கவின் நடித்த DADA திரைப்பட விமர்சனம்

பட மூலாதாரம், Olympia Movies
நடிகர்கள்: கவின், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, பாக்யராஜ்; இசை: ஜென் மார்ட்டின்; இயக்கம்: கணேஷ் கே. பாபு.
பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் நடித்த முதல் படம் லிஃப்ட் ஓடிடியில் வெளியாகி குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றது. இப்போது அவரது இரண்டாவது படமாக 'DADA' வெளியாகி இருக்கிறது.
Dada படத்தின் கதை இதுதான்: கல்லூரி நாட்களிலேயே காதலிக்கிறார்கள் மணிகண்டனும் (கவின்) சிந்துவும் (அபர்ணா). இதில் சிந்து கர்ப்பமாகிறார். இந்த கர்ப்பத்தை கலைக்கும்படி மணிகண்டன் கூறினாலும், அதை ஏற்க மறுக்கிறார் சிந்து. பிறகு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்கிறார்கள். இரு வீட்டினரும் இவர்களை ஒதுக்கிவைக்கின்றனர்.
திருமணத்திற்குப் பிறகும் பொறுப்பில்லாமல் ஊதாரியாகத் திரிகிறார் மணிகண்டன். இந்த நிலையில், சிந்துவுக்குக் குழந்தை பிறக்க, அதை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு எங்கோ சென்று விடுகிறார். அதுவரை பொறுப்பில்லாமல் திரிந்த மணிகண்டன், தன் குழந்தையை தனியாக வளர்க்க நேர்கிறது.
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து, சிந்துவை மறுபடியும் சந்திக்கிறார் மணிகண்டன். சிந்து ஏன் காணாமல் போனார், இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா என்பது மீதிக் கதை.
இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
"ஜனரஞ்சக படம்"
"சரியான அளவில் உருக்கம், நகைச்சுவை, காதல் ஆகியவற்றைக் கலந்து எடுக்கப்பட்ட படம்" என இந்தப் படத்தைப் பாராட்டியிருக்கிறது The Times of India நாளிதழ்.
"திரைப்படங்களில் அதீத உணர்ச்சிக்குவியலான காட்சிகளையும் காமெடியையும் ஒன்றாகக் கலப்பது என்பது ரொம்பவும் கடினமான காரியம். அதில் இயக்குநர் வெற்றிபெற்றுவிட்டார் என்றால், பார்வையாளர்களைத் தக்க வைக்க வேறு எதுவும் தேவையில்லை. கவின் நடித்திருக்கும் டாடா அம்மாதிரி ஒரு படம்.
கதாநாயகன் பொறுப்பில்லாதவனாக, ஊதாரியாக இருப்பது இந்தப் படத்தின் பலங்களில் ஒன்று. ஒவ்வொரு முறை நிதர்சனம் தாக்கும்போது, அந்தச் சூழ்நிலையிலிருந்து அவன் கஷ்டப்பட்டு மீண்டு வரும்போது, பார்வையாளர்கள் அவனுடன் ஒன்றிப்போகிறார்கள். துயர் மிகுந்த படத்தில் நகைச்சுவை இருப்பது அதன் அழுத்தத்தைக் குறைக்கும். அதைத்தான் டாடாவில் கணேஷ் கே பாபு செய்திருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"புது பரிமாணம்"
தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான காட்சிகள் நன்றாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. பல காட்சிகளை ரசிகர்கள் தங்களோடு பொருத்திப்பார்க்க முடியும்.
மணிகண்டனின் வேலை, அவன் சந்திக்கும் போராட்டங்கள், குழந்தையை வளர்க்கப்படும் சிரமம் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால், தமிழிலேயே எடுக்கப்பட்ட'Pursuit of Happiness' படத்தைப் போல வந்திருக்கும். ஆனால், இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் காதல் கதைக்குள் புகுவது வேறு ஒரு பரிமாணத்தை அளித்திருக்கிறது" என்கிறது The Times of India.
இந்து தமிழ் திசை நாளிதழும் இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறது. "சில குறைகள் இருந்தாலும் ஜாலியான, அதேசமயம் எமோஷனல் டிராமாவாக உருவாயிருக்கும் 'டாடா' குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்ற லேபிளுக்கு சளைத்ததல்ல" என அந்த நாளிதழின் விமர்சனம் குறிப்பிடுகிறது.
"முதல் படத்திற்கான சாயலே தெரியாத வகையில் நேர்த்தியான படைப்பை எமோஷனலாக கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷ்.கே. பாபு. காமெடி வேணுமா? காமெடி இருக்கு. காதல் வேணுமா? காதல் இருக்கு. எமோஷனல் வேணுமா? அதுவும் இருக்கு. என எல்லாவற்றையும் கலந்து கட்டி மிகையின்றி பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.
படம் தொடங்கி முதல் 20 நிமிடங்கள் பொறுமையாகவே நகர்கிறது. தொடர்ந்து வரும் 2 பாடல்களுமே ரிங் அடிக்காத தொலைபேசியை எடுக்க தூண்டுகிறது. கதையை கட்டமைக்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் இந்த நேரம் அயற்சி கொடுக்காமலில்லை. ஆனாலும், தொடர்ந்து படம் அதன் போக்கில் நகரும்போது, திரைக்கதை சூடுபிடிக்கிறது.

பட மூலாதாரம், Olympia movies
ஒரு தீவிரமான உணர்ச்சி மிக்க காட்சிக்குப் பிறகு, ஒரு நகைச்சுவைக் காட்சி வருவது மிகச் சிறப்பாக இந்தப் படத்தில் பொருந்திப்போயிருக்கிறது. இரண்டாவது பாதியில் பிரதீப் ஆண்டனியின் பாத்திரம் ரொம்பவும் ஜாலியாக அமைந்திருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு கதையில் பெரிய முடிச்சுகள் இல்லை. அடுத்து என்ன வரும் என்பதையும் ஊகிக்க முடிகிறது. ஆனால், பிரதீப் ஆண்டனி, விடிவி கணேஷ் போன்ற சில பாத்திரங்களைப் புதிதாகச் சேர்த்ததன் மூலம் தொடர்ந்து ஜாலியாக நகர்கிறது படம்.
பெற்றோர்களின் துணையின்றி காதலித்து, திருமணம் செய்யும் தம்பதிகள் வாழ்க்கையில் எப்படியான சிரமங்களை எதிர்கொள்கிறார்கள், அவர்களுக்குள் இருக்கும் ஈகோ, ஆட்டிடியூட், சில எமோஷனல்கள் என படத்தின் சிக்கலில்லாத கோர்வையும், அது கடத்தும் உணர்வும், 'உங்களால நாங்க நல்லாருக்கணும், ஆனா உங்களவிட நல்லாருக்கக் கூடாது' போன்ற வசனங்களும் ஈர்ப்பு.
கல்லூரி மாணவனாகவும், குழந்தைக்கு தந்தையாகவும் இரண்டு வெவ்வேறு பரிணாமங்களில், அதற்கேயுண்டான நடிப்பை கச்சிதமாக வழங்கியிருக்கிறார் கவின். இப்படத்தின் மூலம் தன்னை அழுத்தமான நடிகராக பதியவைக்கும் அவர், உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் பார்வையாளர்களை கலங்கடிக்கிறார். கவினுக்கு 'டாடா' நடிப்பில் புதிய மைல்கல்.
முதல் பாதியில் பெரிய அளவில் வேலையில்லை என்றாலும் அபர்ணா தாஸுக்கும், கவினுக்குமான கெமிஸ்ட்ரி பொருந்துகிறது. இரண்டாம் பாதியில் குறிப்பாக இறுதிக் காட்சியில் தன்னுடைய நடிப்பால் கவனம் பெறுகிறார் அபர்ணா.
என்ன பலவீனம்?
தந்தை - மகனுக்கான பாசம், உருகவைக்கும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் படம் ஸ்கோர் செய்தாலும், கவின் கதாபாத்திரத்தின் மனமாற்றம் அழுத்தமாக சொல்லப்படாமல் கடக்கிறது. வெறும் மான்டேஜ் காட்சி மூலம் நிகழும் மனமாற்றமும், குழந்தையை விட்டு அபர்ணா தாஸ் பிரிந்து செல்வதற்கு சொல்லப்படும் காரணமும் பலவீனம்" என்கிறது இந்து தமிழ் திசை.
