வால்மார்ட் 'பிளிப்கார்ட்' மூலம் இந்தியாவில் நுழைவதால் யாருக்கு பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தினேஷ் உப்ரெட்டி
- பதவி, பிபிசி
அமெரிக்க இ- காமர்ஸ் நிறுவனமான வால்மார்ட் இந்திய நிறுவனமான பிளிப் கார்ட்டில் 77 சதவீத பங்குகளை வாங்கியிருக்கிறது. இதற்காக 16 பில்லியன் டாலர்கள் அல்லது ஒரு லட்சத்து ஏழாயிரம் கோடியை விலை கொடுத்திருக்கிறது வால்மார்ட்.
வால்மார்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது.
ஐந்து வருடத்திற்கு முன்பாக அமேசான் இ காமர்ஸ் நிறுவனம், இந்தியாவில் கால்பாதித்தது முதல் பிளிப்கார்ட் அதிக அழுத்தங்களை சந்திக்கத் துவங்கியது. அமேசான் நிறுவனம் பிளிப்கார்ட்டை வாங்குவதற்கு ஈடுபாடு காட்டியது. ஆனால் பத்து கோடி பேரால் பயன்படுத்தப்படும் பிளிப்கார்ட்டை வாங்கும் முயற்சிக்கான இப்பந்தயத்தில் வால்மார்ட் வென்றது.
ஒரு தசாப்தத்துக்கு முன்னதாக தனது அலுவலகத்தில் பயிற்சிப் பணியாளராக சேர்ந்த இரு இந்தியர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்காமல் போனதற்கு அமேசான் நிறுவனம் தற்போது நிச்சயம் வருத்தப்படும். அப்போது அவ்விரு இந்தியர்களும் அடுத்த சில ஆண்டுகளில் தங்களின் நிறுவனத்துக்கு கடும் போட்டியாளராக வருவார்கள் என்பதை அமேசான் கனவில் கூட நினைத்து பார்த்திருக்காது.
ஐஐடியில் படித்த இவ்விரு பொறியாளர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் அமேசானில் பயிற்சி பெற்றப்பிறகு இந்தியாவுக்கு திரும்பியவுடன் 2007-ல் பிளிப்கார்ட் நிறுவனத்தை துவங்கினர்.

பட மூலாதாரம், Getty Images
வால்மார்ட்டின் முயற்சிகள்
இந்தியச் சந்தையில் நுழைவதற்காக பல வருடங்களாக முயற்சி செய்தி வந்தது வால்மார்ட் நிறுவனம். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கார்பொரேட் வரிகளை குறைத்ததையடுத்து வால்மார்ட்டின் நிதி நிலை உயர்ந்தது.
மைக்ரோசாஃப்ட், டென்சென்ட், சாஃப்ட்பேங்க், ஆகிய நிறுவனங்களும் பிளிப்கார்ட்டில் குறிப்பிட்ட பங்குகளை வைத்துள்ளன. அவை தங்களின் பங்குகளை விற்கவில்லை. சாஃப்ட்பேங்க் நிறுவனம் அதிபட்சமாக 20 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இந்தியாவில் இணைய வழியில் பொருட்களை வாங்குவது அதிவேகமாக அதிகரித்துவருகிறது. ஃபாரெஸ்டர் என்ற ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி கடந்த வருடம் இந்தியாவில் 21 பில்லியன் டாலரை எட்டியிருக்கிறது இ-காமர்ஸ் சந்தை.
இந்தியாவிலுள்ள நிதி ஆராய்ச்சி நிறுவனமான, மோர்கன் ஸ்டான்லியின் ஒரு சமீபத்திய அறிக்கையின் படி, 2026-ல் இந்தியாவில் இணைய வழி வர்த்தகம் 200 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நடைபெறும். அதாவது அடுத்த எட்டு வருடங்களில் வர்த்தகமானது 9 -10 மடங்கு அதிகரிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
வால்மார்டின் தலைமை செயல் அதிகாரி டக் மேக்மில்லன் இந்தியாவின் சந்தையில் ஏற்படக்கூடிய வளர்ச்சி குறித்து விழிப்புடன் இருக்கிறார். ''இந்தியாவில் இணைய வழி சில்லறை வர்த்தகத்தின் அளவு அல்லது வளர்ச்சி என எதை எடுத்துக் கொண்டாலும் கவர்ச்சியான உலக சில்லறை வர்த்தகத்தில் முக்கியமான ஒன்றாக உள்ளது. இணைய வழி வர்த்தக சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நிறுவனத்தில் நாங்கள் முதலீடு செய்துள்ளோம்,'' என்றார் அவர்.
ஏன் அமேசான் மற்றும் வால்மார்ட் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வர்த்தகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன என்பதை மெக்மில்லனின் கூற்று தெளிவாக விவரிக்கிறது.
ஆனால் கேள்வி என்னவெனில், வால்மார்ட் - பிளிப்கார்ட் ஒப்பந்தமானது இந்தியாவின் இணைய சந்தையில் எந்த அளவுக்கு மற்றும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே.

