தாய்லாந்து அரசர் பூமிபோன் - வாழ்க்கைக் குறிப்பு
இன்று காலமான தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட் உலகிலேயே நீண்ட காலம் மன்னராக இருந்தவர். அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறிப்பு.

பட மூலாதாரம், AFP
தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட், உலகில் நீண்ட காலம் அரசராக இருந்தவர்.
தனது ஆட்சிக்காலத்தில், பெருமளவிலான ராணுவப் புரட்சிகளைச் சந்தித்த நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்றியவராக அவர் பார்க்கப்படுகிறாா்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு, உயர்ந்த தலைவராகப் பார்க்கப்பட்ட அதே நேரத்தில், அரசியல் கொந்தளிப்பான சூழ்நிலைகளில் சில நேரம் அவர் தலையிட்டிருக்கிறார்.
வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் சட்டபூர்வ மன்னராக இருந்தாலும், பெரும்பாலான தாய்லாந்து மக்கள் அவரை கடவுளின் அவதாரமாகவே மதித்தார்கள்.
பூமிபோன் அடூன்யடேட், அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள கேம்பிரிட்ஜில் 1927-ம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி பிறந்தார்.
அவரது தந்தை இளவரசர் மஹிடோல் அடூன்யடேட், தனது மகன் பிறந்தபோது, ஹார்வர்டில் படித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அந்தக் குடும்பம் தாய்லாந்து திரும்பியது. அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது தந்தை காலமானார்.

பட மூலாதாரம், AP
தந்தையின் மரணத்துக்குப் பிறகு, அவரது தாய் ஸ்விட்சர்லாந்தில் குடியேறினார். இளவரசர் அங்குதான் கல்வி பயின்றார்.
ஓர் இளைஞனுக்கே உரிய துடிப்புடன், புகைப்படக்கலை, விளையாட்டு, சாக்ஸபோன் இசைக்கருவிக்கேற்றவாரு பாடல் எழுதுதல், ஓவியம், எழுத்து என பல்வேறு கலைகளை ஆர்வமுடன் கற்றுக் கொண்டார்.
1932-ல் முழுமையான மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்ட பிறகு, அரச குடும்பத்தின் செல்வாக்கு குறையத் துவங்கியது. அவரது மாமா, மன்னர் பிரஜாதிபோக் ராஜிநாமா செய்தபோது மேலும் சரிவு ஏற்பட்டது.
ஒன்பது வயது மட்டுமே ஆன பூமிபோனின் சகோதரர் ஆனந்தா சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார்.
அலங்காரத் தலைவர்
1946-ஆம் ஆண்டு, அரசர் ஆனந்தா, மாளிகையில் நடந்த விளக்க முடியாத துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காலமானார். 18 வயதாக இருந்த பூமிபோனுக்கு முடிசூட்டப்பட்டது.
பாரிஸ் பயணத்தின்போது, தனது வருங்கால மனைவி சிரிகி்ட்டை சந்தித்தார். அவர், பிரான்ஸுக்கான தாய்லாந்து தூதரின் மகள்.
புதிய மன்னர் அரியணை ஏறுவதற்கு ஒரு வாரம் முன்னதாக, 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி அந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்தது.

பட மூலாதாரம், AP
தனது ஆட்சியின் முதல் ஏழு ஆண்டுகள், ராணுவ சர்வாதிகார ஆட்சிபோல் தாய்லாந்தில் ஆட்சி நடந்தது. அரசர், அலங்காரத் தலைவர் என்பதைத் தாண்டி அதிகாரம் படைத்தவராகத் திகழ்ந்தார்.
1957-ஆம் ஆண்டு, ஜெனரல் சரித் தனராஜதா ஆட்சியைக் கைப்பற்றினார். அவரை, தலைநகரின் ராணுவக் காப்பாளர் என அவரை அறிவித்தார் மன்னர்.
சரித்தின் சர்வாதிகார ஆட்சியில், அரசாட்சிக்கு புத்துயிரூட்டினார் பூமிபோன். மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்தார். பல வளர்ச்சித் திட்டங்களில், குறிப்பாக வேளாண்மையில் தனது முத்திரையைப் பதித்தார்.
சரி்த் தனது பங்கிற்கு, அரசருக்கு முன்னால், மக்கள் கைகட்டி, வளைந்து மரியாதை செலுத்துதல் உள்பட பல்வேறு அரச குடும்ப பாரம்பரிய நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்தினார்.
வீழ்ந்தது ஆட்சி
1973-ஆம் ஆண்டு ஜனநாகய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியபோது, தாய் அரசியலில் அதிரடியாக நுழைந்தார் பூமிபோன்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அரண்மனையில் ஒதுங்க அனுமதியளிக்கப்பட்டது. இது, அப்போதைய பிரதமர் ஜெனரல் தனோம் கிடிகசோரின் நிர்வாகம் நிலைகுலைய காரணமாக அமைந்தது.
ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வியட்நாம் போர் முடிந்த நிலையில், கம்யூனிஸ ஆதரவாளர்கள் அதிகரிப்பதாக அரச குடும்பம் அச்சப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்,
இடதுசாரி மாணவர்களை துணை ராணுவக் கண்காணிப்பாளர்கள் தாக்கிக் கொன்றதைத் தடுக்க அரசர் தவறிவிட்டார்.

