You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லைகர் - ஊடக விமர்சனம்
நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோஹித் ராய், மைக் டைசன்; இயக்கம்: பூரி ஜெகன்நாத்.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' திரைப்படம். இந்தப் படம் குறித்த விமர்சனங்கள், தற்போது ஊடகங்கள் வெளியாகி வருகின்றன.
இதுவரை பலரும் பார்த்து சலித்த கதையை பட்டி டிங்கரிங் செய்து 'லைகர்' படத்தை எடுத்து இருக்கிறார்கள் என்கிறது 'cineulagam' இணையதளம்.
இந்தப் படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும்போது, "மும்பையில் ஒரு நகரத்தில் டீ கடை வியாபாரம் செய்து வருபவர்கள் லைகர் (விஜய் தேவரகொண்டா) மற்றும் அவரின் அம்மா ரம்யா கிருஷ்ணன். தந்தை இல்லாமல் மும்பையில் வாழ்ந்து வரும் லைகருக்கு MMA-வில் சேர்ந்து பெரிய ஃபைட்டர் ஆக வேண்டும் என்பது ஆசை. அதன்படி KBD என்ற சண்டைப் பயிற்சி கூடத்தில் சேரும் விஜய் தேவரகொண்டா தனது திறமையை நிரூபித்து கோச்சின் கவனத்தை பெறுகிறார்.
அதே சமயம் கதாநாயகி அனன்யா பாண்டேவும் விஜய் தேவரகொண்டாவின் திறமையை பார்த்து காதலில் விழுகிறார்.
அவர்கள் இருவரும் காதலித்து சுற்றி வருவது ரம்யா கிருஷ்ணனுக்கு பிடிக்காமல் போக, விஜய் தேவரகொண்டாவின் கனவு பாதிக்கப்படும் என சொல்லி அவரை பிரிக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் அடங்காத அனன்யா பாண்டே விஜய் தேவரகொண்டாவை அவரின் பிறந்தநாள் அன்று சந்திக்க அழைக்கிறார். அந்த இடத்தில் அனன்யா பாண்டேவின் அண்ணன், விஜய் தேவரகொண்டாவிற்கு திக்குவாய் என்ற உண்மையை கூற அனன்யா பாண்டே விஜய் தேவரகொண்டாவின் குறையை கண்டு அவரை கழற்றி விடுகிறார்.
அன்றிலிருந்து தனது கனவில் கவனம் செலுத்தும் விஜய் தேவரகொண்டா சண்டையில் அனைவரையும் தோற்கடித்து தேசியளவில் சாம்பியனாக மாறுகிறார். பின் அவரின் வாழ்க்கையில் சில திடுக்கிடும் திருப்பங்களை சந்திக்க நேர்க்கிறது. விஜய் தேவரகொண்டாவின் International சாம்பியனாகும் ஆசை நிறைவேறியதா? காதலி அனன்யா பாண்டேவுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே லைகர் படத்தின் மீதி கதை" என்கிறது Cineulagam இணையதளம்.
'விமர்சனங்களை அள்ளிக்குவிக்கும் படம்'
இந்தப் படம் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது இந்தியா டுடே இணையதளம்.
"லைகர் படம் துவங்கும்போது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில்தான் இருக்கிறது. தெருச் சண்டைக் காட்சிகள் நம் கவனத்தைக் கவர்கின்றன.
ஆனால், அவ்வளவுதான். அனன்யாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையிலான காதல் காட்சிகளால், படத்தின் திரைக்கதை கீழ்நோக்கிப் பயணிக்கிறது. ஒவ்வொரு தடவையும் கதாநாயகி திரையில் தோன்றும்போது, நிராசையோடு பெருமூச்சு விட தோன்றுகிறது.
இதற்கே பொறுமை இழந்து விட கூடாது. இன்னும் இருக்கிறது. இரண்டாம் பாதி துவங்கி 10 நிமிடங்களிலேயே க்ளைமாக்ஸை நெருங்கி விடுகிறது லைகர். ஆனால், இயக்குநர் அதை நம்ப மறுக்கிறார். இதனால், எதுவுமே இல்லாமல் கதையை இழுத்துக்கொண்டே போகிறார். அமெரிக்காவுக்குச் சென்று மைக் டைசனை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த அறிமுகத்தின் மூலம் படம் உச்சத்தை நோக்கிச் செல்ல வேண்டும். மாறாக, நகைச்சுவைக் காட்சியைப் போல மாறி விடுகிறது.
பூரி ஜகன்நாத்தின் திரைக்கதை எவ்வித உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஒன்றிரண்டு காட்சிகளைத் தவிர, எல்லா காட்சிகளும் மிக சாதாரணமாக இருக்கின்றன. வேறு மசாலாப் படங்களில் இருந்து எடுத்து வைக்கப்பட்ட காட்சிகளைப் போலவே இருக்கின்றன. படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போது, கஷ்டப்பட்டு முன்னேறுபவனின் கதையைப் போல இருந்தது. ஆனால், படத்தைப் பார்க்க உட்கார்ந்த பிறகுதான், இது காதல் கதையுமில்லை, விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட படமும் இல்லை, ஏழை பணக்காரனாக மாறும் படமுமில்லை என்று தெரிகிறது.
உடல் ரீதியாக விஜய் தேவரகொண்டாவின் மாற்றம் பாராட்டத்தக்கது. ஆனால், திக்குவாயாக நடிப்பது பல சமயங்களில் ரொம்ப அதிகமாக இருப்பதைப் போலப்படுகிறது. இன்னமும் அர்ஜுன் ரெட்டி பட நினைவாகவே இருப்பதைப்போல படுகிறது. ரம்யா கிருஷ்ணன் அதிகம் சத்தம் போடுகிறார். அனன்யா பாண்டேவை சுத்தமாக மறந்து விடலாம். மைக் டைசன் என்ற மிகப் பெரிய ஆளுமை, எப்படி இந்தப் பாத்திரத்திற்கு ஒப்புக்கொண்டார் என்பது தெரியவில்லை" என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.
'அடம்பிடித்து பழைய கதையை எடுத்த இயக்குநர்'
பழைய கதையை இன்னும் பழசாகத்தான் எடுத்து வைப்பேன் என இயக்குநர் பூரி ஜெகநாத் அடம்பிடித்தது தான் லைகர் படத்திற்கு வந்த பெரிய சிக்கல் என்கிறது tamil.filmibeat இணைய தளத்தின் விமர்சனம்.
"சமீபத்தில் வெளியான கார்த்தியின் 'விருமன்', தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' உள்ளிட்ட படங்களே எட்டு மணிக்குத்தான் போட்டாங்க. விஜய் தேவரகொண்டாவின் டப்பிங் படம் நான்கு மணிக்கே வெளியாகி இருக்கே, மிரட்டப் போகிறது என்று போய் உட்கார்ந்த ரசிகர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்து விட்டது 'லைகர்' திரைப்படம் என்றுதான் சொல்ல வேண்டும்.
திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தால் பழைய படத்தை திருப்பி எடுத்து வைத்தாலும் பார்க்க ரசிகர்கள் ரெடியாக இருக்கும் போது, பழைய கதையை இன்னும் பழசாகத்தான் எடுத்து வைப்பேன் என இயக்குநர் பூரி ஜெகநாத் அடம்பிடித்ததுதான் 'லைகர்' படத்திற்கு வந்த பெரிய சிக்கல்.
