத்தைத்தான் கடந்துள்ளோம். வைரஸ் தொற்றுப் பரவலை, குறிப்பாக தொற்றுச் சங்கிலியை உடைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேலும் தீவிரப்படுத்தப்படும்," என்றார் பிரதமர் மொகிதீன் யாசின்.

சில விதிமுறைகளைத் தளர்த்தியது மலேசிய அரசு

பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டபோதிலும் ஒருசில விதிமுறைகளைத் தளர்த்தி உள்ளது மலேசிய அரசு. அதன்படி குறிப்பிட்ட தொழிற்சாலைகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

எந்தெந்த துறை சார்ந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று மலேசிய அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சு பட்டியல் வெளியிட்டுள்ளது. அதேபோல் சிகை அலங்கார நிலையங்கள், சலவைக் கடைகள் ஆகியவை இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

"கொரோனா வைரஸ் தொற்று பரவலானது உடல் நலத்தை மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. மக்கள் நலனை பாதிப்பதுடன் சிறு மற்றும் மத்திய தொழில் துறையினரையும் பாதிக்கும். சிறு மற்றும் மத்திய தொழில்கள்தான் நாட்டின் மனித ஆற்றல் தேவையின் பெரும்பகுதியை ஈடுகட்டுகின்றன. எனவே, இதுவரையிலான தரவுகள் ஆய்வுகளின் அடிப்படையில் அரசாங்கம் சில முடிவுகளை எடுத்துள்ளது," என மூத்த அமைச்சர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றின் உச்ச நிலையை மலேசியா கடந்திருக்க வாய்ப்புண்டு

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றின் உச்ச நிலையை மலேசியா கடந்திருக்க வாய்ப்புண்டு என்கிறார் சுகாதார அமைச்சின் பொது ஆணையர் நூர் இஷாம். கடந்த ஒரு வார காலமாக நோய் தொற்றியோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஜேபி மோர்கன், உலக சுகாதார நிறுவனம், மலேசிய பொருளாதார ஆய்வு மையம் ஆகியவை ஏப்ரல் மத்தியில் மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தை அடையும் என கணித்திருந்தன. இதைச் சுட்டிக்காடிய நூர் ஹிஷாம் நோய்த் தொற்றுவோரின் எண்ணிக்கை தற்போது கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்தார்.

மீண்டு வருகிறதா மலேசியா?

பட மூலாதாரம், Getty Images

"பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் அசாதாரணமான அதிகரிப்பைக் காணமுடியவில்லை. எனவே, கடந்த வாரம்தான் கொரோனா வைரஸ் தொற்று பரவல் உச்சத்தில் இருந்ததாகக் கருதவேண்டி உள்ளது. தற்போது நோய்த் தொற்றியோர் எண்ணிக்கை நன்கு குறைந்து வருகிறது. இது ஒரு நல்ல அறிகுறி," என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் நிலவிய நோய்த் தொற்று விகிதாச்சாரம் தற்போது குறைந்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஆணை பிறப்பிக்கப்படும் முன்பு நோய்த்தொற்று விகிதம் 3.55 ஆக, அதாவது ஒருவரிடமிருந்து 3.55 நபர்களுக்கு தொற்று பரவும் என்றிருந்த நிலை, தற்போது ஒரு நபரிடம் இருந்து அதிகபட்சம் ஒரு நபருக்கு மட்டுமே பரவும் என்றளவுக்கு நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது என்றார் அவர். இதன்மூலம் நோய்த்தொற்று சங்கிலியை உடைப்பதில் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எத்தகைய பலனைக் கொடுத்திருக்கிறது என்பதை அறிய முடியும். எனவேதான் இந்த ஆணையை நீட்டிக்கும்படி பிரதமரிடம் சுகாதார அமைச்சு பரிந்துரைத்தது.

மலேசியாவுக்கு வருகை தரும் சீன மருத்துவக்குழு

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மலேசியாவுக்கு உதவும் வகையில் சீன மருத்துவ நிபுணர்கள் விரைவில் கோலாலம்பூருக்கு வருகை தர உள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அந்நாட்டு அரசும் சுகாதாரத் துறையும் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் மலேசிய மருத்துவக் குழுவிடம் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

மலேசிய மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை சீன மருத்துவக் குழு பார்வையிடும் என்றும் அதன் பிறகு அந்தக் குழு தனது ஆலோசனைகளை வழங்கும் என்றும் மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதும் அது தொரடர்பாக ஆலோசிப்பதும் சிகிச்சை முறையை மேலும் பயனுள்ளதாக, வீரியமுள்ளதாக மாற்றும் என்று குறிப்பிட்ட அவர், கொரோனா வைரஸ் குறித்த ஆய்வில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: