சாதிச் சான்றிதழ் சர்ச்சை: இயக்குநர் வெற்றிமாறன் பேசியது சரியா? சாதி ஒழிப்பை சாத்தியமாக்க என்ன வழி?

- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழ்
பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் என்ற இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. அவர் கூறியது போல், 'சாதியற்றவர்' சான்றிதழைப் பெறுவது இன்றைய சூழலில் அவ்வளவு கடினமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ‘முதல் தலைமுறை சினிமா’ என்ற தலைப்பில் பேசிய இயக்குநர் வெற்றிமாறனிடம், கல்லூரி மாணவர் ஒருவர் ‘பள்ளி, கல்லூரிகளில் சாதியை கண்டிப்பாக குறிப்பிடுமாறு கூறுவது குறித்த உங்கள் கருத்து என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
"பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும்"
அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “இது எனக்கே பெரிய கொடுமையான விஷயம் தான். என் பிள்ளைகளுக்கு ‘No caste’ என்ற சான்றிதழை வாங்க முயற்சித்தேன். அவர்கள் தர மறுத்துவிட்டார்கள். அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்றார்கள். நீதிமன்றத்திற்கு சென்றேன். அங்கேயும் கூட, ‘அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. நீங்கள் எதாவது ஒரு சாதியை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். இந்து என இருக்கிறதே எதாவது ஒரு சாதியை போடுங்கள்’ என்று கூறிவிட்டனர்.
எனக்கு எதுவுமே வேண்டாம் என கூறினேன் ஒப்புக்கொள்ளவேயில்லை. நான் சாதி சான்றிதழ் கொடுக்காமல் இருப்பதற்கான வேலைகளைத்தான் பார்த்துகொண்டிருக்கிறேன். பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என்றுதான் நான் நினைக்கின்றேன்” என்றார்.
உடனே அங்கிருந்தவர்கள் கைத்தட்டியதும், இடைமறித்த வெற்றிமாறன், “ஒரு நிமிடம். இது வந்து யாருக்கு தேவையில்லையோ அவர்களுக்கு மட்டும். எனக்கு தேவையில்லை என நான் நினைக்கிறேன்.

"எல்லோரும் ஒரேயடியாக சாதிச் சான்றை தூக்கி எறிந்துவிட முடியாது"
உரிமையை வாங்கி கொடுக்கும் இடத்தில் அவர்கள் சாதிச் சான்றிதழை கொடுத்துதான் ஆக வேண்டும். சமூக நீதிக்காக சில இடங்களில் நீங்கள் அதை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். எனக்கு அது தேவையில்லை. நான் வேண்டாம் என கூறும் பட்சத்தில், ‘சரி இவன் வேணாம் என்கிறான். இவனை விட்டு விடுவதற்கான வழிவகை அதில் இருக்க வேண்டும்’ என நான் நினைக்கிறேன். ஆகவே, அப்படி பொதுவாக எல்லோரும் ஒரேயடியாக நாம் சாதிச் சான்றிதழை தூக்கி எறிந்துவிட முடியாது. சமூக நீதிக்கு அது தேவைப்படுகிறது” என்றார் இயக்குநர் வெற்றிமாறன்.
வெற்றிமாறனின் இந்தப் பேச்சில், "பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும்," என்ற முதல் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு சமூக ஊடகங்களில் பலரும் விவாதப் பொருளாக்கிவிட்டனர். "பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்காவிட்டால் சாதி ஒழிந்து விடுமா? இயக்குநர் வெற்றிமாறன் இப்படி பேசலாமா?" என்று பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிடத் தொடங்கிவிட்டனர்.

"சாதி ஒழிப்பை திருமணங்களில் இருந்தே தொடங்க வேண்டும்"
இதுகுறித்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணி என்கிற பிரபா கல்விமணியிடம் பிபிசி சார்பில் பேசினோம். கல்வியாளர், மனித உரிமைப் போராளி, சமூக ஆர்வலர் என்று பல பரிமாணங்கள் கொண்ட அவர், "சாதி ஒழிப்பு என்ற இலக்கை அடைவதற்கான வழியாக இயக்குநர் வெற்றிமாறன் ஒருவேளை அவ்வாறு பேசியிருந்தால் அது ஏற்கக் கூடியதாக இருக்காது," என்றார்.
"சாதி ஒழிப்பு பற்றி பேசியதும் பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்கப்படுகிறதே? அதனை நிறுத்துவதில் இருந்தே சாதி ஒழிப்பைத் தொடங்க வேண்டும் என்று பேசுவது உயர் நடுத்தர வர்க்க மனோநிலை. அது சரியல்ல. ஏனெனில், இந்த சமூகத்தில் சாதிய கட்டமைப்பை நிலைநிறுத்துவது திருமணங்கள்தான். காதல் திருமணம் தவிர்த்த ஏனைய நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அனைத்துமே சாதி அடிப்படையில்தான் செய்யப்படுகிறது. உண்மையில், சாதி ஒழிப்பு என்பதற்கான தொடக்கம் திருமணத்தில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும்," என்றார்.

