ஏவுகணை தொழில்நுட்பம் உள்பட அமெரிக்க கடற்படையின் ரகசியங்களை திருடிய சீன ஹேக்கர்கள்

அமெரிக்க கடற்படையின் ஒப்பந்ததாரரின் இணையத்தில் திருட்டுத் தனமாக நுழைந்து, மிகவும் முக்கியமான பாதுகாப்பு தரவுகள் திருடப்பட்ட பின்னர், அமெரிக்க உளவுத்துறை இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏவுகணை

பட மூலாதாரம், Reuters

ஒலியைவிட வேகமாக சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்கள் உள்பட பல தரவுகள் இந்த இணைய திருட்டு மூலம் பறிபோயுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்ட்டிம் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நடத்தப்பட்ட இந்த இணைய தாக்குதல்களை சிபிஎஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் நீருக்கடியில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை ஆய்வு செய்து உருவாக்கும் அமெரிக்க ராணுவ நிறுவனத்தோடு தொடர்புடைய ஒப்பந்ததாரரை இலக்கு வைத்து இந்த இணைய திருட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இன்னொரு தனிப்பட்ட முன்னேற்றமாக, சீன முகவருக்கு உயரிய ரகசிய ஆவணங்களை வழங்கியது தொடர்பாக முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீன முகவருக்கு ரகசியத் தரவுகளைக் கொடுத்ததாக, 61 வயதாகும் அமெரிக்க முன்னாள் ராஜீய அதிகாரி கெவின் மல்லோரி என்பவரின் குற்றம் ஃபெடரல் உளவுச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21ம் தேதி அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று அமெரிக்க நிதித்துறையின் ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூப்பர் கணினி

பட மூலாதாரம், AFP

ரோட் தீவிலுள்ள நியூபோர்ட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராணுவ மையத்திற்காக, இந்த நிறுவனம் பணியாற்றி வந்ததாக அமெரிக்க கடற்படையின் ஒப்பந்ததாரர் வழக்கு தொடர்பாக, அமெரிக்க அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்டிடம் தெரிவித்துள்ளனர்,

"சீ ட்ராகன்" என்று அறியப்படும் ஒரு பணித்திட்டம் தொடர்பான தரவுகளும், கடற்படையின் நீர்மூழ்கிகளை உருவாக்கும் தொகுதியின் மின்னணு போர் நூலக தகவல்களும் இணையத் திருடர்களால் (ஹேக்கர்ஸ்) பார்க்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

2020ம் ஆண்டுக்குள் அமெரிக்க நீர்மூழ்கிகளில் பொருத்தப்படவுள்ள ஒரு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பும் தகவல் திருட்டுப்போன இந்த திட்டங்களில் அடங்கியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் சிங்கப்பூரில் சந்திக்க இருக்கும் உச்சி மாநாட்டுக்கும் சில நாட்களுக்கு முன்னர் இந்த செய்தி வெளிவந்துள்ளது. வட கொரியாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக சீனா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்ததாரருடைய வகைப்படுத்தப்படாத வலையமைப்பில் இந்த தரவுகள் சேமிக்கப்பட்டிருந்தாலும், உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த தொழிற்நுட்பத்தின் இயல்பு மற்றும் ராணுவ பணித்திட்டங்களுடனான அதன் தொடர்பு ஆகியவற்றால் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இணைய திருட்டு

பட மூலாதாரம், JEAN-PHILIPPE KSIAZEK

"கட்டுப்படுத்தப்பட்ட வகைப்படுத்தப்படாத தகவல்கள்" அடங்கிய வலையமைப்புகள் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், அதனை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் உள்ளன என்று அமெரிக்க கடற்படை கட்டளையதிகாரி பில் தெரிவித்திருக்கிறார்.

"இந்நேரத்தில் மேலதிக விவரங்களை பற்றி உரையாடி கொண்டிருப்பது பொருத்தமற்றது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த புலனாய்வு, ஃபெடரல் உளவுத்துறையின் உதவியோடு கடற்படையால் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த ஒப்பந்ததாரர் சம்பந்தப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு பிரச்சனைகளில் புலனாய்வு செய்ய வெள்ளிக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஜிம் மேட்டிஸ் ஆணையிட்டுள்ளார்.

உலகளாவிய இணைய தாக்குதல்: பணப்பறிப்பா? அரசியலா?

காணொளிக் குறிப்பு, உலகளாவிய இணைய தாக்குதல்: பணப்பறிப்பா? அரசியலா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: