மனைவியின் குடும்பப்பெயரை தனது பெயருடன் சேர்த்துக்கொள்ளும் ஆண்கள்

திருமணத்திற்குப்பின் மனைவியின் குடும்பப்பெயரை எடுத்துக்கொள்ளும் ஆண்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி

பாலிவுட் நடிகை சோனம் கபூர் தன் திருமணத்திற்குப்பின் தன் கணவரின் குடும்பப் பெயரை தன் பெயருக்குப்பின்னால் சேர்த்துக்கொண்டது கணவனின் குடும்பப்பெயரை எடுத்துக் கொண்டு பெண் தன் அடையாளத்தை இழக்க வேண்டுமா என்ற விவாதத்திற்குள்ளாகி உள்ளது.

பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமண படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களை கடந்த 3 நாட்களாக வலம் வந்து நாமும் திருமண சடங்குகளில் பங்கேற்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

சோனம் கபூர் இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டரைப் பயன்படுத்தி, தன் பெயருடன் தன் கணவரின் குடும்பப் பெயரான அஹுஜா என்ற பெயரை இணைத்துக்கொள்வதாக அறிவித்தார். இது நம் வாழ்வில் உள்ள குழப்பங்களை நெருங்குவது போன்றே உணர வைத்தது.

சோனம் செய்தது சரிதானா? பெண் தன் திருமணத்திற்குப்பின் தன் கணவனின் குடும்பப் பெயரை எடுத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது தன் தந்தையின் குடும்பப் பெயரிலேயே நீடிக்க வேண்டுமா? இருப்பது இரண்டே வாய்ப்புதான்.

திருமணத்திற்குப்பின் மனைவியின் குடும்பப்பெயரை எடுத்துக்கொள்ளும் ஆண்கள்

பட மூலாதாரம், Twitter

பெண்களுக்கு தங்கள் சொந்த குடும்பப் பெயரைக்கொள்ள முடியாது அதேபோல் தன் தாயின் குடும்பப் பெயரையும் வைத்துக்கொள்ள முடியாது. அவளது அடையாளம் அவள் தந்தையுடனோ அல்லது கணவனுடனோ தான் தொடர்புபடுத்தப்படுகிறது.

இந்தியாவில் இந்து குடும்பங்களில் திருமணத்திற்குப்பின் இதுதான் வழக்கம். பல இடங்களில் பெண்ணின் பெயரே மாற்றப்படுகிறது, மற்ற இடங்களில் அவளது குடும்பப் பெயர் நீக்கப்பட்டு கணவனின் குடும்பப் பெயர் சேர்க்கப்படுகிறது.

தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு பிராந்தியங்கள் தவிர இந்தியாவின் மற்ற இடங்களில் நீண்ட காலமாகவே இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

தங்கள் குடும்பப் பெயர்களை மாற்ற மாட்டோம் என்று நடிகைகள் ஷில்பா ஷெட்டி-குண்ட்ரா, ஐஸ்வர்யா ராய்- பச்சன் மற்றும் கரீனா கபூர்- கான் போன்றோர் முடிவு செய்திருப்பது நீண்ட விவாதம், விளக்கத்திற்குப்பிறகே எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவர்கள் தங்கள் குடும்பப் பெயர்களை தாங்குவதால் கிடைக்கும் புகழுக்காக செய்தார்களா, அல்லது தங்கள் திருமணத்திற்குப்பிறகும் தங்கள் அடையாளங்களை இழக்க விரும்பவில்லை என்ற காரணத்தால் செய்தார்களா?

திருமணத்திற்குப்பின் மனைவியின் குடும்பப்பெயரை எடுத்துக்கொள்ளும் ஆண்கள்

பட மூலாதாரம், Twitter

கடந்த பல தசாப்தங்களாக வளர்க்கப்பட்ட புதிய புரிதல், பெண் திருமணத்திற்குப்பின் தன் பெயரை மாற்றுவது தன் தகுதியை குறைத்துக் கொள்வது அல்லது தன் சொந்த அடையாளத்தை ஒழிப்பது என்பதுதான்.

திருமணம் புதிய உறவினை வழங்குகிறது. திருமணம் முடிந்த பின்னும் இருவரும் தங்கள் அடையாளத்தை தக்க வைக்க வேண்டும். கணவன் தன் பெயரில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராத போது மனைவியும் கொண்டு வரவேண்டியதில்லை.

பாலிவுட் பிரபலங்கள் ஷபானா ஆஸ்மி, கிரண் ராவ் மற்றும் வித்யா பாலன் ஆகியோர் தங்கள் திருமணத்திற்குப்பின் பெயர் மாற்றம் செய்யவில்லை.

பெண்கள் திருமணத்திற்குப்பின் பெயரை மாற்றிக்கொள்வது மிகவும் பழமையானது. இந்தியாவில் மட்டுமே நடக்கும் விஷயம் அல்ல.

