அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி நீக்க விசாரணை: புதிய அறிவிப்பு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எடுக்கப்பட்டுவரும் பதவி நீக்க நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அதை முன்னெடுத்துள்ள, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் நேரலை ஒளிபரப்பின்போது மூன்று வெளியுறவு அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள்.
2020இல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜோ பைடன் மற்றும் அவரது மகன் மீது உக்ரைன் அரசு விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் வலாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, டிரம்ப் அழுத்தம் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
முன்னாள் அமெரிக்க துணை அதிபரான ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரைன் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு அழைத்து வரும் ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்றும் அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஹண்டர் வேலை பார்க்கும் எரிவாயு நிறுவனம் மீது நடந்த முறைகேட்டு விசாரணைகளை மேற்கொண்டது உக்ரைன் அரசு. அதில் முக்கிய அதிகாரியொருவரை பதவி நீக்க ஹண்டர் அழுத்தம் தந்தது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் தந்ததாக புகார் எழுந்தது.
உக்ரைன் அதிபர் உடனான தொலைபேசி உரையாடலை முழுமையாக வெளியிடத் தயார் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
வெளிநாட்டு அரசு தங்கள் நாட்டுத் தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடிய சூழலுக்கு டிரம்ப் வழிவகுத்ததாக ஜனநாயக கட்சியினர் பதவி நீக்க நடைமுறைகளை தொடங்கினர்.
அதிபரை பதவி நீக்கம் செய்ய ஆதரவாக நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை வாக்களித்தால், அதன் அடிப்படையில் விசாரணை செய்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் செனட் சபை பதவிநீக்கத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அப்போது மட்டுமே பதவி நீக்கம் செல்லும்.

திருவள்ளுவரின் உருவம் உருவானது எப்படி?

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்ததாகக் கருதப்படும் திருவள்ளுவரின் உருவம் எப்படித் தோன்றியது?
தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள திருவள்ளுவரின் உருவப்படத்தில் திருவள்ளுவர் வெள்ளை உடை அணிந்து அமர்ந்திருப்பதுபோல காட்சியளிக்கிறார். 1959வாக்கில் இந்தப் படம் வெளியிடப்பட்டு, பரவலான பிறகு, பெரிதும் இந்தப் படமே பயன்படுத்தப்பட்டுவருகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தப் படத்தையே அதிகாரபூர்வ படமாக பயன்படுத்த வேண்டுமென அரசாணைகளும் வெளியிடப்பட்டுவிட்டன. இதற்குப் பிறகு மிக அரிதாகவே, அந்தப் படத்திற்கு மாறுபட்ட திருவள்ளுவரின் படங்கள் வரையப்பட்டுள்ளன.
ஆனால், முதன் முதலில் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கப்பட்டது எப்படி?
விரிவாகப் படிக்க: திருவள்ளுவரின் உருவம் உருவானது எப்படி - விரிவான தகவல்

இலங்கையின் பழமையான கட்சியின் இன்றைய நிலை

இலங்கையின் மிக பழமை வாய்ந்த பிரதான கட்சியாக திகழும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று இரண்டாக பிளவுபடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்கும் அதேவேளை, மற்றுமொரு தரப்பினர் சஜித் பிரேமாஸவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான பதவிகளிலுள்ளவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலையில், அந்த கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் புதல்வியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்.
விரிவாகப் படிக்க: இலங்கையின் மிகவும் பழமையான அரசியல் கட்சியின் இன்றைய நிலை இதுதான்

இந்தியா விலகுவது சீனாவுக்கு பின்னடைவா?

பட மூலாதாரம், Pib
ஆர்.சி.ஈ.பி என்று பரவலாக அறியப்பட்ட பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்துள்ளது.
இந்திய அரசு தரப்பில் எழுப்பப்பட்ட வர்த்தக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், இந்த ஒப்பந்தத்தில் சேர வேண்டாம் என்று இந்தியா திங்களன்று (4.11.2019) முடிவு செய்தது.
தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள் (Asean) அதனுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள பிற கூட்டணி நாடுகளுக்கு, (FTA) இடையில் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்தான் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு(RCEP).
விரிவாகப் படிக்க: ஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகுவது சீனாவுக்கு பின்னடைவா?

வெங்காய விலை குறைவது எப்போது?

பட மூலாதாரம், Getty Images
பருவமழை காரணமாக அதிகரித்துள்ள வெங்காய விலை ஒருவாரம் கழித்து குறையும் வாய்ப்புள்ளது என சென்னையில் உள்ள வெங்காய வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் இருந்து வரவேண்டிய வெங்காய லோடுகள் வருவதில் தாமதம் இருப்பதால், பெங்களூருவில் இருந்து வரும் வெங்காயத்திற்கு அதிக தேவை இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
விரிவாகப் படிக்க: பருவ மழையால் அதிகரித்த வெங்காய விலை குறைவது எப்போது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