'எம். குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி' படத்தில் நதியா ஒரே ஒரு காட்சியில் 'எனக்கொரு மகன் இருக்கான்டா, சிங்கம் மாதிரி'ன்னு ஜெயம் ரவிக்கு பில்டப் கொடுப்பார். அதே விஷயத்தை இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், 'சிங்கத்துக்கு புலிக்கும் பிறந்த மகன் டா இவன், சூறாவளி டா, காட்டாறுடா' என ஃபாரின் வில்லன் வரை பில்டப் கொடுத்து எரிச்சலூட்டுகிறார். 'லைகர்' படத்தில் இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் 'ஜெயிலர்' படத்தில் பார்த்து யூஸ் பண்ணுங்க நெல்சன் என தியேட்டரிலேயே கமெண்ட் அடிக்கின்றனர்.
பாலிவுட்டின் இளம் நடிகை அனன்யா பாண்டே விஜய் தேவரகொண்டாவை பார்த்து மயங்கி துரத்தி துரத்தி காதலிப்பதும், பின்னர் அவருக்கு திக்குவாய் என தெரிந்ததும் விலகி செல்வதும், இந்தியாவில் அவரது அண்ணனை அடித்து ஜெயித்ததும் மீண்டும் ரகசியமாக காதல் கொள்வதும் என வராத நடிப்பை வா வான்னு கூப்பிட்டு நடித்த மாதிரி நடித்துள்ளார்" என்று விமர்சித்துள்ளது tamil.filmibeat இணையதளம்.
"கொஞ்சம் தைரியம் வேண்டும்"
"தைரியம் இருப்பவர்கள் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்க முடியும்" என மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது ஏபிபி நாடு இணையதளம்.
சண்டைக் காட்சிகளில் மட்டுமே விஜயை ரசிக்க முடிகிறது. கிளாமருக்காக மட்டுமே கொண்டுவரப்பட்ட காதலி அனன்யா பாண்டே, நடிப்பில் ஓவர் ரியாக்ஷன் கொடுத்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறார். ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரத்தை பார்க்கும்போது ராஜ மாதாவுக்கா இந்த நிலைமை என்றே தோன்றியது. மைக் டைசன் உட்பட எந்தக் கதாபாத்திரமும் படத்திலும் தங்கவில்லை, மனசிலும் தங்கவில்லை.
பூரிஜெகன்நாத் இப்படி ஒரு கதையை எடுத்திருப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. படத்தின் ஆரம்பத்தில் அவர் பெயர் வரும்போது 'எனக்கு கதை சொல்ல வராது.. ஏதோ ட்ரை பண்றேன்' என்பார். படம் முடித்து வெளியே வரும்போது, அவர் "இந்தக் கதையை சொல்லாமலே இருந்திருக்கலாம்" என்ற எண்ணமே வந்தது.
படத்தின் ப்ளாட்டே அவ்வளவு வீக்காக இருந்தது. சரி, திரைக்கதை நன்றாக இருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு படத்தை பார்க்க முயற்சித்தால், பார்த்து பழகிபோன காட்சிகளை சுவாரசியம் இல்லாமல் கொடுத்து சோதித்து விட்டார். வசனங்களை கேட்கும் போது... 'டேய் சும்மா இருடா..' என்ற வார்த்தையையே திரையரங்கம் முழுக்க கேட்க முடிந்தது. சண்டைக்காட்சிகளில் மெனக்கெடல்கள் தெரிந்தாலும், அதற்காக உருவாக்கப்பட்ட காரணங்கள் நம்மை நெளிய வைத்து விடுகின்றன
பாடல்கள் ஏதோ ரசிக்கும் படியாக இருந்தாலும், பின்னணி இசை.. இதுதான் பிஜிஎம்மா என்றே கேட்க வைக்கிறது. ஒளிப்பதிவும் ஓகே ரகம்தான். இவ்வளவையும் மீறி நீங்கள் இந்தப் படத்தை பார்க்க சென்றால் 200 ரூபாய் உங்களுக்கு வெறும் தண்டம்தான். தைரியம் இருக்குறவன் தியேட்டருக்கு வா." என்கிறது அந்த இணையதளம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்