மகான், கோப்ரா: விக்ரமுக்கு ஏற்படும் தொடர் பின்னடைவுக்கு என்ன காரணம்?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

விக்ரம் நடித்து வெளியாகியிருக்கும் வெளியாகியிருக்கும் கோப்ரா படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகிவரும் நிலையில், அந்தப் படத்தின் நீளத்தைக் குறைப்பதாகவும் படக் குழு அறிவித்துள்ளது. கதைகளைத் தேர்வுசெய்வதில் கோட்டைவிடுகிறாரா விக்ரம்?

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாகியிருக்கும் கோப்ரா படம் புதன் கிழமையன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வெளியானது. அந்தப் படத்திற்கு பெரும்பாலும் கலவையான விமர்சனங்களை வெளியாகிவருகின்றன. பெரும்பாலானவர்கள் படத்தில் வரும் காதல் காட்சிகளை குறை சொல்லியிருப்பதோடு, படத்தின் நீளமும் தாங்க முடியாத அளவுக்கு இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த படம் வெளியான போது 3 மணி நேரம் 3 நிமிட நீளத்திற்கு இருந்தது. இந்த நிலையில், வியாழக் கிழமையன்று படத்தின் நீளத்தை சுமார் 20 நிமிடங்கள் அளவுக்கு படக்குழு குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட அளவுடன் இன்று மாலை முதல் படம் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பது வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களே வருவதால், இரண்டாம் நாளில் வசூல் பாதியாகக் குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை முதல், படத்தின் நீளம் குறைக்கப்பட்டுவிட்டாலும், அது படத்திற்கு பெரிய உந்துதலை கொடுக்கும் என சொல்ல முடியாது.

விக்ரம் நடித்து இதற்கு முன்பாக வெளியான மகான் திரைப்படமும் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அந்தப் படம் ஓடிடியில் வெளியானதால், வசூல் ரீதியாக வெற்றிப் படமா என்பதை கணிக்க முடியவில்லை. அதற்கு முன்பாக வெளியான ஆதித்ய வர்மா படத்தில் கௌரவத் தோற்றத்தில் வந்துபோனார். அதற்கு முன்பு வெளியான கடாரம் கொண்டான் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் எனச் சொல்ல முடியாது.

அதற்கு முன் வெளியான சாமி -2 திரைப்படம் தோல்வியைச் சந்தித்தாலும், 10 எண்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட்ச் ஆகிய படங்கள் ஓரளவுக்கு வசூலில் சாதித்தன.

2000லிருந்து 2010க்குள் விக்ரம் நடித்த 20 படங்களில் தில், ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அருள், கந்தசாமி ஆகியவை வெற்றிப்படங்களாக அமைந்தன. காசி, சாமுராய், கிங், அந்நியன், மஜா போன்றவையும் கூட குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றன. ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத படங்களாகவும் அமைந்தன.

மாறாக, 2011லிருந்து தற்போது வரையிலாந கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் 13 படங்களில் மட்டுமே விக்ரம் நடித்திருக்கிறார். இவற்றில் சாமி - 2, ஐ, கடாரம் கொண்டான் ஆகியவை பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகின. இருந்தபோதும் இந்தப் 13 படங்களில் எந்தப் படமும் மிகப் பெரிய மெகா ஹிட் படங்களாக அமையவில்லை. எங்கே தவறு நேர்ந்தது?

"விக்ரமைப் பொறுத்தவரை மிக சின்சியரான நடிகர். ஒரு படத்தின் கதையைக் கேட்ட பிறகு, அந்தப் பாத்திரத்திலேயே ஊறிப்போய்விடுவார். மிகவும் பிடித்த கதைகளை மட்டும் தேர்வுசெய்து நடிப்பார். முன்பு அது மிகவும் கைகொடுத்தது. ஒருகட்டத்தில் தன் நடிப்புக்கு வாய்ப்பளிக்கக்கூடிய ஒரு கதையாக இருக்குமா என்று பார்க்க ஆரம்பித்தார். இதன் காரணமாகவே பல கதைகளைத் தவறவிட்டார். மாறாக, கரிகாலன் போன்ற டேக் - ஆஃப் ஆகாத ப்ராஜெக்ட்களை நம்பினார். அதற்குப் பிறகு, மிகப் பெரிய புராஜெக்டாக இருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கத் துவங்கினார். அதில்தான் பிரச்சனை ஆரம்பித்தது" என்கிறார் தமிழ்த் திரையுலகக் கூர்ந்து கவனித்துவரும் சினிமா விமர்சகர் பிஸ்மி.

ஆனால், விக்ரம் மட்டுமல்ல, விஜய், அஜித் உள்ளிட்ட எல்லாப் பெரிய நடிகர்களுமே தங்களுக்கு முக்கியத்துவமுள்ள பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறார்கள். இதன் காரணமாகத்தான் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியைச் சந்திக்கின்றன என்கிறார் பிஸ்மி.

"ஒரு காலகட்டத்தில் தயாரிப்பாளர் இயக்குநரிடம் கதை கேட்பார். பிறகு இருவரும் சேர்ந்து இந்தக் கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று பார்ப்பார்கள். பிறகு பட்ஜெட்டை முடிவுசெய்வார்கள். அந்த பட்ஜெட்டிற்குள் படமெடுப்பார்கள். ஆனால், தற்போது ஹீரோக்களில் இருந்துதான் எல்லாம் துவங்குகிறது. ஆகவே இயக்குநர்கள் ஹீரோக்களை இம்ப்ரஸ் செய்வதுபோல கதை சொல்கிறார்கள். அப்படி கதை சொல்லும் இயக்குநர்களை ஹீரோக்களே தயாரிப்பாளர்களோடு இணைக்கிறார்கள். ஹீரோ சொல்வதால் தயாரிப்பாளரும் ஒப்புக்கொள்கிறார். முடிவில் இப்படியான படங்கள் கிடைக்கின்றன," என்கிறார் பிஸ்மி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :