உலகப் பார்வை: தீவிரமடைந்த ஏமன் போர்: ஐ.நா. அவசர கூட்டம்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
தீவிர நிலையை எட்டிய ஏமன் போர்: ஐ.நா. அவசர கூட்டம்

பட மூலாதாரம், EPA
ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிக முக்கியமான ஹூடேடா துறைமுக நகரத்தை கைப்பற்ற, சௌதி ஆதரவு பெற்ற அரசுப் படைகள் நடத்தும் தாக்குதல் தீவிரமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் தனது நாட்டை சேர்ந்த 4 துருப்புகள் இறந்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) உறுதி செய்துள்ளது. மேலும், இந்த மோதலில் 22 ஹூதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நகரின் விமானநிலையம் அருகே நடந்துவரும் மோதல் மிகவும் தீவிர நிலையை எட்டியுள்ளது என்று ஊடக செய்திகள் கூறுகின்றன.
இதனிடையே ஏமனில் நடந்து வரும் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. (ஐக்கிய நாடுகள் சபை) இன்று அவசர கூட்டம் ஒன்றை நடத்துகிறது.

'வட கொரியா அணுஆயுதங்களை கைவிடும்' - அமெரிக்கா நம்பிக்கை

பட மூலாதாரம், Reuters
2020ஆம் ஆண்டிற்குள் வட கொரியா மிக பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகளையும், ஆயுதங்களையும் குறைத்துக் கொள்ளும் என்று அமெரிக்கா நம்புவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 12ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோரின் சந்திப்பையடுத்து அவர் இவ்வாறு கூறினார்.
கொரிய தீபகற்கத்தை அணுஆயுதமற்ற பகுதியாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் வட கொரியா ஒப்புக்கொண்டுள்ளது. எப்போது மற்றும் எவ்வாறு அணுஆயுதங்கள் கைவிடப்படும் என்ற எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.

கால்பந்து உலககோப்பை இன்று தொடக்கம்

பட மூலாதாரம், Getty Images
2018 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள லூஸ்நிக்கி மைதானத்தில் நடக்கும் கோலாகல தொடக்க விழாவை தொடர்ந்து முதல் போட்டியில் ரஷ்யாவுடன் செளதி அரேபியா மோதுகிறது.
இன்று தொடங்கும் கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. 32 நாட்களுக்கு மேல் நடக்கவுள்ள இந்த தொடரில், 64 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த போட்டிகள் ரஷ்யாவில் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கவுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ மேயராககறுப்பின பெண் தேர்வு

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக கறுப்பின பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்ற லண்டன் ப்ரீட் , மேயராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பெருமிதமும், தன்னடக்கமும் கொள்வதாக குறிப்பிட்டார்.
43 வயதான அவர், சிறு வயதில் ஏழ்மையான சூழலில் அவரது பாட்டியால் வளர்க்கப்பட்டார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