பட மூலாதாரம், AP
ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் நடந்தன. 1981-ல், பிரதமர் பிரேம் டின்சுலானோடுக்கு எதிராக ராணுவ அதிகாரிகள் குழு ஒன்று ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டபோது எதிர்த்து நின்றார் அரசர். கிளர்ச்சியாளர்கள் தலைநகரைக் கைப்பற்றிய நிலையில், அரசருக்கு ஆதரவான படையினர் பாங்காக்கை மீண்டும் தங்கள் வசப்படுத்தினார்கள்.
எனினும், ஆட்சியில் இருக்கும் அரசுக்கு ஆதரவாக நிற்கும் அரசரின் வழக்கம், அவரது பாரபட்சமற்ற தன்மை குறித்து தாய்லாந்து மக்கள் சிலருக்கு கேள்விகளை எழுப்பியது.
1992-ல் பிரதமர் நாற்காலியைப் பிடிக்க, ஜெனரல் சுசிந்திர க்ரப்ரயூன் ராணுவப் புரட்சியில் ஈடுபட்டதற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் சுடப்பட்ட நேரத்தில் பூமிபோன் மீண்டும் தலையிட்டார்.
செல்வாக்கு
சுசிந்திராவையும், ஜனநாயக ஆதரவு தலைவர் சம்லோங் ஸ்ரிமுவாங்கையும், மன்னராட்சி மரபுப்படி, தன் முன் மண்டியிட்டு ஆஜராகும்படி அரசர் உத்தரவிட்டார்.
சுசந்திரா ராஜிநாமா செய்தார். அடுத்து வந்த தேர்தலில், ஜனநாயக சிவிலியன் அரசாங்கம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தது.
கடந்த 2006-ஆம் ஆண்டு, பிரதமர் தக்ஷின் ஷினவத்ர தலைமைக்கு எதிராக ஏற்பட்ட குழப்பத்தின்போது, தலையிடுமாறு அரசருக்கு அடிக்கடி கோரிக்கைகள் வந்தன. ஆனால் அது பொருத்தமற்றது என்று அவர் அழுத்தமாகக் கூறி வந்தார்.

பட மூலாதாரம், AFP
அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில், தக்ஷின் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த நிலையில், அரசரின் செல்வாக்கு மிக முக்கிய ஒன்றாகக் கருதப்பட்டது.
ரத்தம் சிந்தாமல் நடந்த ராணுவப் புரட்சியில் தக்ஷின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, ராணுவம் அரசருக்கு ஆதரவாக நின்றது.
அடுத்து வந்த ஆண்டுகளில், தக்ஷினுக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயல்பட்ட குழுக்கள் இரண்டுமே, அரசரின் பெயரைப் பயன்படுத்தின.
தாய் சமூகத்தில் அரசர் பூமிபோனுக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கை பிரதிபலிக்கும் வகையில், கடந்த 2008-ம் ஆண்டு அவரது 80-வது பிறந்த நாளை, நாடே உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தது.
பயபக்தி
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியில், ஜெனரல் பிரயுத் சன்-ஓசா ஆட்சியைக் கைப்பற்றினார். அடுத்த சில மாதங்களில், ராணுவத்தால் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தால், பிரதமராக்கப்பட்டார்.
சமீப ஆண்டுகளாக நிலவி வரும் ஸ்திரமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர, பெருமளவிலான அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்தார்.
ஆனால், முன்னாள் பிரதமர் தக்ஷினின் கட்சியை அழித்துவிட்டு, அரச குடும்பத்தில் அரியணை மாற்றம் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதே அவரது முன்னுரிமை என விமர்சகர்கள் சந்தேகித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
அரசர் பூமிபோன் மீது மக்களுக்கு உள்ள பக்தி உண்மையானது. அதே நேரத்தில், அரண்மனையின் உறுதியான மக்கள் தொடர்பு இயந்திரங்கள் இதை மிகவும் கவனமாக வழிநடத்திச் சென்றன.
அரச குடும்பத்துக்கு எதிராக விமர்சிப்போருக்கு எதிராக கடுமையான தண்டனைக்குரிய சட்டங்கள் உள்ளன. அதனால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகங்கள் அரசரைப் பற்றி முழுமையாக செய்தி வெளியிட முடியாமல் கட்டுப்பாடுகள் தடுக்கின்றன.
தனது நீண்ட அரசாட்சியில், அரசர் பூமிபோன் அடுன்யடேட், நாடு தொடர்ச்சியாக பல அரசியல் ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பைக் காண வேண்டியிருந்தது.
ஒரு ராஜாங்க அதிகாரிக்கான திறமை, தாய்லாந்தின் சாதாரண மக்களைச் சென்றடையும் செல்வாக்கு ஆகியவை, அவர் அரியணை ஏறியபோது இருந்ததைவிட, அவரது மரணம் , மன்னராட்சிக்கு இன்னும் வலுச்சேர்த்திருக்கிறது என்றே சொல்லப்படுகிறது.












