முஸ்லிம் பெண்களின் நீச்சல் உடைக்குத் தடை முதல், தலை குனிந்த பெண் அதிபர் வரை - ஓர் உலகப் பார்வை
2016 ஆம் ஆண்டு உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். ஒவ்வொரு செய்திக்கும் அந்த செய்தியின் முழு தகவலை தெரிந்து கொள்ளும் விதமாக அந்த செய்தியுடன் அதுகுறித்த கட்டுரைக்கான லிங்கையும் இணைந்துள்ளோம்.
உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் முதல் தொகுப்பு 2016 ஆம் ஆண்டில் உலகம் கண்டவை: ஒரு மீள் பார்வை
பிரிட்டனின் புதிய பிரதமராக தெரீசா மே பதவியேற்பு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்ல வேண்டுமா அல்லது வேண்டாமா என்று மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 50 சதவிகிததற்கு அதிகமானோர் பிரிந்து செல்ல வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். வாக்கெடுப்பை தொடர்ந்து தனது பிரதமர் பதவியை டேவிட் கேமரன் ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக தெரீசா மே பதவியேற்று கொண்டார். ராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் 13வது நபர் தெரீசா மே ஆவார்.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : பிரிட்டன் பிரதமராக தெரீசா மே பொறுப்பேற்றார்
துருக்கியில் அட்சிக்கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்ட நாள்
துருக்கி ராணுவத்தின் ஒரு பிரிவினர் திடீரென துருக்கியின் நாடாளுமன்ற கட்டடத்தில் டாங்கிகளாலும், விமானங்களாலும் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, நாட்டை ஒரு "அமைதிக் கவுன்சில்" நடத்துவதாகவும், நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மற்றும் ராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தனர். பின் தொலைக்காட்சி நேரலையில் பேசிய அதிபர் எர்துவான், பொதுமக்கள் சாலைகளில் வந்து போராடும்படி அழைப்பு விடுத்தார். இதன் காரணமாக, ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியானது தோல்வியில் முடிந்தது. அமெரிக்காவில் வாழும் மத போதகர் ஃபேதுல்லா குலன் மீது ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு முக்கிய மூளையாக செயல்பட்டதாக துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : துருக்கியில் ராணுவ அதிரடிப் புரட்சி முயற்சி
ஆகஸ்ட் - 5பிரேசிலின் மரக்கானா மைதானத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கின. 207 நாடுகளிலிருந்து 11,237 போட்டியாளர்கள் 306 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். பதக்கப்பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றனர். ஃபிஜி, ஜோர்டன் மற்றும் கொசோவா ஆகிய நாடுகள் முதல் முறையாக பதக்கம் வென்றன. தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே நான்கு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப்பதக்கம் வென்றும் 19 வயது சிமோன் பைல்ஸ் சாதனை புரிந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : ரியோ ஒலிம்பிக்: ஒரு நுட்பமான அலசல்
ஆகஸ்ட் - 12முஸ்லிம் பெண்களின் முழு நீச்சல் உடைக்கு கேன்ஸ் நகரம் தடை
பாதுகாப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி கடற்கரையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடல் நீச்சல் உடைக்கு பிரான்ஸில் உள்ள கேன் நகரம் தடைவிதித்தது உத்தரவிட்டது. கடற்கரைக்கு செல்பவர்கள், நல்லொழுக்க நெறிமுறைகள் மற்றும் மதச்சார்பின்மையை மதிக்க வேண்டும். பிரான்ஸ் மற்றும் அதன் மதம் சார்ந்த தளங்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வரும் வேளையில், மத அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் நீச்சல் உடையால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : முஸ்லிம் பெண்களின் நீச்சல் உடைக்கு கேன் நகரில் தடை
ஆகஸ்ட் - 24 மத்திய இத்தாலியை சின்னாபின்னமாக்கிய நிலநடுக்கம்
இத்தாலியின் மத்திய பகுதியில் 6.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 268 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 400 பேர் காயம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து இத்தாலிப் பிரதமர் மட்டையோ ரென்ஸி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தாலியில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நோர்ட்ச்சா நகரமும் ஒன்று. இடைக்காலத்தை சேர்ந்த புனித பெனடிக்ட் பேராலயம் தரைமட்டமானது.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : இத்தாலி நிலநடுக்கம் ; மீள்கட்டமைப்புக்கு அவசர நிதி திரட்ட அமைச்சரவை கூட்டம்
ஆகஸ்ட் - 31 பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிரேசில் அதிபர் தில்மா ருசெஃப்
பிரேசிலில் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் பற்றாக்குறையை மறைக்க பட்ஜெட்டில் மோசடி செய்ததாக அந்நாட்டு அதிபர் தில்மா ருசெஃப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த மே மாதம் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இச்சுழலில், பிரேசில் செனட்டில் தில்மா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மொத்த 81 உறுப்பினர்களில் 61 பேர் தில்மாவுக்கு எதிராக வாக்களித்து அவரை பதவிநீக்கம் செய்தனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை தில்மா திட்டவட்டமாக மறுத்து வந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : பிரேசில் அதிபர் தில்மா ருசெஃப் பதவி நீக்கம்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முடிவு
செப்டம்பர் - 4 அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் சூட்டினார் போப் ஃபிரான்சிஸ்
ரோமன் கத்தோலிக்க பெண் துறவியான அன்னை தெரஸாவை வத்திக்கானில் போப் ஃபிரான்சிஸ் புனிதராக பிரகடனப்படுத்திய தினம். இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள், 13 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். அல்பேனியாவை சேர்ந்த அன்னை தெரஸா 1997 ஆம் ஆண்டு இறந்தார். இந்தியாவின் தெருக்களில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் மக்களை பராமரிப்பதற்காக அன்பின் மறைபரப்பு கன்னியர் சபையை அவர் நிறுவினார்.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்: மக்கள் மகிழ்ச்சி
செப்டம்பர் - 7ஒலிம்பிக்ஸுக்கு இணையாக பாராலிம்பிக்ஸ் போட்டிகள்
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பாராலிம்பிக்ஸ் போட்டிகள் பிரேசிலில் சிறப்பாக நடைபெற்றுள்ளன. 159க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மொத்தம் 4,316 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். பாராலிம்பிக்ஸ் வரலாற்றிலே முதன் முறையாக அதிக பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 22 விளையாட்டுகளில் 528 போட்டிகள் நடத்தப்பட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. சீனா, பிரிட்டன், யுக்ரைன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பதக்கப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பெற்றன.

பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் - 21 உலக மக்களுக்கும், ஆஃப்ரிக்காவுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்த ஆய்வறிஞர்கள்
உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மக்களிடமிருந்து மரபணுத் தொகுதி சேகரிக்கப்பட்டு விரிசைப்படுத்தப்பட்டன. 40 ஆயிரம் ஆண்டிலிருந்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஆஃப்ரிக்காவைவிட்டு வெளியேறிய ஒரு மக்கள் தொகையினருடன் இந்த மரபணுக்கள் ஒத்துப் போவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 'நேச்சர்' என்ற இயற்கை தொடர்பான இதழில் இரண்டு ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதே இதழில், மூன்றாவதாக வெளியான ஆய்வில், பப்புவா நியு கினியாவில் நடைபெற்ற குறைந்தது ஒரு முந்தைய ஆஃப்ரிக்க இடம்பெயர்வில் இருந்து எஞ்சி உயிர்ப்புடன் இருக்கும் மனித டி என் ஏவின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், LOIC VENANCE
இது குறித்து மேலும் படிக்க : உலகில் உள்ள மக்களுக்கும், ஆஃப்ரிக்காவுக்கும் நெருங்கிய தொடர்பு: ஆய்வறிஞர்கள் கண்டுபிடிப்பு
