வட மாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் திருப்பூரே இயங்க முடியாதா? - பிபிசி கள நிலவரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
திருப்பூர் மாநகரில் வட மாநில தொழிலாளர்களும் தமிழ்நாட்டு தொழிலாளர்களும் மோதிக் கொண்டது போன்ற வீடியோ ஒன்று கடந்த ஜனவரி 26ஆம் தேதி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியிருந்தது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதற்கு எதிர்வினையாற்றி இருந்தனர்.
ஆனால் இந்தச் சம்பவம், வீடியோ வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. ஜனவரி 14ஆம் தேதி திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள ரியா பேஷன்ஸ் என்கிற நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு தான் இந்த சண்டைக்குக் காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து திருப்பூரில் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க திருப்பூர் மாநகர காவல்துறை இரு தனிப்படைகளை அமைத்துள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களுடன் இந்த வீடியோக்களை பகிர்ந்தவர்கள் யார் என சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி 30 ஆம் தேதி இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரஜத்குமார், பரேஷ்ராம் என்கிற இருவரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரையும் தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
திருப்பூரில் நிகழ்ந்த சம்பவம் தமிழ்நாட்டில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளன.
இந்த நிலையில் திருப்பூரில் தற்போது எத்தகைய சூழல் நிலவுகிறது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

மோதல் சமபவம் நடைபெற்ற திலகர் நகர் பகுதியில் ரியா பேஷன்ஸ் நிறுவனத்தின் முன்பும் மோதல் நடைபெற்றதாக வீடியோவில் பதிவாகியிருந்த வீதியிலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ரியா பேஷன்ஸ் நிறுவனத்தில் வழக்கம் போல பணிகள் நடைபெற்று வந்தன. மோதல் சம்பவம் தொடங்கிய இடமாகக் கருதப்படும் தேநீர் கடை தற்போது மூடப்பட்டுள்ளது.
ரியா பேஷன்ஸ் நிறுவனத்தினரை தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.
“இந்தப் பகுதியில் இதற்கு முன்பாக இத்தகைய சம்பவம் நிகழவில்லை. இங்கு அத்தகைய பதற்றமான சூழலுல் இருக்கவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற சம்பவம் ஒரு தனிப்பட்ட தகராறு. அதன் பின்னர் வேறு எந்த பிரச்னைகளும் இங்கு எழவில்லை” என அங்கு பணியிலிருந்த காவல் துறை அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வரும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வரும் மாவட்டங்களில் திருப்பூர் முதன்மையாக உள்ளது. ஜவுளி நிறுவனங்கள் தான் இங்கு பிரதானம் என்றாலும் கட்டுமானம், தூய்மைப் பணி என்று பல வேலைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் இருக்கலாம் என ஜவுளி நிறுவனத்தினரும் 2 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் இருக்கலாம் என தொழிற்சங்கத்தினரும் தெரிவிக்கின்றனர். ஆனால் இது தொடர்பாக எவ்வித துல்லிய தரவுகளும் கிடையாது.
தமிழ்நாட்டு தொழிலாளர்களைவிட, வட மாநில தொழிலாளர்கள் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்வதால் தான் அவர்கள் அதிக அளவில் வேலைக்கு இருப்பதாக கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இதில் முற்றிலும் உண்மை இல்லை என்ற வாதங்களும் வைக்கப்படுகின்றன.
வேலம்பாளையம் சம்பவத்தின் எதிர்வினை என்ன?
வேலம்பாளையம் சம்பவத்திற்குப் பிறகு வட மாநில தொழிலாளர்கள் அச்ச உணர்வுடன் இருப்பதாகச் சொல்கிறார் சனோஜ் குமார். பீகாரை பூர்வீகமாகக் கொண்ட சனோஜ் குமார். கடந்த 13 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்து வருகிறார். தற்போது மொபைல் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். திருப்பூரில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் இடையே தொடர்பு வளையம் வைத்துள்ளார் சனோஜ் குமார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “திருப்பூருக்கு வேலைக்கு வரும் வட மாநில தொழிலாளர்களுக்கு ஒரு சில நிறுவனங்கள் தான் தங்குமிடம் ஏற்படுத்தித் தருகின்றன. பெரும்பாலானோர் வாடகைக்கு வீடு எடுத்து சேர்ந்து வசித்து வருகின்றனர். 10க்கு 10 அறைக்கு ரூ.3,500 வரை வாடகை உள்ளது. நான்கு, ஐந்து நபர்கள் சேர்ந்து தான் வசித்து வருகிறார்கள்” என்று கூறுகிறார்.
“வட மாநிலங்களில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இல்லை. விவசாயம் தான் பிரதான வேலை. இதனால் படித்தவர்களுக்குக்கூட வேலை கிடைப்பதில்லை என்பதால் தான் பிற மாநிலங்களுக்கு வருகின்றனர்,” எனக் கூறிய அவர், இங்கு வரும் தொழிலாளர்களை இந்திக்காரர் எனச் சொல்வது தவறு. எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்னொரு விஷயம் வெளியில் அதிகம் தெரிவதில்லை. தமிழ்நாட்டிற்கு வருவதை விடவும் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற இடங்களுக்கு அதிகமான அளவில் தொழிலாளர்கள் செல்கிறார்கள். இதர தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தானே தமிழ்நாட்டில் உள்ளார்கள். வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை மட்டும் குறி வைத்து வருவதாகக் கூறுவது தவறு.
வேலம்பாளையம் சம்பவத்திற்குப் பிறகு வட மாநில தொழிலாளர்கள் ஒரு விதமான அச்சத்தில் தான் உள்ளனர். எனக்குத் தெரிந்த 20, 25 பேர் ஊருக்கே சென்றுவிட்டனர். வட மாநிலத்தவர் வந்து குறைவான சம்பளத்திற்கு வேலை பார்ப்பதால் தங்கள் வேலை போய்விட்டதாக ஒரு சிலர் வீடியோ வெளியிடுகிறார்கள்.
வாட்சாப்பில் வருகின்ற செய்திகளைப் பார்க்கையில் வருத்தமாக உள்ளது. தமிழ் நண்பர்கள் எல்லோரும் அவ்வாறு நினைப்பதில்லை. ஆனால் ஒரு சிலர் அவ்வாறு சொல்வது சரி இல்லை.
வட மாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் 10, 20 சதவிகிதம் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் பரவலாக 100, 200 ரூபாய்க்கு எல்லாம் யாரும் வேலை பார்ப்பதில்லை” என்றார்.

