You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டைரி - ஊடக விமர்சனம்
நடிகர்கள்: அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து; ஒளிப்பதிவாளர்: அரவிந்த் சிங்; இசை: ரான் ஈதன் யோஹன்; இயக்கம்: இன்னாசி பாண்டியன்.
தொடர்ந்து த்ரில்லர் கதைகளில் கவனம் செலுத்திவரும் அருள் நிதியின் அடுத்த படம்தான் 'டைரி'. இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.
இந்தப் படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும்போது, "இயக்குனர் இன்னாசி பாண்டியன் கதையை மட்டும் வித்தியாசமாக யோசித்துவிட்டு திரைக்கதையில் தடம் புரண்டுவிட்டார்" என்று விமர்சித்திருக்கிறது தினமலர் இணையதளம்.
இந்தப் படத்தின் கதையைப் பொறுத்தவரை, "சப் - இன்ஸ்பெக்டர் போலீஸ் பயிற்சியை முடிக்கும் தருவாயில் இருப்பவர் அருள்நிதி. ஆவணக் காப்பகத்திலிருந்து முடிக்க முடியாத கேஸ்களில் ஒன்றை எடுத்து பயிற்சி பெறுபவர் விசாரிக்கலாம் எனச் சொல்கிறார் மேலதிகாரி. கண்ணை மூடிக் கொண்டு ஒரு கேஸைத் தேர்வு செய்கிறார் அருள்நிதி. ஊட்டியில் 16 வருடங்களுக்கு முன்பு நடந்த கொள்ளை, கொலை வழக்கு அது. அங்கு சென்று தன் விசாரணையை ஆரம்பிக்கிறார். ஒரு வழக்கை விசாரிக்கப் போய் மேலும் சில பல மர்மங்களுக்கான விடை தெரிகிறது. அவை என்ன என்பதுதான் இந்த 'டைரி'" என்று சொல்கிறது தினமலர்.
மேலும், "தனக்கான கதைகளைத் தேர்வு செய்வதில் அருள்நிதி தனி கவனம் செலுத்துவார் என்று பெயர் வாங்கியுள்ளார். இந்தப் படத்தையும் அப்படித்தான் தேர்வு செய்திருப்பார். ஆனால், இடைவேளை வரை அருள்நிதிக்கு திரைக்கதையில் ஒரு சில காட்சிகளை மட்டுமே வைத்து ஏமாற்றியிருக்கிறார் இயக்குனர். இயக்குனர் எழுதிய டைரியை அருள்நிதி முழுதாகப் படித்திருக்க மாட்டார் போலிருக்கிறது. அவருக்கான முக்கியமான பக்கங்கள் இல்லவே இல்லை. இடைவேளைக்குப் பிறகுதான் அருள்நிதி களத்தில் இறங்குகிறார்.
ஊட்டிக்குச் சென்ற பின் அருள்நிதி விசாரணையை ஆரம்பித்தவுடன் வேறு கோணத்தில் படம் செல்லும் என்று எதிர்பார்த்தால் ஊட்டி கொண்டை ஊசி வளைவு போல படம் சுற்றிச் சுற்றி போகிறது. படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம், கிளைமாக்சுக்கு முன்பாக நடக்கிறது. அது மட்டும் நாம் சிறிதும் எதிர்பார்க்காத ஒன்று. இதுவரை வந்த தமிழ் சினிமாவில் அப்படி ஒரு திருப்புமுனையை எதிர்பார்த்திருக்க மாட்டோம். அந்த திருப்புமுனை போலவே முழு படத்தையும் யோசித்திருந்தால் 'டைரி' நீங்கா நினைவைத் தந்திருக்கும்." என்று விமர்சித்திருக்கிறது தினமலர்.
சீனாவில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதைதான் 'டைரி' என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் தமிழ் இணையதளம். "தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய வகை "ஹாரர் த்ரில்லர்" படம் டைரி. சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் 1995 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் 375 என்னும் மர்மமான பேருந்து பற்றிய கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைதான் டைரி" அந்த இணையதளம்.
மேலும், "படத்தின் முதல் பாதியில், படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் பின்னணியை விவரித்து கதைக்குள் கொண்டு வருவதற்கு சிறிது நேரம் எடுத்துக் எடுத்துக்கொண்டாலும் அனைவரும் பேருந்தில் பயணம் செய்யத் தொடங்கும் அந்த நொடியிலிருந்து படத்தின் கதைக்களமும் வேகம் எடுக்கிறது.
படத்தின் இடைவேளையில் வரும் எதிர்பாராத திருப்பம் படம் "திரில்லரா அல்லது ஹாரர்" படமா என்று படம் பார்ப்பவர்களைக் குழம்ப வைக்கிறது. இடைவேளை முடிந்து சீட்டிற்கு வரும் பார்வையாளர்களை அந்த சீட்டின் நுனியிலேயே படம் முடியும் வரை அமர வைக்கிறார் இயக்குனர். அந்த அளவிற்கு இரண்டாம் பாதியில் வரும் திரைக்களம் மிகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது.
படத்தின் கிளைமாக்ஸ் வரை ஆங்காங்கே அவிழும் மர்ம முடிச்சுகள் பார்ப்பவர்களை பெரியளவில் வியக்க வைக்கின்றன. இதற்கெல்லாம் மேலாக படத்தின் கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட், ஒரு தரமான திரில்லர் படம் பார்த்த மனநிறைவை மக்களுக்குக் கொடுக்கிறது" என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம். "இந்த 'டைரி'யில் எழுத்தப்பட்டுள்ள கடைசி சில பக்கங்களின் திரைக்கதையே அதன் எடையைக் கூட்டியிருக்கிறது" என்கிறது இந்து தமிழ் திசை இணையதளத்தின் விமர்சனம்.