இந்த வழக்கம் 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கியது என்று வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமணத்திற்குப்பின் பெண் தன் பெயரை இழந்து இன்னார் மனைவி என்று மட்டும் அழைக்கப்படுகிறார். ஆணும் பெண்ணும் திருமணம் என்ற உறவில் இணைந்து ஆணின் குடும்பப்பெயரால் அந்த உறவு அடையாளம் காணப்படுகிறது என்கிறார்கள்.

திருமணத்திற்குப்பின் மனைவியின் குடும்பப்பெயரை எடுத்துக்கொள்ளும் ஆண்கள்

பட மூலாதாரம், Getty Images

பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று குரல் எழுப்பப்பட்டதன் காரணமாக, இந்த புரிதல் மாறி, பெண்கள் தங்கள் கணவனின் குடும்பப் பெயரை தாங்கிக் கொள்ள மறுக்க தொடங்கினர். பல நாடுகளும் இதற்காக சட்டம் இயற்றின. கிரீஸ் நாட்டில் 1070களிலும் 1980களிலும் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக பெண்கள் தங்கள் பெயரை திருமணத்திற்குப்பின்னரும் கண்டிப்பாக தொடர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

தன் கணவன் குடும்பப் பெயரை பெண்கள் திருமணத்திற்குப்பின் தன் பெயருக்குப் பின்னால் சேர்ப்பது கிரீஸ் நாட்டில் சட்ட விரோதம். குழந்தைகளின் குடும்பப் பெயர்களுக்கும் சட்டம் தெளிவாக இருக்கிறது. குழந்தைகளின் குடும்பப் பெயர் என்னவாக இருக்க வேண்டும் என்பது பெற்றோரின் உரிமையாக வழங்கப்பட்டுள்ளது. குழந்தை தன் தாய் அல்லது தந்தையின் குடும்பப் பெயரை பயன்படுத்தலாம்.

இந்த சீர்திருத்தம் மட்டும் இல்லை. பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உரிமையும் இந்த நேரத்தில் கொண்டு வரப்பட்டது. இதே போல் 1975 ஆம் ஆண்டு இத்தாலியிலும் குடும்பச் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. பெண்களுக்கு தங்கள் திருமணத்திற்குப் பின் தங்கள் பெயர்களை தக்க வைக்கும் உரிமை வழங்கப்பட்டது.

பெல்ஜியத்திலும் பெண்களின் பெயர்களில் மாற்றம் செய்யப்படுவதில்லை. முந்தைய சட்டங்கள், குழந்தைகள் தந்தையின் குடும்பப் பெயரை தாங்குவார்கள் என்று குறிப்பிட்டன. பின்னர் 2014 ஆம் ஆண்டில் இதுவும் திருத்தப்பட்டது. குழந்தையின் பெயருடன் தாயின் குடும்பப் பெயரைக் குறிப்பிடலாம் என்று அறிமுகம் செய்யப்பட்டது.

திருமணத்திற்குப்பின் மனைவியின் குடும்பப்பெயரை எடுத்துக்கொள்ளும் ஆண்கள்

பட மூலாதாரம், VANDERLEI ALMEIDA

நெதர்லாந்தில் ஆண்கள் தங்கள் திருமணத்திற்குப்பின் மனைவியின் குடும்பப் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ள முடியும். அங்கும் அவர்களின் குழந்தைகள் தாயின் குடும்பப் பெயரையோ, தந்தையின் குடும்பப் பெயரையோ சேர்த்துக் கொள்ள முடியும்.

இந்த விவாதம் பலமுறை தலைதூக்கியது. 'டைட்டானிக்' திரைப்படத்தின் நாயகி கேட் வின்ஸ்லெட், தான் தன் கணவனின் குடும்பப் பெயரை தாங்கிக் கொள்ள விரும்பவில்லை என்றார்.

இது அவருக்கு 3-ஆவது திருமணம். தனக்கு தன் பெயரை பிடிக்கும் என்றும், அந்த பெயரை எப்போதும் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் அவர் சொன்னார். கேட் வின்ஸ்லெட் 1998ல் முதன்முறையாக திருமணம் செய்தார். அப்போதும் அவர் தன் பெயரை மாற்றவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண் தன் பெயரை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது அடையாளச் செயலாகும். பெண் தன் திருமணத்திற்குப்பின் பிறந்த வீட்டை விட்டு கணவனின் வீட்டிற்கு குடியேறுகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மனைவியின் வீட்டோடு மாப்பிள்ளையானால் கணவன் கேலிப்பேச்சுக்கு ஆளாகிறார். அவரது ஆண்மையும் விமர்சிக்கப்படுகிறது. ஆகவே, எந்த வகையான சமத்துவத்தை நாம் விரும்புகிறோம்?

ஒருவரின் பெயரை மாற்றிக்கொள்ளாததும் கணவனின் குடும்பப் பெயரை சேர்த்துக் கொள்வதும் தொடக்கமாகத்தான் இருக்கும். ஆனால் இது எங்கே போகும், இன்னும் என்ன கொடுக்க வேண்டும் என்பது நீங்களும் நானும் முடிவு செய்ய வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :