நட்சத்திரம் நகர்கிறது - ஊடக விமர்சனம்

நடிகர்கள்: காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், சிந்துஜா விஜி, சபூர் கல்லரக்கல், சார்லஸ் வினோத்; ஒளிப்பதிவு: ஏ. கிஷோர் குமார்; இசை: தேன்மா; இயக்கம்: பா. ரஞ்சித்.

இயக்குநர் என்ற வகையில் 'நட்சத்திரம் நகர்கிறது' பா. ரஞ்சித்திற்கு ஆறாவது படம். இதற்கு முன்பாக அவருடைய இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை பெரும் வெற்றிருந்த நிலையில், இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான படமாகவே இருந்தது.

சினிமாவில் நடித்து பெரிய கதாநாயகனாகிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வருகிறார் அர்ஜுன் (கலையரசன்). அங்கு நாடகக் குழு ஒன்றில் சேர்ந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபடும் அவர், அந்தக் குழுவில் இருக்கும் மற்றவர்களின் கருத்துகளோடு கடுமையாக மாறுபடுகிறார்.

இந்த நிலையில், அந்த நாடகக் குழுவின் சார்பில் அரசியல் நாடகம் ஒன்றை நடத்த திட்டமிடப்படுகிறது. இதையொட்டி நடக்கும் நிகழ்வுகளில் காதலர்களான ரெனே(துஷாரா)வும் இனியனும் (காளிதாஸ்) பிரிகிறார்கள். முடிவாக, அரசியல் நாடகம் நடத்தப்பட்டதா, அர்ஜுன் என்ன ஆனார், துஷாரா - காளிதாஸ் காதல் என்னவானது என்பதை சொல்வதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தில் சில நொடிகள் பிரச்சார நெடியை உணர்ந்தாலும் இந்த முன்னெடுப்பைப் பாராட்ட வேண்டும் என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழின் விமர்சனம். "இதுவரை பார்த்த காதல் படங்களிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி புதியதோர் உலகிற்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். அந்த உலகில் காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமானதாக இருக்கவில்லை. மாறாக அங்கே காதல் பாலின பேதங்கள், சாதி, மதங்கள், நிற வேறுபாடுகள் கடந்து மின்னுகிறது. குறிப்பாக அங்கே தன்பால் ஈர்ப்பாளர்களின் காதலும், திருநங்கையின் காதலும் தயக்கமில்லாமல் பேசப்படுகிறது. அங்கே ஆணுக்கு கட்டுப்பட்ட பெண்களையும், அழுது வடியும் பெண்களையும், மீட்பர் மனநிலை கொண்ட ஆண்களையும் பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்கும் இந்த புதியதோர் முன்னெடுப்பை பாராட்டியாக வேண்டும்.

படத்தில் ரசிக்க நிறையவே இருக்கிறது. விஷுவலாக படம் நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. காதலும், அதற்கான விஷுவல்ஸும், கூடவே வரும் இளையராஜாவின் பாடலும் என பல காட்சிகள் கவிதையாக விரிவது கண்களுக்கு விருந்து. ரஞ்சித்தின் ஆகப் பெரிய பலமே அவரது பிரசாரமில்லாத திரைக்கதை. ஆனால், இந்தப் படத்தின் முதல் பாதியில் 'காதல்ன்னா என்ன' என தொடங்கும் உரையாடல், வகுப்பறையில் அமர்ந்திருந்த உணர்வை கொடுத்தது. தொடர்ந்து வரும் சில காட்சிகள் பிரசார நெடியை கொடுத்தது நெருடல்," என்கிறது இந்து தமிழ் திசை.

மேலும், படத்தில் உள்ள சில பலவீனமான அம்சங்களையும் இந்த விமர்சனம் சுட்டிக்காட்டுகிறது. "படத்தின் நீளம் பார்வையாளர்களை ஒரு கட்டத்திற்கு பிறகு நாற்காலியிலிருந்து நெளியவைக்கிறது. நிறைய இடங்களில் பிரசார நெடி, நிறைய கதாபாத்திரங்கள் இருந்தபோதிலும் அதற்கான ஆழமான எழுத்தின்மை, வலுவற்ற காரணங்களால் நிகழும் ப்ரேக்-அப்புகள், உடனே நல்லவராக மாறும் கேரக்டர் என ஆங்காங்கே சில ஸ்பீட் ப்ரேக்கர்களும் உண்டு. தன்பால் ஈர்ப்பாளர்கள் காதலை இன்னும் கூட பேசியிருக்கலாம். ஆவணப் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டி, ஆவணப் படத்திற்கான உணர்வை கொடுக்கிறது."

இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருப்பதாகச் சொல்கிறது புதிய தலைமுறை இணையதளத்தின் விமர்சனம். "காளிதாஸ், துஷாரா, கலையரசன், ஹரி கிருஷ்ணன், வினோத், சுபத்ரா, ஹரீஷ், ஸ்டீஃபன் ராஜ் என படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்திருப்பவர்களும் தங்களின் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாடகத்திற்கான ஒத்திகைக் காட்சிகள், துஷாரா - காளிதாஸ் இடையேயான உரையாடல், கலையரசன் பேசும் தவறான புரிதல்களை எதிர்க்கும் காட்சிகள் என படத்தில் பல இடங்களில் அனைவரும் மிரட்டுகிறார்கள்" என்கிறது அந்த விமர்சனம்.

"இந்தப் படமே மிகப் பெரிய உரையாடலுக்கான களம் என்பதால் படத்தின் பல முக்கியமான விஷயங்களை வசனங்களின் மூலம் கடத்த முயன்றிருக்கிறார். அது படம் பார்க்கும்போது சிறிய சோர்வைத் தருகிறது. இன்னும்கூட சிலவற்றை உணர்வுரீதியாகக் கடத்தியிருக்கலாமே என்ற எண்ணம் எழுகிறது. உதாரணமாக கலையரசனின் மன மாற்றம் திடீரென ஒரு நொடியில் நிகழ்கிறது. அவனை அப்படி மாறச் செய்தது எது என்பதை உணர்வுரீதியாகச் சொல்லியிருக்கலாம்" என்கிறது புதிய தலைமுறை.

மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியமான படம் இது என்கிறது தினமணி நாளிதழ். குறிப்பாக படத்தில் வரும் பல வசனங்களும் காட்சிகளும் வெகுவாக ஈர்க்கின்றன என்கிறது இந்த நாளிதழின் விமர்சனம்."ஒரு காட்சியில் துஷாரா, ''நாம் எல்லோருமே சரியானவர்கள் அல்ல, தவறுகள் செய்துதான் மேம்பட்ட நிலையை அடைந்திருப்போம், வாழ்க்கை முழுக்க கற்றுக்கொண்டே தான் இருக்கப் போகிறோம்'' என்று சொல்வார். இப்படி படம் முழுக்க பல வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. படத்தின் தன்மையினால் மிக மெதுவாக நகர்வதுபோல ஒரு எண்ணம் தோன்றலாம்.

அலுவலகங்களில், பொதுவெளிகளில் பெண்கள் குறித்துத் தவறான கருத்துக்களை இன்றளவும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். முற்போக்காக சிந்திப்பவர்கள்கூட நமக்கென வரும்போது சுயநலமாக முடிவெடுப்போம். இப்படி பல விஷயங்களை இந்தப் படம் அலசுகிறது.

சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்துப் பேசுவதோடு ஒரு சராசரி குடும்பத்தில் ஜாதி எவ்வளவு தூரம் வேரூன்றி இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக பா.ரஞ்சித் பதிவு செய்திருக்கிறார்" என்கிறது தினமணியின் விமர்சனம்.

நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு ஊடகங்களில் வெளியாகிவரும் விமர்சனங்களைப் பார்க்கும்போது, வித்தியாசமான, அழுத்தமான ஒரு திரைப்படம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால், சில இடங்களில் வசனத்தின் மூலமே காட்சிகள் நகர்வது அலுப்பை ஏற்படுத்துகிறது என்பதும் புரிகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: