தாய்லாந்து மன்னர் இறுதிசடங்கு: ஓராண்டுக்கு பிறகு துவங்குகிறது

ஓராண்டுக்கு முன்பு இறந்த தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டின், ஐந்து நாள் இறுதிசடங்கு புதன்கிழமை தொடங்கியது.

தாய்லாந்து மன்னர், 2016ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், தனது 88 வயதில் இயற்கை எய்தினார். மன்னரின் உடலுக்கு, அவரின் மகனும், அடுத்த மன்னருமான மகா வஜ்ரலாங்கோர்ன் எரியூட்டவுள்ளார்.

புத்த முறைப்படி, அரண்மனையில், மன்னரின் இறுதிசடங்கு நிகழ்வுகள் துவங்கியது.

வியாழக்கிழமை நாட்டில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று, அனைத்து வணிக நிறுவனங்களும் நாள் முழுவதுமோ, நண்பகல் முதலோ மூடப்படும்.

வியாழக்கிழமை காலை, அரண்மனையில் இருந்து, சுடுகாடு வரை, சிதை ஒரு தேரில் வைத்து ஊர்வலமாக கொண்டுவரப்படும்.

ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வேவ்வேறு நாடுகளை சேர்ந்த 40 அதிகாரிகளும் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பார்கள்.

மன்னரின் சாம்பல் சேகரிக்கப்பட்டு, மீண்டும் அரண்மனைக்கு எடுத்துசெல்லப்படும். அதன்பின்பு, இரண்டு நாட்களுக்கு இறுதிசடங்கு நிகழ்வுகள் தொடரும்.

பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளையும், காட்சிகளையும் பார்த்த தாய்லாந்துக்கு, ஒரு நிலைத்தன்மை வழங்குபவராக மன்னர் பார்க்கப்பட்டார்.

2016ஆம் ஆண்டு, அக்டோபர் 13ஆம் தேதி மன்னர் மரணித்தது முதல், ஒரு ஆண்டிற்கு, அந்நாடு துக்கம் அனுசரித்தது. பலரும் கருப்பு நிற ஆடையையே அணிந்தனர்.

இந்த இறுதிசடங்கிற்காக ஓர் ஆண்டு ஆயத்தப்பணிகள் நடந்தன. அரண்மனை அருகில், இறதிச்சடங்கு வளாகமும் கட்டப்பட்டது.

இந்த எரியூட்டும் வளாகத்தில், பல புராண விலங்குகளின் சிலைகளும், நல்ல விலங்குகளாக கருதப்படும் சிங்கம் மற்றும் யானையின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

புத்த பாரம்பரியப்படி, இறுதிசடங்கு என்பது இந்த பேரண்டத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். சிதை என்பது புனித மலையையும் குறிக்கும்.

இந்த இறுதிசடங்கில் பங்கேற்க 2.5லட்சம் மக்கள் வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு வந்த மக்கள், கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

இறுதிசடங்கு நிகழ்ச்சிகளில் பங்குகொள்பவர்களுக்கான விதிமுறைகள் மிகவும் கடுமையானவை. தாய்லாந்து அரசர் அல்லது அக்குடும்பத்தினர் குறித்த அவதூறு பேசுவது எனபது சட்டவிரோதமானது. இதற்காக அங்கு போடப்பட்டுள்ள சட்டமே, உலகின் மிகவும் கடுமையான சட்டமாக பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :