டிரம்ப் பயணத்தடை மீதான தடையை விலக்க மேல் நீதிமன்றம் மறுப்பு

பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வசிக்கின்ற 7 நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு பயணத்தடையை மீண்டும் அமல்படுத்த அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்திருக்கிறது.

பயணிகளான தாயும் சேயும்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, டிரம்பின் நிர்வாக ஆணை செயல்படுத்தப்பட்டபோது, விமான நிலையங்களில் குழப்பங்கள் ஏற்பட்டன

டிரம்பின் நிர்வாக ஆணைக்கு தடை விதித்து கீழ் நீதிமன்றம் ஒன்று பிறப்பித்த தடையாணையை அகற்ற முடியாது என்று மேல்முறையீட்டுக்கான பொது அதிகார வரம்புடைய 9-வது அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இதையொட்டி, தேசிய பாதுகாப்பு ஆபத்திலுள்ளது, இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்ள போவதாக கோபத்துடன் டிவிட்டர் பதிவிட்டு டிரம்ப் பதிலளித்திருக்கிறார்.

டிரம்ப் விதித்த தடையை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்கா எதிர்கொள்ளும் என்று எண்ணப்படும் தீவிரவாதத்தை, அரசு நிரூபிக்கவில்லை என்று இந்த நீதிமன்ற அமர்வின் 3 நீதிபதிகளும் ஒருமனதாக தெரிவித்திருக்கின்றனர்.

"இந்த நிர்வாக ஆணையில் குறிப்பிட்டுள்ள வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்று அரசு எந்தவொரு சான்றுகளையும் வழங்கவில்லை" என்று இந்த அமர்வின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் குடிவரவு கொள்கையை உருவாக்குவது அதிபர் என்கிற ஒரே நபர்தான் என்கிற வாதத்தை இந்த நீதிமன்ற அமர்வு மறுத்திருக்கிறது.

டிரம்ப் டிவிட்டர்

பட மூலாதாரம், Twitter

"டிரம்பின் நிர்வாக ஆணையை விளக்குகின்ற அளவில் நீதிமன்றத்திடம் சான்றுகளை வழங்குவதற்கு மாறாக, அந்த முடிவை நீதிபதிகள் மீளாய்வு செய்ய கூடாது என்ற நிலையை அரசு எடுத்துள்ளது" என்று இந்த நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்து பதிலளித்திருக்கும் அதிபர் டிரம்ப், இதுவொரு அரசியல் முடிவு என்று ஒலிப்பதிவு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை சார்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு செய்த நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முடிவை மீளாய்வு செய்து, அதற்கு இருக்கின்ற மாற்று வழிகளை பார்க்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது.

டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஒரு வார கால இறுதியில் வெளியிடப்பட்ட நிர்வாக ஆணையால், அமெரிக்க எல்லைகளில் மக்கள் தடுத்து நிறுத்தப்பட போராட்டங்களும், குழப்பங்களும் ஏற்பட்டன.

இந்த தடை என்பது அமெரிக்க அதிபர் தனக்கிருக்கும் அதிகாரத்தை சட்டப்பூர்வமாக செயல்படுத்தியிருக்கும் ஒரு நடவடிக்கைதான் என்று அமெரிக்க அரசை பிரதிநிதித்துவம் செய்கின்ற வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் வாதிட்டனர்.

ஆனால், இந்த நிர்வாக ஆணை அமெரிக்க அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என்றும், முஸ்லீம்களுக்கு எதிரானது என்றும் அமெரிக்காவின் இரண்டு மாநிலங்கள் முறையிட்டன.

இந்த வழக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிகிறது.

காணொளி: டிரம்ப் ஆட்சியும் சீனாவுடனான உறவும்

காணொளிக் குறிப்பு, டிரம்ப் ஆட்சியும் சீனாவுடனான உறவும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்