செப்டம்பர் - 25 உலகிலே மிகப்பெரிய சீன தொலைநோக்கி செயல்படத் தொடங்கிய நாள்
சீனாவின் குவேஜோ மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கியை சீனா முதல்முறையாக கவனிப்பாய்வு செய்த நாள். இந்த தொலைநோக்கி 500 மீட்டர் அளவு பரப்பளவு கொண்டது. பூமியிலிருந்து ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு மேலான தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்திலிருந்து இந்த தொலைநோக்கி தகவல்களை பெற்றுள்ளது. அண்டம் குறித்து விஞ்ஞானிகள் மேலும் புரிந்து கொள்வதற்கும், வேற்றுலக உயிர்கள் குறித்த புரிதலுக்கும் இந்த தொலைநோக்கி உதவியாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தொடக்கம்
ஹேய்ட்டியை புரட்டிப்போட்ட மேத்யூ சூறாவளி
அட்லாண்டிக் பகுதியில் சமீப ஆண்டுகளில் உருவான மிக சக்திவாய்ந்த சூறாவளி தான் மேத்யூ. வீரியம் குறையாத மேத்யூ ஜமைக்கா, ஹேய்ட்டி, கியூபா, பஹாமஸ் மற்றும் அமெரிக்கா என அது சென்ற பாதைகளில் மில்லியன் கணக்கான டாலர் சேதங்களை உருவாக்கியது. இதில், ஹேய்ட்டியானது மேத்யூ சூறவாளியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர் மழை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி லட்சக்கணக்கான மக்களை குடிபெயர வைத்தது. ஹேய்ட்டியில் மட்டும் 800க்கும் அதிகமானோர் மேத்யூவால் கொல்லப்பட்டனர். அதனால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகள் ஆயிரத்தை தாண்டின.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : மேத்யூ சூறாவளியின் உக்கிரத்தை ஹேய்ட்டி தாங்குமா?
அக்டோபர் - 7 : 50 ஆண்டுகால போரை முடித்து வைத்த கொலம்பியா அதிபருக்கு நோபல் பரிசு
கொலம்பியாவில் 52 ஆண்டுகாலமாக ஃபார்க் போராளிகள் மற்றும் கொலம்பிய அரசாங்கம் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டு மோதலை ஓர் சமாதான உடன்படிக்கை மூலம் முடிவுக்கு கொண்டு வந்ததற்காக அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாக ஃபார்க் போராளிகளுடன் ( FARC- Revolutionary Armed Forces of Colombia) நடத்திய அமைதி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அவர் கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தத்திற்காக நார்வே நீதிபதிகள் அவரைப் பாராட்டினர். ஃபார்க் கிளர்ச்சியாளர்களோடு நிகழ்ந்த மோதல்களின்போது கொல்லப்பட்டோருக்கு இந்த நோபல் பரிசை யுவான் மானுவேல் சாண்டோஸ் அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : கொலம்பிய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஆக்டோபர் - 13 இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு பாப் டிலனுக்கு
புகழ்பெற்ற அமெரிக்க ராக் மற்றும் நாட்டுப்புற இசைப் பாடகரான, பாப் டிலன், இசையுலகில் பெரும் ஆளுமையாகத் திகழ்பவர். அவரது 'தெ டைம்ஸ், தே ஆர் எ சேஞ்சிங்' , ( The times, they are a changin') , 'ப்லோயிங் இன் தெ விண்ட்' ( Blowing in the Wind) போன்ற பாடல்கள் 1960களின் மிகப் பிரசித்தி பெற்ற பாடல்களாக ஒலித்தவை. அவை போருக்கெதிரான மற்றும் சிவில் உரிமைகள் இயக்கத்துக்கு ஆதரவான முழக்கமாகவும் ஒலித்தன. ''அமெரிக்க பாடல் பாரம்பரியத்துக்குள் புதிய கவித்துவ வடிவங்களை உருவாக்கியதற்காக'' அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், AP
இது குறித்து மேலும் படிக்க : அமெரிக்க பாடகர் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
ஆக்டோபர் - 13உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த தாய்லாந்து மன்னர் மரணம்
ஓர் இளைஞனுக்கே உரிய துடிப்புடன், புகைப்படக்கலை, விளையாட்டு, சாக்ஸபோன் இசைக்கருவிக்கேற்றவாரு பாடல் எழுதுதல், ஓவியம், எழுத்து என பல்வேறு கலைகளை ஆர்வமுடன் கற்றுக் கொண்டவர் தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட். தன்னுடைய 18 வயதில் தாய்லாந்து மன்னராக முடிசூடப்பட்டார். தனது ஆட்சிக்காலத்தில், பெருமளவிலான ராணுவ புரட்சிகளை சந்தித்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, உயர்ந்த தலைவராகப் போற்றப்பட்டவர்.

