அதானி எடுத்த யூ டர்ன் - முதலீட்டாளர்களின் நெருக்கடி காரணமா?

பட மூலாதாரம், Reuters
நிதி திரட்டும் முயற்சியில், புதிதாக உருவாக்கிய தனது நிறுவனத்தின் பங்குகளை விற்பனைக்கு அறிவித்து இருந்த அதானி எண்டர்பிரைஸ் நிறுவனம், அந்த முடிவை திரும்பப்பெற்றுள்ளது.
2,348 ரூபாய்க்கு கிடைக்கும் பங்குகளை 3,112 ரூபாய் கொடுத்து வாங்கியவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா?
அதானி குழுமத்தின் அறிவிப்பு
கடந்த ஜனவரி 27ம் தேதி அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதற்காக தனது நிறுவனத்தின் ஒரு பங்கை 3,112 ரூபாய்க்கு எஃப்.பி.ஓ-வில் வாங்கலாம் என்று அந்தக் குழுமம் அறிவித்து இருந்தது.
ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்(FPO) மூலமாக 20,000 கோடி ரூபாய் திரட்டும் வேலையில் இறங்கியிருந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், திடீரென நேற்று இரவு அந்த முடிவில் இருந்து பின் வாங்கியது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதானி குழுமம் எஃப்.பி.ஓ-வில் அளித்திருந்த பங்குகள் முழுவதும் விற்பனை ஆகியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதானியின் முடிவுக்கு என்ன காரணம்?
"அதானி எண்டர்பிரைஸ் நிறுவனம் தனது கடன் சுமையை குறைப்பதற்காக கூடுதலாக பங்குகளை உருவாக்கி சந்தையில் நிதி திரட்டவே இந்த FPOவை அறிவித்து இருக்கும். ஆனால் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதன் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் புதிய பங்குகளை வாங்க விண்ணப்பித்து இருந்த முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கக்கூடும். இதன் காரணமாகவே அதானி நிறுவனம் தனது ஃஎப்.பி.ஓ-வை திரும்பப்பெற்றுள்ளது," என்று நிதி ஆலோசகரான விவேக் கர்வா பிபிசி தமிழிடம் கூறினார்.

பட மூலாதாரம், Facebook/Vivek Karwa
இது குறித்து விளக்கமளித்த அவர், "அதானி நிறுவனம் சார்பாக ஃஎப்.பி.ஓ-வில் அந்த நிறுவனத்தின் பங்குகள் 3 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதற்காக பங்குகளை வாங்க விரும்பிய முதலீட்டு நிறுவனங்கள் இந்த தொகையை அதானி குழுமத்திற்கு வழங்கி இருப்பார்கள். ஆனால் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சரிந்துள்ள நிலையில், அவர்களின் ஒரு பங்கின் விலை நேற்று சந்தை முடிந்தபோது 2,348 ரூபாய்க்கு கிடைத்தது. இந்த விலை தொடர்ந்து குறைந்து கொண்டே போகும் நிலையில், புதிய பங்குகளை யாரும் 3,000 ரூபாய் கொடுத்து வாங்கமாட்டார்கள்."
"எனவே பணத்தை கொடுத்த முதலீட்டாளர்களின் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவை கௌதம் அதானி எடுத்திருக்கக்கூடும்," என்று விளக்கினார்.
புதிய பங்குகளின் விற்பனை ரத்து செய்து பணத்தை திருப்பித் தருகிறேன் என்று சொல்லி இருப்பதன் மூலம், சந்தையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அந்நிறுவனம் பெற முயல்கிறது என்று கருதுவதாக அவர் கூறினார். இப்போது ஒத்தி வைத்து இருக்கும் நிதியை திரட்டும் இந்த முயற்சியை மீண்டும் அதானி நிறுவனம் மேற்கொள்ளும். ஆனால் மீண்டும் நடக்க 6 மாதம் முதல் 1 வருடம் ஆகும், என்று விவேக் கர்வா தெரிவித்தார்.
இன்று காலை 2,348 ரூபாயுடன் தொடங்கிய அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மாலை பங்குச்சந்தை முடிந்த போது 1,565 ரூபாயாக இருக்கிறது
FPO என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்(FPO) என்பது, ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் அறிமுகமான பின்பு நிதியை திரட்டுவதற்காக புதிதாக பங்குகளை உருவாக்கி சந்தைக்குள் கொண்டு வரும் நடைமுறை ஆகும். அதானி குழுமம் தனக்கு இருக்கும் கடன் தொகையை குறைப்பதற்காக புதிதாக பங்குகளை உருவாக்கி, மீண்டும் தனது பங்குகளை விற்கவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அறிவித்து இருந்தது.
இனிசியல் பப்ளிக் ஆஃபர்(IPO) என்பது, புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனம் பங்குச்சந்தையில் நுழையும் போது நிதியை திரட்ட தனது நிறுவனத்தின் பங்குகளை முதல்முறையாக விற்பனைக்கு அளிக்கும் நடைமுறை ஆகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