நக்கீரன் இதழின் இணையதளமும் படத்தைப் பாராட்டியுள்ளது. "அடுத்தடுத்து நடக்கப் போகும் விஷயங்களை முன்கூட்டியே யூகிக்கும்படி இருந்தாலும் அதைக் கொஞ்சம் கூட அயற்சி ஏற்படாதவாறு அழுத்தமான காட்சி அமைப்புகள் மூலம் சிரிக்கவும், ரசிக்கவும், உருகவும் வைத்து பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு" என்கிறது நக்கீரன் இதழின் விமர்சனம்.

பட மூலாதாரம், Olympia Movies
"மிகவும் அரதப்பழசான ஒரு கதையை, அதுவும் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகும் என்று எளிதில் ஊகிக்கக்கூடிய வகையில் உள்ள ஒரு கதையை சிறப்பான திரைக்கதை மூலம் இரண்டே கால் மணி நேரம் அயற்சி ஏற்படாத வகையில் கூறி வெற்றி அடைந்துள்ளார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு. இவரது ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளும், மனதின் ஆழம் வரை சென்று வருடும் அழகான சென்டிமென்ட் காட்சிகளும் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தை கரை சேர்க்கின்றன.
குறிப்பாக, தந்தைக்கும் மகனுக்குமான சென்டிமென்ட் காட்சிகளும், நாயகனுக்கும் நாயகிக்குமான காதல் காட்சிகளும், மிக தத்ரூபமாக அமைந்து அதே சமயம் எதார்த்தமாகவும் அமைந்து பார்ப்பவர்களுக்கு நல்ல ஃபீல் குட் மூவியை கொடுத்திருக்கின்றன.
அடுத்தடுத்து என்ன நடக்கப் போகும் என்று முன்கூட்டியே ஆடியன்ஸ்க்கு தெரிந்திருந்தாலும் காட்சிகளுக்கு இடையே எந்த வகையிலும் போர் அடிக்காமல் அதேசமயம் உருகவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து இந்த ஆண்டின் கவனிக்கத்தக்க ஒரு படமாக இப்படத்தை கொடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு.

பட மூலாதாரம், Olympia movies
நாயகன் கவின் எப்போதும் போல் தனது யதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக காதல் காட்சிகளிலும் சென்டிமென்ட் காட்சிகளிலும் சின்ன, சின்ன முக பாவனைகள் மற்றும் அழகான வசன உச்சரிப்புகள் மூலம் கவனம் பெற்றுள்ளார். தனக்கு அதிக ஸ்பேஸ் இப்படத்தில் இல்லை என்றாலும் கொடுத்த கொஞ்ச நஞ்ச இடங்களிலும் சிறப்பாக ஸ்கோர் செய்து நடித்திருக்கிறார் நாயகி அபர்ணா தாஸ். இவரது மென்மையான நடிப்பு பார்ப்பவர்களுக்கு அனுதாபம் ஏற்படுத்துகிறது.
நாயகன் கவினின் நண்பர்களாக வரும் அருவி, வாழ் பட நாயகன் பிரதீப் ஆண்டனி மற்றும் முதல் நீ முடிவும் நீ புகழ் ஹரிஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து மனதில் பதிகின்றனர்.
ரசிகர்களைக் கவரும் நகைச்சுவை
குறிப்பாக முதல் பாதியை ஹரிஷும் இரண்டாம் பாதியை பிரதீப் ஆண்டனியும் தங்களது தோள் மேல் சுமந்து படத்தை தூண் போல் நின்று தாங்கிப் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரின் யதார்த்தமான நடிப்பு படத்திற்கு மிகவும் பிளஸ் ஆக அமைந்து பார்ப்பவர்களை சில முக்கியமான ட்ராஜடியான காட்சிகளைக் கூட சிரிக்க வைத்து அயற்சியை தவிர்க்கச் செய்துள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் பிரதீப் ஆண்டனி ரசிகர்களிடையே மிகுந்த கவனம் பெற்றுள்ளார்" எனப் பாராட்டியுள்ளது நக்கீரன் இதழ்.
ஊடக விமர்சனங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பழைய கதையாக இருந்தாலும் காட்சி அமைப்புகளின் மூலமும் தேர்ந்த பாத்திரப்படைப்புகள் மூலமும் நல்ல நடிகர் தேர்வு மூலமும் ரசிக்கத்தக்க ஒரு படமாக 'டாடா' இருக்கக்கூடும் என ரசிகர்கள் தரப்பில் பேசப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