பட மூலாதாரம், Paula Bronstein
இது குறித்து மேலும் படிக்க : தாய்லாந்து அரசர் பூமிபோன் - வாழ்க்கைக் குறிப்பு
நவம்பர் - 8 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலரியை வீழ்த்தினார் டொனால்ட் டிரம்ப்
நியு யார்க்கின் ரியல் எஸ்டேட் வணிகர் ஃப்ரெட் டிரம்ப்பின் நான்காவது மகன் டொனால்ட் டிரம்ப். பள்ளியில் தவறாக நடந்து கொண்டதால் 13வது வயதிலேயே ராணுவப் பள்ளி ஒன்றுக்கு அனுப்பப்பட்டார். அவர் தந்தை காலமானதை தொடர்ந்து, தனது குடும்ப வணிகத்தை லாபகரமாக பெருக்கி பல கட்டடங்களை கட்டினார். நெக் டைகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் விற்பனை வரை பல பொருட்கள் அவர் நடத்தும் பல நிறுவனங்களால் விற்கப்படுகின்றன. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டனை தோற்கடித்து அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : அமெரிக்க அதிபரான பெரு வணிகர்
நவம்பர் - 25 கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்த தினம்
1926 ஆம் ஆண்டு கியூபாவின் தென் கிழக்கு மாநிலமான ஓரியண்ட் மாகாணத்தில் பிறந்தார் காஸ்ட்ரோ. 1956 ஆம் ஆண்டு செ குவெராவுடன் இணைந்து அரசுக்கு எதிராக கொரில்லா போர்களை நடத்தினார். சர்வதேச அளவில், உலக மக்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவானஓர் உணர்வை உருவாக்கத் துணை நின்றவர் ஃபிடெல் காஸ்ட்ரோ. ஃபிடேல் காஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ 638 முறை முயற்சித்து தோல்வியை தழுவியது. 2008 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக காஸ்ட்ரோ பதவி விலகினார். தன்னுடையை 90வது வயதில் ஃபிடெல் காலமானார்.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்
டிசம்பர் - 9தென் கொரியா அதிபர் மீதான குற்ற விசாரணைக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு
தன்னுடைய பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்யும் நோக்கத்தில், தென் கொரியாவில் அதிபர்கள் இரண்டாவது முறையாக அதிபர் பதவியை வகிக்க அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்தும் யோசனையை தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹை முன்மொழிந்தார். சில நாட்கள் கழித்து, நாட்டின் உள்துறை விவகாரங்களில் தன்னுடைய நீண்டகால தோழியான சோய் சூன்-சில் அதிகாரம் செலுத்த அனுமதித்தை பார்க் குன் ஹை ஒப்புக் கொண்டார். அதிலிருந்து, அவருக்கு எதிராக தென் கொரியாவில் போராட்டங்கள் வெடித்தன. இச்சூழலில், அதிபர் மீது விசாரணை நடத்தி பதவியிறக்கும் நடைமுறைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : தென் கொரியா: அதிபர் மீதான குற்ற விசாரணைக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு
டிசம்பர் - 22சிரியாவில் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது
சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு சண்டை மூண்டு போராளி குழுக்கள் உருவாகின. இந்த போராளி குழுக்கள் பழம்பெரும் நகரமான அலெப்போவின் மையப்பகுதியை கைப்பற்றின. பின், உலக நாடுகளின் உதவியோடு இந்த பயங்கரவாத குழுக்களை ஒழித்துக்கட்ட சிரியா அரசாங்கம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இந்த போரில் சுமார் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக கணிக்கப்படுகிறது. இறுதியாக, போராளிகளின் கோட்டையாக கருதப்பட்ட அலெப்போ நகரை சிரியா அரசாங்கம் மீண்டும் கட்டுப்பாட்டில் எடுத்தது.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து மேலும் படிக்க : சிரியாவின் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது
2016-இல் விளையாட்டு உலகம் - சாதனைகளும், சர்ச்சைகளும் 2016-இல் வியக்க வைத்த விளையாட்டு உலகம்
உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் முதல் தொகுப்பு 2016 ஆம் ஆண்டில் உலகம் கண்டவை: ஒரு மீள் பார்வை