"பழங்குடியினர் சாதி சான்று பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும்"
"பகுத்தறிவும், பெரியார், அம்பேத்கர் கருத்துகளும் பேசப்படும் தமிழ்நாட்டில் சாதிய கட்டுமானத்தில் இறுக்கம் சற்று தளர்ந்துள்ளது என்பது உண்மைதான். ஆனாலும், நம் சமூகத்தில் அதன் ஆதிக்கம் இன்றும் தொடரவே செய்கிறது. திருமணத்தின் மூலம் அதன் கட்டுமானம் கட்டிக் காப்பாற்றப்படுகிறது.
என்னைப் பொருத்தவரை, சாதி சான்றிதழ், குறிப்பாக, பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ்கள் கொடுக்கும் நடைமுறை இன்னும் எளிதாக்கப்பட வேண்டும். அதன் மூலம் இருளர் உள்ளிட்ட பழங்குடியினரும் கல்வி, வேலைவாய்ப்புகளை பெற்று சமூகத்தின் மைய நீரோட்டத்தில் ஒன்றிணையும் வாய்ப்பு ஏற்படும். அத்துடன், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். ஒரே பிரிவில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்புகள் தரப்பட வேண்டும்," என்று பேராசிரியர் கல்யாணி வலியுறுத்தியுள்ளார்.
'சாதி மற்றும் மதம் அற்றவர்' சான்றை முதன் முதலாக பெற்ற ஸ்நேகா கூறுவது என்ன?
'சாதியற்றவர்' சான்றிதழ் பெற இன்னும் போராடிக் கொண்டிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்டதும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி விட்டிருக்கிறது. அதுகுறித்து, நாட்டிலேயே முதன் முறையாக சாதியற்றவர் சான்றிதழைப் பெற்ற பெருமைக்குரிய திருப்பத்தூரைச் சேர்ந்த ஸ்நேகாவிடம் பேசினோம். சாதியற்றவர் சான்றிதழ் பெற விரும்பியது ஏன்? அதனைப் பெறுவதில் என்னென்ன சிக்கல்களை எதிர்கொண்டார்? அதன் மூலம் படைக்க விரும்பிய மாற்றம் என்ன? என்பன குறித்த கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
பேச்சைத் தொடங்கியதுமே, "சாதி சான்றிதழை ஒழிப்பதால் மட்டுமே சாதி ஒழிந்துவிடாது, அது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு மட்டுமே," என்று அவர் தீர்க்கமாக குறிப்பிட்டார்.

"தாய், தந்தையர் ஆகிய இருவருமே சாதி, மத நம்பிக்கை அற்றவர்களாக இருந்ததால் பள்ளி சான்றிதழ்களிலேயே சாதி, மதம் குறிப்பிடப்படவில்லை. 'மாணவரின் சாதி, மதத்தை குறிப்பிட வேண்டியது கட்டாயம் இல்லை' என்று 1972-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அரசாணையை சுட்டிக்காட்டி வாதிட்டதால் அது சாத்தியமானது.
ஆனால், வருவாய்த்துறையில் சாதியற்றவர் என்று குறிப்பிட்டு சான்றிதழை வாங்குவது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. சாதியற்றவர் சான்றிதழைப் பெற 2010-ம் ஆண்டு முதலே தொடர்ச்சியாக விண்ணப்பித்து வந்தேன். கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் என அதிகாரிகள் மட்டத்தில் அந்த விண்ணப்பம் ஏற்கப்படவில்லை.
சுமார் 10 ஆண்டுகள் தொடர் போராட்டத்தின் பலனாக, நாட்டிலேயே முதல் நபராக எனக்கு 2019-ம் ஆண்டு 'சாதி மற்றும் மதம் அற்றவர்' சான்றிதழ் கிடைத்தது. நான் அளித்த விரிவான விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அப்போதைய திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சாதியற்றவர் சான்றிதழை எனக்கு வழங்கினார்.
என்னை முன்மாதிரியாகக் கொண்டும், சிலர் நீதிமன்ற ஆணை வாயிலாகவும் இன்றைய நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் சாதியற்றவர் சான்றிதழை வாங்கியுள்ளனர்," என்று ஸ்நேகா கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












