கர்நாடகாவில் ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் போட்டியிடாதது ஏன்? #GroundReport
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கர்நாடக மாநிலத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ், ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வேட்பாளரை நிறுத்தாமல், புதுமுகம் ஒருவருக்கு ஆதரவளிக்கிறது. தர்ஷன் புட்டன்னைய்யா என்ற அந்த வேட்பாளர் யார், அவரது பின்னணி என்ன?

மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டே தொகுதியின் மிக உள்ளடங்கிய கிராமமான செந்தகாலுவில் 40 வயதாகும் தர்ஷன் புட்டன்னைய்யாவின் பிரசார வாகனம் செல்லும்போது கிராமத்து மக்கள் சூழ்ந்துகொள்கிறார்கள். பெரும் கூட்டம் வண்டியைச் சூழ்ந்துகொண்டு அவரிடம் கைகொடுக்கவும், துண்டு அணிவிக்கவும் முயல்கிறார்கள்.
சிலர் வலுக்கட்டாயமாக தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல முயல்கிறார்கள். எல்லோரையும் சமாளித்து மீண்டும் வாகனத்தில் ஏறி தனது பிரசாரத்தைத் தொடர்கிறார் தர்ஷன் புட்டன்னைய்யா.
மேல்கோட்டைத் தொகுதியில் ஸ்வராஜ் இந்தியாவின் சார்பில் போட்டியிடும் தர்ஷன் புட்டன்னையா கர்நாடக அரசியல் களத்திற்கு புதியவர்.
ஆனால், அவரது குடும்பத்திற்கு அரசியல் புதிதல்ல. கர்நாடக மாநிலத்தின் பெரும் மதிப்பிற்குரிய விவசாய சங்கத் தலைவரான மறைந்த கே.எஸ். புட்டன்னய்யாவின் மகன்தான் தர்ஷன்.
மேல்கோட்டைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புட்டன்னைய்யா கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மரணமடைய, அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தை நடத்திவந்த தர்ஷன், அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவுசெய்தார்.

புட்டன்னைய்யாவின் நினைவஞ்சலிக் கூட்டத்திலேயே தன் தந்தையின் பணிகளை அவர் தொடரப்போவதாக அறிவித்திருந்த நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், சுவராஜ் இந்தியாவின் சார்பில் தந்தையின் தொகுதியான மேல்கோட்டை தொகுதியிலேயே போட்டியிட முடிவுசெய்தார் தர்ஷன்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் தொகுதிக்கு வந்திறங்கி அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
"நான் அமெரிக்காவில் வேறு ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தாலும், என் தந்தை ஈடுபட்டிருந்த விவசாய சங்கப் பணிகள் என்னை ஈர்த்துக்கொண்டேயிருந்தன. என் தந்தை இறந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கானவர்கள், நான் என் தந்தையின் அடிச்சுவட்டில் நடக்க வேண்டுமென்றார்கள். ஆகவேதான் இந்தத் தேர்தலில் நிற்கிறேன்" என்கிறார் தர்ஷன்.
கே.எஸ். புட்டன்னைய்யா அதாவது கடந்த நவம்பர் மாதத்திலேயே சுவராஜ் இந்தியா அமைப்பில் சேர்ந்துவிட்டதால், தானும் அதே அமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதாகச் சொல்கிறார் புட்டன்னைய்யா.
கர்நாடக ராஜ்ய ரய்த்தா சங்கம் என்ற விவசாய அமைப்பின் தலைவராக இருந்த புட்டன்னையா, விவசாயக் கூலிகளின் உரிமை, உழைக்கும் மகளிரின் பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர்.
காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரை இரு மாநில விவசாயிகளும் பேசுவதன் மூலம் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் எனக் கூறிவந்தவர். இதனால், தமிழக விவசாயிகளின் கவனத்தையும் ஈர்த்தவர்.
"காவிரி விவகாரத்தில் என் தந்தையின் வழிதான் என்னுடையதும். இரு மாநில விவசாய சங்கத் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விவகாரம். ஆகவே, இதில் அரசியல் செய்யக்கூடாது" என்கிறார் தர்ஷன்.

தர்ஷனின் இந்த நிலைப்பாட்டின் காரணமாக அவரை ஆதரிப்பதாகவும் அவருக்காகப் பிரசாரம் செய்யப்போவதாகவும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி அறிவித்திருக்கிறது.
தர்ஷன், சுவராஜ் இந்தியா அமைப்பின் சார்பில் போட்டியிட முடிவுசெய்ததும், அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என மாநில முதல்வர் சித்தராமய்யா அறிவித்தார். தொகுதிக்குள் காங்கிரசைச் சேர்ந்த சிலருக்கு இந்த விவகாரத்தில் அதிருப்தி என்றாலும் தொண்டர்களைப் பொறுத்தவரை அவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
"ஆனாலும், தொங்கு சட்டசபை ஏற்பட்டால் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேசித்தான் காங்கிரசிற்கு ஆதரவளிப்பது குறித்து முடிவுசெய்வோம்" என்கிறார் தர்ஷன்.
மதச்சார்பற்ற ஜனதாதளம் தர்ஷனுக்கு ஆதரவளிப்பதில்லை என்று முடிவுசெய்து நாடாளுமன்ற உறுப்பினரான சிஎஸ் புட்டராஜுவை நிறுத்தியிருக்கிறது.
இந்தத் தேர்தலில் தர்ஷன் வெற்றிபெறுகிறாரோ இல்லையோ, தேர்தலுக்குப் பிறகு விவசாய அமைப்பை அவர் எப்படி முன்னெடுத்துச் செல்கிறார் என்பதே அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
பிற செய்திகள்:
- மலேசியா: 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி
- 'கர்நாடக அரசியலில் தமிழர்களின் செல்வாக்கு பூஜ்யம்': காரணம் என்ன?
- ''என் மேல பொறாமை வரத் தானே செய்யும்': காலா விழாவில் ரஜினி
- டிரம்ப் - கிம் சந்திப்பு: சண்டை முதல் சமரசம் வரை
- "இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை" : நடிகர் ரஜினி
- முடி உதிர்வதை எலும்பு முறிவு சிகிச்சை மருந்து தடுக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