பட மூலாதாரம், PAUL J.RICHARDS
பதற்றம்
வால்மார்ட் பிளிப்கார்ட்டின் பெரும் பங்கை வாங்கியதையடுத்து, பிளிப்கார்ட்டில் பொருட்களை விற்கும் வியாபாரிகள் மத்தியில் பீதி மற்றும் பதற்றம் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தால் தற்போதுள்ள 8 முதல் 10 ஆயிரம் ஆன்லைன் வியாபாரிகளுக்கு பிரச்னை என அனைத்து இந்திய ஆன்லைன் வியாபாரிகள் அமைப்பு கூறியுள்ளது.
இவ்வமைப்பின் செயலாளர் சுதிர் மெஹ்ரா பேசுகையில், '' பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு விற்று சிறிய வியாபாரிகளை சந்தையில் இருந்து வெளியேற்றுவதே வால்மார்டின் வரலாறு. வால்மார்ட்டுக்கு உலக சந்தையை அணுக கையிருப்பில் நிறைய பணம் உள்ளது. இந்த சூழ்நிலையில் உலகின் மற்ற நாடுகளில் உள்ள மலிவான பொருட்களை எளிதாக இந்தியாவில் கொட்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
பார்த்தி நிறுவனத்துடன் இணைந்து வால்மார்ட் இந்தியச் சந்தையில் களமிறங்கி நான்கு வருடங்களாகிவிட்டது, ஆனால் அந்நிய முதலீட்டுக்கு இந்திய அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளால் பணம் கொடுத்து பொருட்களை எடுத்துச் செல்லும் பெரும் வியாபாரங்களில் மட்டுமே ஈடுபடமுடிந்தது. தற்போது இந்தியாவில் 21 வால்மார்ட் கடைகள் உள்ளன.
நான்கு வருடத்துக்கு பிறகு பார்த்தியுடனான முறிவு ஏற்பட்ட பின்னர், மீண்டும் இந்திய சந்தையில் நுழைவதற்கு வலுவான தயாரிப்புடன் தயாராகியுள்ளது. இம்முறை களம் புதிது, கூட்டாளியும் புதிது. இந்தியாவில் தனது போட்டியாளரான அமேசானை முந்துவதுற்கு அனைத்து வியூகங்களையும் வால்மார்ட் களமிறக்கும்.
'' வரும் நாட்களில் பிளிப்கார்ட்டில் தள்ளுபடிக்காக தன்னிடமுள்ள பணத்தை வலுவாக முதலீடு செய்யும். இதனால் நிச்சயம் கடைநிலை வாடிக்கையாளர்களுக்கு பயன் உண்டு. ஆனால் வியாபாரிகள், குறிப்பாக சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளனர்.'' என்றார் சுதிர் மெஹ்ரா

பட மூலாதாரம், LIONEL BONAVENTURE
மேக் இன் இந்தியாவுக்கு என்ன ஆகும்?
மோதி அரசின் 'மேக் இன் இந்தியா' ஒரு பெரும் ஓட்டை நிறைந்த திட்டம் என ஆன்லைன் வியாபாரிகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.
''ஒரு பக்கம் மோதி அரசு 'மேக் இன் இந்தியா' கோஷத்தை வைக்கிறது மற்றொரு பக்கம் தங்களின் பண பலத்தால் வியாபாரிகளை ஒழிப்பதற்கு பேர்போன வால்மார்ட் போன்ற நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கிறது. இந்தக் களம் இந்திய சில்லறை வர்த்தக வியாபாரிகள் இப்பெரு நிறுவனங்களோடு சமமாக போட்டி போடுவதற்கு ஏற்றதல்ல மேலும், குறு வியாபாரிகள் இப்போட்டியில் பின்தள்ளப்படுவார்கள்'' என அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
குறைந்த விலை மற்றும் நிறைய வகை
வால்மார்டின் வருகையில் இந்தியாவின் சில்லறை வணிகத் துறையும் தழைக்கும். வால்மார்ட் வந்த பிறகு வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் பொருட்களை பெறுவார்கள். மேலும் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வெறு வகையான தயாரிப்புகள் கிடைக்கும். வால்மார்ட்டுடன் போட்டியிட அமேசான் புதிய வியூகத்தை வகுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். மொத்தத்தில் வாடிக்கையாளர்கள் பலனடைவார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