இந்தச் சிக்கல்களுக்கு ஏற்றுமதி நிறுவனங்களும் ஒரு காரணம் என்கிறார் சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சம்பத்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “வடமாநில தொழிலாளர்கள் புலம்பெயர்வது என்பது 20, 25 ஆண்டுகளாக நடந்து வருவதுதான். திருப்பூரில் ஜவுளி தொழில் நன்றாக இருந்தவரை இந்தச் சிக்கல்கள் வெளியில் தெரியவில்லை. கடந்த 5, 6 ஆண்டுகளாக தொழில் நலிவடையத் தொடங்கியபோது தான் இந்த விரிசல்களும் விரிவடைய ஆரம்பித்தன.
வேலை குறைவாக உள்ளதால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் வட மாநில தொழிலாளர்களை சற்று குறைவான ஊதியத்தில் வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள். சமீப நாட்களில் நிரந்தர உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை தராமல் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு வைக்கிறார்கள். ஒப்பந்த முறை என்பதால் இந்தத் தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லை. ஈ.எஸ்.ஐ, பி.எஃப், போனஸ் போன்ற பலன்களும் இல்லை.
வட மாநிலத்தவர்களால் தங்களுடைய வேலை பறி போகிறது என உள்ளூர் தொழிலாளர்கள் எண்ணுகிறார்கள். இது இரு தரப்பு தொழிலாளர்களின் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் நிறுவனர்களும் இதில் மிகப் பெரிய பங்கி வகிக்கிறார்கள். இந்தச் சிக்கல்கல் பெரிதாவதற்குள் அரசும் நிர்வாகமும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.” என்றார்.

வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் திருப்பூர் இயங்க முடியாத நிலை உள்ளதாகத் தெரிவிக்கிறார் திருப்பூர் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம்.
தொழிலாளர்களிடையே ஊதிய வேறுபாடு உள்ளது என்பதையும் அவர் மறுக்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “திருப்பூரில் மூன்று லட்சம் வட மாநில தொழிலாளர்கள் இருக்கிறார்கள். வட மாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் திருப்பூரே இயங்க முடியாது என்கிற நிலை உள்ளது. இதற்கு முக்கியமான ஒரு காரணம் உள்ளூரில் பெரும்பாலானவர்கள் படித்துவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டதால் ஜவுளித்துறை பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை.
கடந்த 15, 20 ஆண்டுகளாகவே இந்த நிலை உள்ளது. அந்த இடத்தை நிரப்பவே வட மாநில தொழிலாளர்கள் வருகிறார்கள். ஒரு காலத்தில் கேரளாவை சேர்ந்தவர்கள் திருப்பூரில் அதிகமாக இருந்தார்கள். இந்த இடம்பெயர்தல் என்பது காலம் காலமாக நடந்து வருகிறது.
வட மாநில தொழிலாளர்களை உடனடியாக திருப்பி அனுப்பிவிட முடியாது. அவர்களின் வருகையை ஒழுங்குபத்தி கட்டுப்படுத்தலாம். தமிழ்நாட்டிற்கு வருகின்ற வட மாநில தொழிலாளர்களை பதிவு செய்து, தரவுகளை சேகரித்து க்ரீன் கார்ட் போல அவர்களுக்கு ஏதாவது அடையாள அட்டை வழங்கினால் அது அவர்களுக்கும் பாதுகாப்பு நமக்கும் பாதுகாப்பு,” என்றார்.

வட மாநில தொழிலாளர் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்று சில பரிந்துரைகளை முன்னிறுத்தி சிஐடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சிஐடியூ தொழிற்சங்கத்தின் சம்பத் பேசுகையில், “தொழில் நிறுவனங்கள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சம வேலை நேரம், சம ஊதியம் வழங்க வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர் சட்டம் (1979) முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். அதைச் செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை, ஊதியம் என்பதுதான் இந்தச் சிக்கல்களின் அடிநாதமாக உள்ளது. அவற்றை சரி செய்துவிட்டால் இந்தச் பிரச்னை இருக்காது,” என்கிறார்.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் பிபிசி தமிழிடம் பேசியபோது, “திருப்பூரில் நிகழ்ந்தது அந்தத் தனிப்பட்ட ஒரு சம்பவம் தான். அத்தகைய சம்பவங்கள் வேறு எங்கும் நிகழவில்லை. இதில் தொடர்புடையவர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனால் திருப்பூரில் பதற்றம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. யார் தரப்பிலிருந்து எந்தக் கோரிக்கை வந்தாலும் அரசுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தைத் தவறாக யாரேனும் சித்தரித்தால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் ” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