"படத்தின் மையக்கரு உண்மையில் சுவாரஸ்யமானது. குறிப்பாக, படத்தின் இறுதிக் காட்சி நம்மை நெகிழ வைக்கும் அதே சமயம் பேரார்வமூட்டுகிறது. படத்தின் பெரும் பலமே கடைசி ஒரு மணி நேரம்தான். அந்த ஒரு மணி நேரத்தை ஈடுக்கட்டுவதற்காகச் சுற்றி எழுப்பப்பட்ட சுவர்தான் மீதி நேர திரைக்கதை.
முதல் பாதி முழுக்க கதையோட்டத்திற்கு எந்த வகையிலும் நியாயம் சேர்க்காத காட்சிகளே நிறைந்து கிடக்கின்றன. தவிர, 'இது ஏன் இப்படி சம்பந்தமே இல்லாம நடக்குது' என்பதைப் போன்ற நிறைய கேள்விகளையும் லாஜிக் மீறல்களையும் எழுப்பி விடுகிறது. ஆனால், இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து நம்மை ஆச்சர்யப்படுத்திவிடுகிறது. படத்தின் கடைசி ஒரு மணி நேரம். முதல் பாதியில் லிமிடட் எடிஷன் போல அருள்நிதிக்கு குறைந்த காட்சிகளே ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் இரண்டாம் பாதியில் மிரட்டி விடுகிறார்.
போலீஸ் கட்டிங், கம்பீரமான உடல், வலிந்து சிரிக்கத் தெரியாத உடல்மொழி என தனது வழக்கமான நடிப்பை இந்தப் படத்திலும் பதியவைக்க அவர் தவறவில்லை. அறிமுக நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா மாரிமுத்து நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார். ஜெயப்பிரகாஷ், சாரா, தனம் உள்ளிட்ட பலரும் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளன்னர்.
ஸ்லோவாக நகரும் திரைக்கதையில் இடைவேளையில் வரும் திருப்பம், இரண்டாம் பாதி ட்விஸ்ட்டுகள் வேகமெடுக்க உதவுகின்றன. குறிப்பாக பேருந்துக் காட்சிகள் முழுமையாக பார்வையாளர்களை எங்கேஜ் செய்கின்றன. தற்போதைய கதாபாத்திரங்களை கடந்த காலங்களுடன் இணைத்திருந்த விதம் அதற்கான எழுத்து புதுமையாகவும் ஆழமாகவும் இருந்தது படத்தை வெகுவாக ரசிக்க வைத்தது.
ஊட்டி, மேட்டுப்பாளையத்தின் குளிரையும் விபத்தின் வீரியத்தையும், குறிப்பாக இரண்டாம் பாதியில் பேருந்துக்குள்ளேயே நகரும் காட்சிகளில் கேமரா கோணங்களால் கண்களை கட்டிப்போடுகிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். இசையமைப்பாளர் ரான் ஈதன் யோஹான் பின்னணி இசை ஹாரர் காட்சிகளில் பயத்தைக் கூட்டிருக்கிறது.
மொத்தத்தில் இந்த 'டைரி'யில் எழுத்தப்பட்டுள்ள கடைசி சில பக்கங்களின் திரைக்கதையே அதன் எடையைக் கூட்டியிருக்கிறது. இறுதிப் பக்கங்களின் சுவாரஸ்யம், விறுவிறுப்புக்காகவும் அத்தோடு இறுதியில் வரும் பாடல் ஒன்றுக்காகவும் 'டைரி'யை படித்துவிடலாம்" என்கிறது இந்து தமிழ் திசை.
திரைக்கதையிலும் உருவாக்கத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தமிழின் சிறந்த த்ரில்லர் படங்களின் வரிசையில் இந்த டைரி இடம்பெற்றிருக்கும் என்று விமர்சித்துள்ளது தினமணி இணையதளம்.
"பொதுவாக த்ரில்லர் படத்தில் பார்வையாளர்களுக்கு ஆங்காங்கே சில தகவல்களைச் சொல்லி ஒருவேளை இப்படி நடந்திருக்குமோ என்று சிந்திப்பதற்கு இடம் கொடுப்பார்கள். ஆனால், நடப்பது வேறாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி ஏதும் பெரிதாக இல்லாதது ஒரு குறை.
இரண்டு வெவ்வேறு காலகட்டங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட பயணிகளின் உடைகள், அவர்களின் பொருட்கள் ஆகியவற்றில் உள்ள வேறுபாட்டை தெளிவாக இயக்குநர் இன்னாசி காட்டியிருப்பது சிறப்பு. முதல் பாதி முழுக்க பேருந்து காட்சிகளே பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளன. பேருந்துக் காட்சிகள், பயணிகள் குறித்த விவரங்கள் இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்களுக்குப் பெரிதும் கைகொடுக்கின்றன. மெதுவாக நகரும் முதல் பாதியை ஒப்பிடும்போது இரண்டாம் பாதி ஆங்காங்கே திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக நகர்கிறது. இருப்பினும் த்ரில்லர் பட விரும்பிகள் முயற்சிக்கலாம்" என்கிறது தினமணியின் இணையதளம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்